சி
ங்கப்பூர் அரசு தமிழ் மீது கொண்டிருக்கும் அக்கறைக்கு மற்று மொரு உதாரணமாக, சமீபத்தில் சிங்கப்பூர் தகவல் தொடர்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள சொல்வளக் கையேட்டைக் குறிப்பிட வேண்டும்! தமிழை நான்காவது ஆட்சிமொழியாகக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் அரசின் இந்த முயற்சி, கலைச்சொல்லாக்கத்தில் தீவிர கவனம் செலுத்தாமல் இருக்கும் தமிழக அரசையும் கல்வித் துறையையும் சுய விமர்சனம் செய்துகொள்ளத் தூண்டியிருக்கிறது.
ஆட்சித் துறையினர், ஊடகத் துறையினர் ஆகியோரின் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் 4,000 ஆங்கில வார்த்தைகளுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்களைத் தொகுத்து, சிங்கப்பூர் அரசின் சொல்வளக் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்கில அகரவரிசையிலும், அரசாங்க அமைப்புகள், கல்வி, சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழும் இச்சொற்கள் தொகுக்கப் பட்டுள்ளன. பிப்ரவரி 3-ல் வெளியிடப்பட்ட இந்தக் கையேட்டின் மின்னூல் வடிவம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஒருசில நாட்களிலேயே பல்லாயிரக்கணக்கானோரைச் சென்றுசேர்ந்திருக்கிறது.
தமிழ் வளர்ச்சித் துறை 1957-லிருந்து தமிழ்நாட்டில் ஆட்சிச் சொல்லகராதியைப் பதிப்பித்துவருகிறது. இதுவரை இந்த அகராதி ஏழு பதிப்புகள் மட்டுமே கண்டிருக்கிறது. எனினும், இடைப்பட்ட இந்த நீண்ட கால இடைவெளியில், அரசு ஊழியர்களிடமும் பொதுமக்களிடமும் அந்த அகராதி போதிய அளவில் சென்றுசேர்ந்திருக்கிறதா என்றால் சந்தேகமே. இன்றைக்குக் கலைச்சொல்லாக்கங்களை இணையத்தின் வழியாக லட்சக்கணக்கானோரிடம் மிக எளிதாகக் கொண்டுசேர்க்க முடியும். தமிழக அரசு இதுகுறித்து யோசிக்க வேண்டும்.
தமிழிணைய மின்னூலகத்தில் சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி, ஆங்கிலம்-தமிழ் அகராதி உள்ளிட்ட பல அகராதி கள் பதிவேற்றப்பட்டுள்ளன. எனினும், அந்த அகராதிகள் உரிய கால இடைவெளியில் புதிய சொல்லாக்கங்களை உள்ளடக்கும் தொடர்பணியைச் செய்யாமல் முடங்கிவிட்டன என்பது வருத்தத்துக்குரியது. வார்த்தைகளைத் தேடிப் பொருள் அறிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ள கலைச் சொல்லகராதி பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லை.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சட்டத் தமிழ் அகராதியொன்றைத் தொகுத்தது. இந்த அகராதி மறுபதிப்பு செய்யப்பட்டுவந்தாலும்கூட, புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டு விரிவுபடுத்தப்படவில்லை. மணவை முஸ்தபா மருத்துவச் சொல்லகராதியைத் தொகுத்து வெளியிட்டார். அவருடைய படைப்புகள் நாட்டுடைமை ஆனதையொட்டி, அந்த அகராதி தமிழிணைய மின்னூலகத்தில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், மருத்துவத் துறை யினரை அந்நூல் எந்த அளவுக்குப் போய்ச்சேர்ந்திருக்கிறது? நா. முகம்மது செரீபு தொகுத்த வரலாற்றுச் சொற்களுக்கான அகராதி எத்தனை பேரைச் சென்றடைந்திருக்கிறது? தமிழின் மீது ஆர்வம்கொண்ட எத்தனையோ அறிஞர்கள் பல்லாண்டு கால உழைப்பில் உருவாக்கிக் கொடுத்த கலைச்சொல்லாக்கங்களைக்கூட நாம் கண்டுகொள்ளாமலே இருக்கிறோம்.
இனிமேலாவது, அரசு நிர்வாகம் தொடர்பான வலைதளங்களில் ஆட்சிச் சொல்லகராதியையும் பதிவேற்றத் தொடங்க வேண்டும். உரிய கால இடைவெளியில், அதைத் திருத்தி விரிவாக்கவும் வேண்டும். ஆட்சித் துறை மட்டுமின்றி ஒவ்வொரு துறை சார்ந்தும் கலைச்சொல்லாக்க முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். பண்டிதர்கள் மனநிலையில் இந்தச் சொல்லாக்கங்கள் நடைபெறாமல், அனைவருக்கும் போய்ச்சேரும் வகையில் கூடிய வரையில் எளிமையான சொல்லாக்கங்கள் செய்யப்பட வேண்டும். ஏற்கெனவே கல்வி நிறுவனங்களும் கல்வியாளர்களும் உருவாக்கிய கலைச்சொல் அகராதிகளை மேம்படுத்தி மக்களிடம் பரப்ப வேண்டும். அச்சில் மட்டுமின்றி இணையத்திலும் அவை கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும். இன்றைய தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மட்டும் ஓரளவு உயிர்ப்புடன் இருக்கும் நிலையில், இந்தப் பணிகள் நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்று நம்புவோம்!