தலையங்கம்

நேதன்யாகுவின் வருகையும் மேற்காசிய சமரச நடவடிக்கையில் இந்தியாவின் கடப்பாடும்!

செய்திப்பிரிவு

ஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த வாரம் இந்தியா வந்திருந்தது இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நடவடிக்கை என்றே சொல்ல வேண்டும். இஸ்ரேலுடன் தூதரக உறவு 1992-ல் தொடங்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமராக இருந்த ஏரில் ஷரோன் 2003-ல் இந்தியா வந்தார். முதன்முதலாக இஸ்ரேல் பிரதமர் ஒருவர் இந்தியா வருகை தந்த முக்கிய நிகழ்வு அது. 2015-ல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இஸ்ரேல் சென்றது அடுத்த நிகழ்வு. 2017-ல் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் சென்றார். இந்தியப் பிரதமர் இஸ்ரேலுக்குச் சென்றது அதுவே முதல் முறை. இந்நிலையில், நேதன்யாகுவின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது.

நேதன்யாகுவும் மோடியும் தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகிவிட்டதைச் சில நிகழ்ச்சிகள் வெளிப்படுத்தின. மரபுகளைப் புறந்தள்ளி நேதன்யாகுவைப் பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். குஜராத்தில் பட்டம் விடும் நிகழ்ச்சியில் நேதன்யாகு தம்பதியர் மோடியுடன் கலந்துகொண்டனர். மும்பையில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட சபாட் அவுஸ் என்ற யூதர்கள் குடியிருப்பையும் நேதன்யாகு பார்வையிட்டார். வேளாண்மை, நீர் மேலாண்மை, தொழில்நுட்பப் பரிமாற்றம், ராணுவத்துக்குத் தேவைப்படும் ஆயுதங்கள் - தளவாடங்கள் உற்பத்தி ஆகிய துறைகளில் பல்வேறு கூட்டுத் திட்டங்களை இரு நாடுகளும் அடையாளம் கண்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையில் இப்போது வெளிப்படையான உறவு நிலவுகிறது. இந்தச் சூழலில் பாலஸ்தீனர்களுக்கு நியாயம் கிடைக்க இஸ்ரேல் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. பாலஸ்தீனப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்றது. 2017 ஜூலையில் மோடி இஸ்ரேலுக்குச் சென்றிருந்தபோது, இஸ்ரேல் - பாலஸ்தீன சமரச நடவடிக்கைகள் குறித்து முக்கியத்துவம் தரப்படவில்லை என்பது நினைவுகூரத்தக்கது. ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை ஐநா சபையில் கொண்டுவந்த ஒரு தீர்மானம் நிராகரித்தது. அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருந்தது. இது ஏன் என்பது இரு பிரதமர்களும் தனியாக பேசியபோது விளக்கப்பட்டது.

வெகு விரைவிலேயே பாலஸ்தீனப் பகுதிக்கு மட்டும் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் பிரதமர் மோடி. ஜெருசலேம் நகரில் உள்ள புனிதத் தலங்களின் பாதுகாவலரான ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவையும் ஜோர்டான் சென்று பார்க்கவிருக்கிறார். ஜோர்டான் மன்னர்தான் சமரச முயற்சிகளில் தீவிரம் காட்டிவருகிறார். அவரும் விரைவிலேயே இந்தியா வரவிருக்கிறார். இந்தப் பயணம் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண இந்தியா ஆக்கபூர்வ பங்களிக்க உதவும். இஸ்ரேலுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ளும் அதே வேளையில், மேற்காசிய சமரச நடவடிக்கைகளில் தனக்குள்ள உறுதியை இந்தியா தளர விடக் கூடாது. எந்த நாடு வலுவானது, எந்த நாடு செல்வாக்கற்றது என்று பார்க்காமல், சர்வேதச அரங்கில் இதுவரை எடுத்துவரும் நியாயமான நிலைகளுக்கேற்பவே அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும்!

SCROLL FOR NEXT