நீ
தித் துறையின் உயர் பீடத்திலேயே ஊழல் என்பது மீண்டும் பேசப்படும் பொருளாகியிருக்கிறது. அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து நீக்கும் அளவுக்கு, நீதிபதி நாராயண் சுக்லாவின் செயல்பாடுகள் இருந்தன என்று உச்ச நீதிமன்றம் நியமித்த மூன்று தலைமை நீதிபதிகளைக் கொண்ட குழுவின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. உத்தர பிரதேசத் தலைநகர் லக்னோவில் ஜிசிஆர்ஜி நினைவு அறக்கட்டளை மருத்துவக் கல்லூரி மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள நீதிபதி நாராயண் சுக்லா அனுமதித்திருந்தார். அதில் முறைகேடு நடந்த தாக எழுந்த புகார்கள் தற்போது நிரூபணமாகியிருக்கின்றன.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சிக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.அக்னிஹோத்ரி, மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி பி.கே.ஜெய்ஸ்வால் ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழு, நீதிபதி நாராயண் சுக்லா வைப் பதவிநீக்கம் செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
இந்த வழக்கு இப்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் பரிசீலனையில் இருக் கிறது. இந்தச் சூழலில் நீதிபதி சுக்லா தானாகவே பதவியிலிருந்து விலகியிருக்கலாம் அல்லது ஓய்வளித்துவிடும்படி கேட்டிருக்கலாம். இவ்விரண்டையும் அவர் செய்யாததால், நாடாளுமன்றத் தில் அவர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார். அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிடலாம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
இன்னொரு மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கில் சிபிஐ தாக்கல்செய்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளைப் போலவே இந்த விவகாரத்திலும் நடந்திருக் கிறது. அதாவது, ஒரு அதிகாரத் தரகர் ஒரு மருத்துவக் கல்லூரி அறக்கட்டளையை அணுகி, சாதகமான தீர்ப்பைப் பெற்றுவிட தனக்குத் தெரிந்த ஒடிசா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியைவிட்டு வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் பேசச் சொல்வதாகக் கூறிய தாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுதான் நீதித் துறையில் புயலையே கிளப்பியது. மருத்துவக் கல்லூரி விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மரபை மீறி தன்னுடைய தலைமையிலான அமர்வுக்கே மாற்றிக்கொண்டார், சில ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன என்றுகூடக் கூறப்பட்டது. இதற்குப் பிறகுதான் நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிருபர்களைச் சந்தித்து தலைமை நீதிபதி தொடர்பாகத் தங்களுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
நீதிபதி சுக்லா மீதான குற்றச்சாட்டுகள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். நீதிபதி மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து அவரைப் பதவியிலிருந்து நீக்குவது என்பது சிக்கலான நடை முறைகளைக் கொண்டது. பதவியிலிருக்கும் நீதிபதியை நாடாளுமன்றத் தீர்மானம் மூலம் நீக்குவது மிகவும் துயரமானது. ஆனால், துறையை சுத்தப்படுத்த அப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயங்கக் கூடாது. நீதித் துறைக்குள்ளேயே மேற்கொள்ளப்படும் அகத் தூய்மை முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவையே!