ம
த்திய அரசு 2017-18 நிதியாண்டுக்குத் தயாரித்திருக்கும் பொருளாதார ஆய்வறிக்கை, ஒரே சமயத்தில் நம்பிக்கைக்கும் எச்சரிக்கைக்கும் வழிவகுத்துள்ளது. 2018-19 நிதியாண்டில், நாட்டின் ஜிடிபி இந்த நிதியாண்டில் உள்ள 6.75%-லிருந்து 7.75% ஆக உயரும் என்கிறது இந்த அறிக்கை. நம்பிக்கையூட்டும் அம்சங்களுக்குக் காரணம், அரசு எடுத்த ‘சீர்திருத்த நடவடிக்கைகள்’தான் என்கிறார், அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன். கடந்த ஜூலை 1 முதல் அமலுக்குக் கொண்டுவந்த ஜிஎஸ்டி (பொதுச் சரக்கு - சேவை வரி), மற்றும் வங்கிகள் - பெருந்தொழில் நிறுவனங்களின் இரட்டைப் பற்று - வரவு பற்றாக்குறையைப் போக்க எடுத்த நடவடிக்கைகளையே ‘சீர்திருத்தங்கள்’ என்கிறார். வங்கிகளுக்குச் சுமையாகிவிட்ட வாராக் கடன்களை வசூலிக்க திவால் நடைமுறைச் சட்டத்தைப் பயன்படுத்துவது, வங்கிகளின் மூலதனத்துக்கு வலு சேர்க்க மேலும் நிதி ஒதுக்குவது என்ற நடவடிக்கைகளையும் சீர்திருத்தங்களின் பகுதியாகவே பார்க்க வேண்டும்.
அரசின் இந்த நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில் ஏற் பட்டுவரும் பொருளாதார மீட்சியால் இந்தியாவின் ஏற்றுமதியும் அதிகரித்துவருகிறது. இந்த சாதகமான அம்சங்கள் நன்கு பயன் படுத்திக் கொள்ளப்பட வேண்டும். அதே வேளையில், சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் விலையை எண்ணெய் உற்பத்தி - ஏற்றுமதி நாடுகள் உயர்த்திவருகின்றன. எனவே, சாதக மான அம்சங்களின் துணையுடன், பாதகமான இத்தகைய விலை உயர்வால் பாதிப்பு நேரிடாமல் பொருளாதாரத்தை வளப்படுத்த வேண்டும்.
இந்திய பங்குச் சந்தையில் சில நிறுவனங்களின் பங்கு மதிப்பு திடீரென உச்சத்துக்குச் செல்கிறது, இது இப்படியே நீடிக்காது. இதனால், முதலீட்டாளர்கள் விழிப்புடன் இருந்து சந்தையின் போக்கைக் கண்காணிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார் அர்விந்த் சுப்பிரமணியன். வரவு - செலவு நிர்வாகத்தில் தன்னுடைய முன்னுரிமைப் பட்டியலை அரசு திருத்திக்கொள்ள வேண்டும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. அதில் முக்கியமானது, அரசின் கொள்கைகளைத் தொடர்ந்து நம்பகத்தன்மையுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்பது. மக்களவைத் தேர்தல் நெருங்குகிறது என்பதற்காக நிறைவேற்ற முடியாத இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளக் கூடாது என்றும் எச்சரிக்கிறது ஆய்வறிக்கை.
பொதுச் சரக்கு சேவை வரி நிர்வாகத்தை நிலைப்படுத்தவும், அரசு வங்கிகளுக்கு முதலீட்டை வலுப்படுத்தவும், வேளாண்மைத் துறையை வலுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். பருவ மழை மாற்றத்தால் வேளாண் துறையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும். பாசன வசதி இல்லாத வானம் பார்த்த பூமியில் வேளாண் துறை வருமானம் 20% முதல் 25% வரையில் குறையும் என்பதால், விவசாயிகளின் துயர் களைய நவீன பாசனத் தொழில்நுட்பங்களைப் பரப்புரை செய்ய வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் கல்வியை விரிவுபடுத்துவதும் அரசின் முக்கிய முன்னுரிமைகளாக இருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் இரண்டு காரணிகள் தனியார் முதலீடு, ஏற்றுமதி ஆகியவை. அரசு இவ்விரண்டிலும் கவனம் செலுத்துவது அவசியம்!