தலையங்கம்

பொருளாதார மீட்சிக்குத் தடையாக இருப்பது எது?

செய்திப்பிரிவு

நா

ட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து மீண்டுவருவதில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் கவலை அளிக்கின்றன. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியால் விமர்சனங்களை எதிர்கொண்ட மத்திய அரசுக்கு இரண்டு விஷயங்கள் சற்றே நிம்மதி அளித்தன. அவை: தொழில் செய்வதற்கு எளிதான நாடுகள் பட்டியலில் இந்தியாவை மேலும் சில படிகள் உயர்த்தி உலக வங்கி அங்கீகரித்தது. தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக மிகக் குறைந்த அளவுக்கே இருந்த மொத்தப் பொருளாதார உற்பத்தி மதிப்பு இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 6.3% என்ற அளவை எட்டியது. ஆனால், அக்டோபர் - டிசம்பர் காலாண்டு தொடர்பாகக் கிடைத்துள்ள தரவுகளை ஆராய்ந்தால், இந்தியா இன்னமும் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை என்றே தெரிகிறது.

தொழிற்சாலைகளின் உற்பத்தி வளர்ச்சியைக் காட்டும் அட்டவணை, இரண்டு மாதங்களாக 4%-க்கும் அதிகமாக இருந்து அக்டோபரில் சரிந்துவிட்டது. ஆலைவாய் உற்பத்தி அட்டவணை வெறும் 2.2% ஆக இருக்கிறது. பண்டிகை மாதமான அக்டோபரிலும்கூட நுகர்வுப் பண்டங்களின் உற்பத்தி அதிகரிப்பதற்குப் பதில் 7% குறைந்துவிட்டது. உற்பத்தித் துறையில் வளர்ச்சி 2.5% முதல் 3.8% ஆக இருந்தது. ஏற்றுமதியிலும் 1.1% அக்டோபரில் குறைந்தது. செப்டம்பருடன் ஒப்பிடுகையில் அக்டோபரில் பொதுச் சரக்கு, சேவை வரி வருவாய் வசூலும் 10% குறைந்துவிட்டது. 2017-18 நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 2.5% ஆகவே இருக்கிறது.

உலக அளவில் வர்த்தகம் மீட்சியடைந்துவந்தாலும் இந்தியாவில் அது இன்னமும் தொடங்கவில்லை. நுகர்வோர் நிலையில், விலைவாசி கடந்த 15 மாதங்களில் படிப்படியாக உயர்ந்துகொண்டேவருகிறது. பணவீக்க விகிதம் 4.88% ஆகிவிட்டது. எரிபொருள் விலை உயர்வு 7.2%, உணவுப் பொருட்கள் விலை உயர்வு 4.4%. இதற்கு முக்கியக் காரணம். உணவுப் பொருட்களில் வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடந்த 16 மாதங்களில் இருந்திராத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை பீப்பாய்க்கு ரூ.4170-ஐத் தாண்டியது.

எரிபொருட்கள் மீதான வரியைக் குறைத்தால் பணவீக்க விகிதம் மட்டுப்படலாம். ஆனால், அரசுக்கு வரி வருவாய் கணிசமாகக் குறைந்துவிடும். ஜி.எஸ்.டி.யில் அளித்துள்ள புதிய சலுகைகளால் வருவாய் குறைந்திருப்பது இன்னொரு அம்சம். பணவீக்க விகிதத்தைக் குறைக்காவிட்டால், கடன்களுக்கான வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி குறைக்காது. இது தொழில், வர்த்தகத் துறையைப் பாதிக்கும். கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு ரூ.3850 முதல் ரூ.4170 வரை உயரும்போது பொதுவான நுகர்வும், பொது முதலீடும், தனியார் முதலீடும் மேலும் குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. மத்திய அரசு வெற்றுப் பேச்சில் மட்டும் கவனம் செலுத்தாமல் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய நேரம் இது!

SCROLL FOR NEXT