தலையங்கம்

மின்னணு சரக்குக் கட்டண ரசீது: அமல்படுத்துவதில் கவனம் தேவை!

செய்திப்பிரிவு

ரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்திருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக, சரக்குகளை மாநிலங்களுக்கு இடையில் கொண்டுசெல்வதற்கான மின்னணு சரக்குக் கட்டண ரசீது (‘இ-வே பில்’) பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரவிருக்கிறது. ரூ.50,000 மதிப்புக்கு மேல் அனுப்பப்படும் சரக்குகளுக்கு இது அவசியம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் இந்த முறை அமல்படுத்தப்படவிருக்கிறது. சரக்குகள் எடுத்துச் செல்லப்படும் தொலைவுக்கு ஏற்ப அனுமதி நேரம் நிர்ணயிக்கப்படும்.

கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபோதே சில மாநிலங்கள் தங்களுடைய சொந்தத் தேவைக்காக இதைப் போன்ற சரக்குக் கட்டண ரசீது முறையை அமல்படுத்தி வருகின்றன. வரும் ஜூன் 1 முதல் மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு ‘இ-வே பில்’ கட்டாயமாகிறது. அதன் பிறகு வரிவிதிப்புக்கு உட்பட்ட எல்லா சரக்குகளின் நடமாட்டங்களையும் கண்காணிக்கும் முறையமைப்பு ஏற்பட்டுவிடும்.

இந்த முறை அனைத்து மாநிலங்களிலும் அமலாகும்வரை சரக்குகளை ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு அனுப்பும் நிறுவனங்களுக்கு இடைக்காலப் பிரச்சினைகள் சில ஏற்படலாம். சமையல் எரிவாயு சிலிண்டர்கள், அரிசி – கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள், காய்கறிகள், தங்க நகை உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக்கான 150-க்கும் மேற்பட்ட சரக்குகளுக்கு ‘இ-வே பில்’ முறையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. மாட்டு வண்டிகள் போன்ற மோட்டார் பொருத்தப்படாத வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் சரக்குகளுக்கு ‘இ-வே பில்’ தேவையில்லை.

குஜராத் மாநில சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜிஎஸ்டி கவுன்சில் கூடி ‘இ-வே பில்’ முறையை அமல்படுத்துவது தொடர்பாக எடுத்துள்ள புதிய முடிவு குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி வரி வசூல் முதல் மூன்று மாதங்களில் ரூ.90,000 கோடிக்கும் அதிகமாக இருந்தது. அதுவே அக்டோபரில் ரூ.83,000 கோடியாகக் குறைந்துவிட்டதால் அரசுக்குக் கவலை ஏற்பட்டுள்ளது. மக்களிடமிருந்தும் வர்த்தகர்களிடமிருந்தும் பெறப்பட்ட பின்னூட்டங்களின் அடிப்படையில் பல பொருட்களுக்கு வரி விகிதம் குறைக்கப்பட்டது, பல பொருட்களுக்கு வரிகளிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டது. அது அமலாவதற்கு முன்னதாகவே வரி வருவாய் குறைந்திருக்கிறது. இது மேலும் குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே ‘இ-வே பில்’ தொடர்பாக இப்போது முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

‘இ-வே பில்’களும், ஏற்றுமதியாளர்கள் வரிச் சலுகைக்காகத் தாக்கல் செய்ய வேண்டிய சரக்கு விற்பனை ஆவணங்களும் (இன்வாய்ஸ்) முழுதாக அமலுக்கு வந்தால் வரி ஏய்ப்பு செய்வது கடினமாகிவிடும் என்று ஜேட்லி கருதுகிறார். சரக்குகளைக் கொண்டுசெல்ல அனுமதிக்கும் நேரம் தொடர்பாக மத்திய அரசு சற்று நெகிழ்வாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் இது தொழில், வர்த்தகத் துறைக்குப் பெருத்த மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். ‘இ-வே பில்’ தொடர்பான நடைமுறைகள் எளிதாகவும் தெளிவாகவும் இருப்பது அவசியம்!

SCROLL FOR NEXT