உ
டுமலை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்குத் தண்டனை விதித்து, திருப்பூர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்புக்குரியது. மனம் விரும்பித் திருமணம் செய்துகொள்பவர்களை சாதி பேதங்களைக் காரணம் காட்டி, கொல்லத் துணிபவர்களுக்குப் பெரிய எச்சரிக்கை விடுத்திருக்கிறார் நீதிபதி.
திருப்பூர் மாவட்டம், குமரலிங்கத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவரான சங்கரும் பழனியைச் சேர்ந்த கவுசல்யாவும் எதிர்ப்புகளை மீறி சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். கடந்த ஆண்டு மார்ச் 13-ல் உடுமலை பேருந்து நிலையம் அருகே சங்கரும் கவுசல்யாவும் நடந்து சென்றபோது, அங்கு வந்த கும்பல் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியது. பட்டப் பகலில் நூற்றுக்கணக்கானோர் கடந்து செல்லும் சாலையில் நடத்தப்பட்ட இந்தக் கொடூரம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்தது. தாக்குதலில் சங்கர் உயிரிழந்தார். கவுசல்யா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் பின்னுள்ள குற்றவாளிகள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற குரல், தமிழ்நாடு முழுவதும் எழுந்தது. கவுசல்யாவின் பெற்றோர் உட்பட 11 பேர் மீது இவ்வழக் கில் குற்றஞ்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், டிசம்பர் 12 அன்று சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட 8 பேரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களில் சின்னச்சாமி உட்பட 6 பேருக்குத் தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாகரிகச் சமூகத்தில் மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாதது என்பது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இந்த வழக்கின் தீவிர நிலையைக் கருத்தில் கொண்டே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தியாவின் தலையாய பிரச்சினை தீண்டாமைதான். சாதி வெறி அழுத்தும் இந்தச் சமூகத்தில், ஆணவக் கொலைகள் நம் காலத்தில் சாதியத்தின் உச்சமாக உருவெடுத்து நிற்கின்றன. நாடு முழுவதும் நடக்கும் ஆணவக் கொலைகள் முறையாகப் பதிவுசெய்யப்படுவதில்லை என்ற உண்மையின் பின்னணியில், காவல் துறை பதிவுசெய்த அளவிலேயே 2014-ல் 28 ஆக இருந்த ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை 2015-ல் 251 ஆக அதிகரித்திருப்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். கொலைக் குற்றங்கள் என்ற அளவிலேயே இதுநாள் வரை ஆணவக் கொலைகள் அணுகப்பட்டுவந்த நிலையில், ஆணவக் கொலைகளை கொலைக் குற்றங்களிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்ற பார்வையை நீதிபதி அலமேலு நடராஜன் நமக்குத் தருகிறார். வரவேற்புக்குரிய ஒன்று இது. ஏனென்றால், ஆணவக் கொலைகள் இங்கு தனித்த சம்பவங்களாக நடக்கவில்லை. நாட்டிலேயே அதிகமான ஆணவக் கொலை கள் நடக்கும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடந்திருக்கும் சமீபத்திய சம்பவம் ஒன்று, சாதியின் மீதான பற்று, கொலைக் குற்றத்தோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை என்பதற்கு உதாரணம். முஸாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, குடும்பத்தினரின் விருப்பத்தை மீறித் திருமணம் செய்துகொள்ள முயற்சித்தார் என்பதற்காக அவரது தந்தையும் உடன் பிறந்த சகோதரருமே சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். இத்தகைய கொடூரங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுதான் ஆக வேண்டும்.
இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள கவுசல்யா, அதேசமயம் தீர்ப்பில் விடுவிக்கப்பட்டவர்களையும் தண்டனைக்குள் கொண்டுவர மேல் முறையீட்டுக்குச் செல்லவிருப்பதாகக் கூறியிருக்கிறார். கணவர் கண்ணெதிரே கொல்லப்பட்ட தோடு முடங்கிப்போகாமல், தீண்டாமைக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிரான ஒரு போராளியாகத் தன்னை அவர் வளர்த்துக்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. திருப்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியா முழுவதற்கும் ஒரு முன்னோடித் தீர்ப்பாக அமையட்டும். சமூகத்தில் பாதிக்கப்படும் பெண்களுக்கு கவுசல்யா ஒரு முன்னுதாரணமாக இருக்கட்டும்!