“தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கணக்குகளைத் தணிக்கை செய்யும் அதிகாரம் நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளருக்கு (சி.ஏ.ஜி.) இருக்கிறது” என்ற உச்ச நீதிமன்றக் கருத்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உற்சாகம் இழப்பார்கள், தங்களுடைய தொழில் நடவடிக்கைகளில் அரசின் தலையீடு அதிகரிப்பதாகக் கருதி வேறு நாடுகளுக்குப் போய்விடுவார்கள் என்று தொழில்துறையினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
தொழில்துறையினருக்குத் தேவைப்படும் நிலம், நீர், மின்சார இணைப்பு, சாலைகள், தொலைத்தகவல் தொடர்பு வசதி, வங்கிக்கடன் எல்லாவற்றையும் அரசுகள்தான் வழங்குகின்றன. எந்த நிறுவனமும் தன்னுடைய மூலதனத்தோடு சேர்த்து, பங்குகள் விற்பனை மூலமும் வங்கிக் கடன்கள் மூலமும் மத்திய, மாநில அரசுகள் தரும் மானியங்களைக் கொண்டும்தான் தொழில் தொடங்குகின்றன. தொழில்துறையினரால் உற்பத்தி, வேலைவாய்ப்புகள் பெருகுகின்றன. ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. மேலும், அரசுக்கு நேர்முக, மறைமுக வரி வருவாயும் கிடைக்கிறது. இந்தக் காரணங் களுக்காகத்தான் அவர்களுக்குப் பல்வேறு சலுகைகள் தரப்படுகின்றன.
தொழில் நிறுவனங்களுக்கு அரசு தரும் கடனுதவி, மானியம், பிற வகைச் சலுகைகள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்திலிருந்து பெறப் படுபவைதான். நாட்டின் பெரும்பாலான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தும் அரசு பெருநிறுவனங்களுக்குக் கொட்டிக்கொடுக்கிறது. நாடு முழுவதையும் திறந்த சந்தையாக அரசு மாற்றிவிட்டிருக்கிறது. அப்படி இருப்பினும், பெருநிறுவனங்களுக்கு லாப வேட்கை தணிந்த பாடில்லை. தொழில் தொடங்க மாநில அரசுகள் குறைந்த விலைக்கு வாங்கித் தரும் நிலங்களை, சிறிது காலம் கழித்து அதிக விலைக்கு மற்றவர்களுக்கு விற்பது, உற்பத்தியையும் விற்பனையையும் குறைத்துக் காட்டுவது, வெளிநாடுகளில் விற்பனை செய்துவிட்டு அந்தப் பணத்தை அங்கேயே முதலீடுசெய்வது, இயற்கை வளங்களை அனுமதியுடனும் அனுமதியின்றியும் அளவுக்கதிகமாகச் சுரண்டுவது என்று அவர்களின் லாப வேட்டை எல்லையின்றிப் போய்விட்டது. இதற்கெல்லாம் கடி வாளம் போட வேண்டுமென்றால் தணிக்கை என்பது மிகமிக அவசியம்.
தொலைத்தகவல் தொடர்புத் துறையில் நடந்த அதிகாரத் துஷ்பிரயோகம், ஊழல் போன்றவற்றை நாம் மறந்துவிட முடியாது. “வருவாய் இழப்புதான், ஊழல் இல்லை” என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சமாளிக்கப்பார்த்தன. இப்போதும்கூட அந்த ஊழல் வழக்கு விசாரணை எப்போது முடியும் என்பது நிச்சயமில்லாமல் இழுத்துக்கொண்டே போகிறது. இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டு பெருநிறுவனங்கள் முகம்சுளிக்கின்றன.
எல்லாச் செயல்களும் சட்டத்துக்கு உள்பட்டு, வெளிப்படையாக நடக்கும்பட்சத்தில் தணிக்கைகளுக்கு ஏன் அஞ்ச வேண்டும்? உற்பத்தி முறைகள், கொள்முதல் கொள்கைகள் ஆகியவற்றில் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் குற்றம் கண்டுபிடித்தாலும்கூட அவற்றைப் பரிசீலித்துத் தவறைத் திருத்திக்கொண்டால், அந்தந்த நிறுவனங்களின் செலவு குறைவதுடன் லாபமும் அதிகரிக்கும். அல்லது நுகர்வோர்களுக்குக் குறைந்த செலவில் அந்த சேவையை அளிப்பதுகூடச் சாத்தியமாகும். ஆனால், எந்த நிறுவனமாக இருந்தாலும் தணிக்கையே இல்லாமல் தப்பித்துவிட முடியாது.