தலையங்கம்

வங்கி மோசடிகளுக்கு எப்போது முடிவு?

செய்திப்பிரிவு

நா

ட்டின் இரண்டாவது மிகப் பெரிய வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (பி.என்.பி.) ரூ.11,500 கோடி அளவுக்கு நடந்துள்ள மோசடி, வங்கித் துறையில் நடைபெறும் முறைகேடுகளின் உச்சமாக மாறியிருப்பதோடு நம்முடைய ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தையும் பட்டவர்த்தனமாக்கி இருக்கிறது.

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும் அவரது உறவினர்களும் பி.என்.பி. வங்கிக் கிளையில் போலியான உத்தரவாதக் கடிதத்தைப் பெற்று அதன் மூலம் பல வங்கிகளில் கடன் வாங்கியிருக்கிறார்கள். மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டார்கள். வழக்கம்போல கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது அரசு. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தில் தரப்பட்ட கடன்களைத் திரும்பப் பெற முடியாததால் வங்கிகள் வாராக் கடன் சுமையில் சிக்கியதாகக் குற்றம்சாட்டிவரும் பாஜக அரசு, வங்கிகளை மீட்க, ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் புது மூலதனம் செலுத்தப்படும் என்று அறிவித்த கொஞ்ச நாட்களில் வெளியாகியிருக்கும் இந்த மோசடியானது ஆட்சி மாறினாலும் காட்சி இன்னமும் மாறவில்லை என்பதையே உணர்த்துகிறது.

வங்கிகளை மீட்பதற்காக மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் தொகையில் பி.என்.பி. வங்கிக்கு ரூ.5,473 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது. அதேபோல், இந்த மோசடியில் பெரும்பாலானவை 2017-18 காலகட்டத்தில்தான் நடந்திருக்கின்றன என்று சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்திருக்கிறது. ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுப்பதாக பாஜக அரசு கூறிவரும் நிலையில் வெளியாகியிருக்கும் இந்த மோசடி முக்கியமான சில ஓட்டைகளைச் சுட்டிக்காட்டுகிறது.

நீரவ் மோடியின் நிறுவனம் திடீரென அமோக வளர்ச்சி கண்டதுடன், உலக அளவிலும் அந்நிறுவனம் முக்கிய இடத்தைப் பிடித்தது. வழக்கமான வங்கி நடைமுறைகள் வாயிலாக அல்லாமல், வேறு வழிகளில் இந்நிறுவனம் பிற வங்கிகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் பெற மும்பை பி.என்.பி. ஊழியர்கள் உதவியிருக்கிறார்கள். டிஜிட்டல் வழியில் பரிமாற்றங்களை மேற்கொண்டால் அரசின் கண்ணிலிருந்து எதுவும் தப்பாது என்று அரசு கூறிவருகிறது. ஆனால் இந்த மோசடி டிஜிட்டல் வழியில்தான் நடந்திருக்கிறது.

வங்கித் துறையின் வாராக் கடன் பிரச்சினைக்கே தொழிலதிபர்களுக்கும் வங்கி அதிகாரிகளுக்கும் ஏற்படும் 'வணிகக் கூட்டுதான்' காரணம் என்று கூறப்பட்டது. அந்தக் கூட்டு நாம் நினைத்ததைவிடப் பெரியது என்பதையே இந்த மோசடி புலப்படுத்துகிறது. ஏற்றுமதியாளர்களுக்குக் கடன் தருவது, கடனுக்கு சார்பாக நிற்பது ஆகியவற்றில் இப்போதுள்ள நடைமுறைகளில் உள்ள குறைகளை ரிசர்வ் வங்கி உடனடியாக ஆராய்ந்து ஓட்டைகளை அடைக்க வேண்டும். வங்கித் துறை மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட, விசாரணைகளை விரைந்து மேற்கொள்வதுடன் தவறிழைத்தவர்களுக்குக் கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும். இனி இப்படி ஒரு தவறு நிகழாத சூழலை எடுக்கப்படும் நடவடிக்கைகள் உறுதிப்படுத்த வேண்டும்!

SCROLL FOR NEXT