தலையங்கம்

சுகாதாரக் குறியீட்டெண் பட்டியல் உணர்த்தும் முக்கியச் செய்திகள்!

செய்திப்பிரிவு

நி

தி ஆயோக் அமைப்பு தயாரித்திருக்கும் முதலாவது சுகாதாரக் குறியீட்டெண் பட்டியலில் கேரளம், பஞ்சாப், தமிழ்நாடு ஆகியவை மிகச் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பிஹார், ஒடிஷா, மத்திய பிரதேசம் ஆகியவை பட்டியலின் கடைசி வரிசையில் இடம்பெற்றுள்ளன. கேரளம், பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களும் எழுத்தறிவு, ஊட்டச்சத்துள்ள உணவு, ஆரம்ப சுகாதாரம் ஆகியவற்றுக்கு அதிகம் செலவழிக்கும் மாநிலங்கள் என்பதால் இவை அதிகப் புள்ளிகளைப் பெற்றிருப்பதில் வியப்பேதும் இல்லை.

மக்களுக்குச் சுகாதார வசதிகளை அளிப்பது இன்னமும் நம்முடைய அரசியல் கட்சிகளின் முக்கிய விவாதப் பொருளாக மாறவில்லை. இது தேர்தல் முடிவையும் பாதிப்பதில்லை. சமச்சீரற்ற நிலையில் மாநிலங்கள் இருப்பதையே தரவுகள் தெரிவிக்கின்றன. நன்றாகச் செயல்படும் மாநிலங்களைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டினால் பின்தங்கியிருக்கும் பிற மாநிலங்களும் போட்டியிட்டு இந்தக் குறியீட்டெண்ணில் முன்னேற முயற்சிகளைச் செய்யும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

மத்திய பட்ஜெட்டில் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, முதல் சுகாதாரக் குறியீட்டெண் வெளியிடப்பட்டிருக்கிறது. முறையான மருத்துவமனைகளில் பிறந்த குழந்தை கள் எத்தனை, நோய் வந்துவிட்டால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் தனியார் மருத்துவமனைகளுக்கு மக்கள் செலவழிப்பது எப்படி என்ற தரவுகள் சுகாதாரக் குறியீட்டெண்ணுக்காகத் திரட்டப்படுகின்றன. கிராமப்புற மக்களால் சுகாதார வசதிகளை எப்படி அணுக முடிகிறது, சிகிச்சைகளை எப்படிப் பெற முடிகிறது என்ற தரவுகளும் திரட்டப்படும். இதைக் கொண்டு சுகாதார வசதிகளை அளிப்பதில் மாநிலங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பது இனி தீவிரமாக ஆராயப்படும்.

தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலை, சுகாதார வசதிகளின் நிர்வாக முறைமை, நிதி பெறுவதில் உள்ள இடர்ப்பாடு ஆகிய அம்சங்களும் இணைக்கப்பட்டு, சுகாதாரக் குறியீட்டெண் தயாரிக்கப்பட வேண்டும் என்கிறது நிதிஆயோக். மத்திய அரசும் மாநில அரசுகளும் தங்களுடைய மொத்த நிதி ஒதுக்கீட்டில் சுகாதாரத் துறைக்கு மேலும் அதிகமாக ஒதுக்க வேண்டும். தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் உடல் நலக்குறைவு தொடர்பான நிதி இடர்ப்பாட்டுப் பிரச்சினையை ஓரளவுக்கு நிவர்த்திசெய்யும். ஆரம்ப நிலை சுகாதார வசதிகள், நோய்த் தடுப்பு தொடர்பான நிர்வாக அமைப்பு மேம்படவும் உதவும். அனைவருக்கும் சமமான மருத்துவ வசதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும், அதற்குத் தேவைப்படும் நிதியை வரிவிதிப்பு மூலம் அரசு திரட்ட வேண்டும் என்பதை வளர்ந்த நாடுகளும் சில வளரும் நாடுகளும் தங்களுடைய சொந்த அனுபவங்கள் வாயிலாக உணர்த்துகின்றன. நிதி ஆயோக்கின் இந்த சுகாதாரக் குறியீட் டெண் சுகாதாரம் வழங்கலை இந்த வகையில் மேம்படுத்துமானால் அது நல்ல பலனைத் தரும்!

SCROLL FOR NEXT