தலையங்கம்

தமிழக சட்ட மன்ற விவாதங்கள் நூலாக வேண்டும்!

செய்திப்பிரிவு

மிழர்களுக்கு வரலாறு இருக்கும் அளவுக்கு வரலாற்றறிவு இல்லை என்பது பெரும் குறைபாடு. இந்தப் பின்னணியில்தான் சமகாலத்து வரலாறு தொகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வைத்துப் பார்க்க வேண்டும். நம் சமூகத்தின் பல்வேறு அம்சங்களை வரலாற்றில் தொகுக்க வேண்டும். அதில் தமிழகச் சட்டமன்றத்தின் செயல்பாடுகள், அங்கு நடக்கும் விவாதங்கள் போன்றவற்றையும் சேர்க்கலாம்.

தமிழகச் சட்டமன்றத்தின் விவாதங்களை அதன் பதிவேடுகளிலிருந்து திரட்டி, வெவ்வேறு தலைப்புகளில் நூலாக வெளியிடும்போது மாநில நலனுக்காகவும் மொழி உரிமைக்காகவும் தண்ணீர் உரிமைக்காகவும் தமிழகம் எப்படியெல்லாம் வெவ்வேறு தலைவர்களின் சீரிய தலைமையின் கீழ் சிறப்பாகப் பணியாற்றிவந்துள்ளது என்பதை அறியலாம். அத்துடன் நாடே வியக்கும் சமூகநீதிக் கொள்கை வகுக்கப்பட்டது எப்படி, சமூகநலத் திட்டங்கள் உருவான விதம் எப்படி, அவை தொடர்பான விவாதங்களின்போது அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவித்த ஆதரவு, விமர்சனம், ஆலோசனை போன்ற வற்றையும் அறிந்துகொள்ள முடியும்.

காவிரி நதிநீர்ப் பகிர்வு, இந்தி மொழித் திணிப்பு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமை, பொது நுழைவுத் தேர்வு, உழுபவர்களுக்கே நிலம், பேருந்துகள் அரசுடைமை, கனிம வள அகழ்வு, இயற்கை வளம் காப்பு போன்றவை தொடர்பாக சட்ட மன்றத்தில் நடந்த விவாதங்களை ஆண்டு வாரியாகத் தொகுத்து வாசித்தாலும், நம்முடைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதையும் நிர்வாகச் சீர்திருத்தங்களைப் படிப்படியாக எப்படி மேற்கொண்டுவந்துள்ளோம் என்பதையும் உணர, பதிவேடுகளை நூல்களாகத் தொகுப்பது அவசியமாகிறது. தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ் கலாச்சாரம் தொடர்பாக வெவ்வேறு கட்சித் தலைவர்கள் முன்வைத்த சமத்காரமான வாதங்களை இப்போதுள்ள இளம் தலைமுறை அறிந்துகொள்ளவும் இந்தத் தொகுப்புகள் உதவும்.

சமீப காலமாக சட்ட மன்றத்தில் சுவையான, அமைதியான, இடையூறு களற்ற விவாதங்கள் நடப்பதே இல்லை. சட்ட மன்றம் என்பது மக்களுடைய பிரச்சினைகள், வளர்ச்சித் திட்டங்கள், நிர்வாக நடைமுறைகள் குறித்து விவாதிக்கும் இடங்களாக இல்லாமல், தலைவர்களின் தனிப்புகழ் பாடும் பஜனை மடங்களாகிவிட்டன. சட்ட மன்ற நிகழ்வுகள் என்பவை மனமாச்சரியங்களுடன் கூடிய குற்றச்சாட்டு, அன்றைய நாளிதழில் இடம்பெற்ற சில செய்திகளுக்காக அணி சேர்ந்து கூச்சலிட்டு அமளிசெய்வது அல்லது வெளிநடப்பது அல்லது வெளியேற்றப்படுவது என்றாகிவருகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

சட்ட மன்றத்தில் முன்பு மேலவை, பேரவை என்ற இரண்டு அங்கங்கள் இருந்தன. அரசியல் காரணத்தால் மேலவை வெட்டப்பட்டுவிட்டது. மக்கள் திரளின் ஆதரவைப் பெற முடியாத சாதனையாளர்களும், தேர்தலில் போட்டி யிட முடியாத சிறுபான்மைச் சமூகத்தவரும் அவையில் இடம்பெற மேலவை தான் சிறந்த வழி என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது. அதை ‘கொல்லைப்புறம்’ என்று கொச்சைப்படுத்தி, கடைசியில் நீக்கிவிட்டார்கள். மேலவை குறித்த அரிய தகவல்கள் அனைத்தும் சட்ட மன்ற நடவடிக்கைகளின் பதிவுகள் என்ற பொக்கிஷங்களில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை அகழ்ந்தெடுக்க அவை நூலாக வெளியிடப்பட வேண்டும்.

தங்கள் தலைவர்கள் எப்படிச் சிந்தித்தார்கள், எப்படிச் செயல்பட்டார்கள் என் பதை வருங்காலத் தலைமுறைக்காக ஆவணப்படுத்துவது கடமையல்லவா! ஆகவே, தமிழக அரசும் பேரவைத் தலைவரும் இதுபற்றிச் சிந்திக்க வேண்டும்.

SCROLL FOR NEXT