ச
ஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ‘பத்மாவத்’ திரைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், அப்படத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று ராஜபுத்திரர் அமைப்புகள் நடத்திய வன்முறைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. ஹரியாணாவின் குருகிராம் நகரில் பள்ளிப் பேருந்தைக் குறிவைத்து, கர்ணி சேனை எனும் ராஜபுத்திர அமைப்பினர் நடத்திய கல்வீச்சுத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பேருந்துக்குள் குழந்தைகள் உயிருக்குப் பயந்து அலறிய காட்சி கள் அனைவரையும் பதைபதைக்க வைத்திருக்கின்றன. கர்ணி சேனையினரை ஊக்குவிக்கும் வகையிலேயே பாஜக தலைவர்களும் பாஜக ஆளும் மாநில அரசுகளும் பேசிவந்ததால், அந்த அமைப்பினர் வரம்பு மீறிச் செயல்பட்டுள்ளனர்.
இந்தத் திரைப்படத்துக்கு எதிர்ப்புக் கிளம்பிய உடனே மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் மீண்டும் மறு தணிக்கை செய்து சில காட்சி மாற்றங்களைச் செய்தது. படத்தின் தலைப்பும் ‘பத்மாவதி’ என்பதிலிருந்து ‘பத்மாவத்’ என்று மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றமும் திரைப்படத்தைத் திரையிட அனுமதி தந்ததுடன், மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டியது. இவ்வளவுக்குப் பிறகும் பாஜக ஆளும் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இப்படத்தைத் திரையிடும் சூழலை அம்மாநில அரசுகள் உருவாக்கவில்லை. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக யார் அச்சுறுத்தினாலும், அணி திரட்டினாலும் சட்டம் - ஒழுங்கு கெடாமல் பாதுகாக்க வேண்டிய தனது கடமையை நான்கு மாநில அரசுகளும் கைவிட்டுவிட்டதையே இது காட்டுகிறது.
ஒரு திரைப்படத்தைத் திரையிட்டால் ஒரு சாரார் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று கூறி, திரையிட அனுமதி மறுக்க முடியாது என்று ‘எஸ்.ரங்கராஜன் எதிர் பி.ஜகஜீவன் ராம் (1989) வழக்’கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது. ‘பத்மாவத்’ திரைப்படத்தைத் தங்கள் மாநிலத்தில் திரையிடக் கூடாது என்று குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் தடைசெய்தபோது நீதிமன்றம் அந்தத் தடைக்குத் தடை விதித்து, திரைப்படத்தைத் திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை மாநில அரசுகள் புறக்கணிக்கும் என்பது நிச்சயமானதால்தான் ‘இந்திய மல்டிபிளக்ஸ் சங்கம்’ தன்னுடைய திரையரங்குகளில் ‘பத்மாவத்’ திரையிடப்பட மாட்டாது என்று அவ்விரு மாநிலங்களிலும் கூறியது. குஜராத்தின் அகமதாபாதில் இரண்டு வணிக வளாகங்கள் தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.
2008-ல் ‘ஜோதா அக்பர்’ என்ற இந்தித் திரைப்படம் திரையிட்டபோதுதான் ‘கர்ணி சேனா’ என்ற ராஜபுத்திரர் அமைப்பு உருவானது. அதில் அக்பரின் மனைவியாக ராஜபுத்திரப் பெண்ணைச் சித்தரித்தது தங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது என்று அந்த அமைப்பினர் ஆட்சேபம் எழுப்பினர். தங்கள் இனத்துக்கு எதிரான அவமானங்களை முன்கூட்டியே ஊகித்துத் தடுக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாகக் கருதிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது இந்த அமைப்பு. ‘பத்மாவத்’ திரைப்படம் அதன் காட்சியமைப்பு, படப்பிடிப்பு, பாடல் போன்றவற்றுக்காக நினைவில் நிற்பதைவிட, ஒரு அமைப்பின் வன்முறையை மாநில அரசுகள் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்தன என்பதற்காகவே இனி வரும் காலங்களிலும் நினைவுகூரப்படும்!