தலையங்கம்

மக்களின் துயரங்களைஅலட்சியம் செய்யக் கூடாது!

செய்திப்பிரிவு

கு

ஜராத், இமாச்சல பிரதேச சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருந்தாலும், தனது செயல்பாடுகள் மீது அதீத நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது அத்தனை ஆரோக்கியமானது அல்ல என்பதை அக்கட்சி உணர்ந்தாக வேண்டிய தருணம் இது என்றே சொல்ல வேண்டும். இமாச்சல பிரதேசத்தைக் காங்கிரஸிடமிருந்து கைப்பற்றியிருக்கும் பாஜக, குஜராத்தில் காங்கிரஸுடன் கடுமையாகப் போராடித்தான் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மிகச் சில வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருப்பதும், மெலிதான பெரும்பான்மையைப் பெற்றிருப்பதும் பாஜக தனது செயல்பாடுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் எனும் நிலையை உருவாக்கியிருக்கின்றன.

பிரதமர் பதவியைப் பிடிக்க எந்த மாநிலம் மோடிக்கு ஊன்றுகோலாக இருந்ததோ அதே மாநிலம்தான், இப்போது காங்கிரஸுக்கும் ராகுல் காந்திக்கும் நம்பிக்கை ஊற்றாக மாறியிருக்கிறது. 1985-க்குப் பிறகு, மிகச் சிறப்பான ஆதரவைப் பெற்று வலுவான கட்சியாக நின்றுவிட்டது காங்கிரஸ். ஊரகப் பகுதிகளில் அதிகத் தொகுதிகளில் அக்கட்சி வென்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி அமைத்த சமூகக் கூட்டணி நல்ல பலனைத் தந்திருக்கிறது. ஹர்திக் படேலின் ‘படிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி’, அல்பேஷ் தாக்கோர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், ஜிக்னேஷ் மேவானி தலைமையில் பட்டியல் இனத்தவர்கள் என்று காங்கிரஸுக்கு எல்லா சமூகங்களிலிருந்தும் பரவலான ஆதரவு அதிகரித்திருக்கிறது.

இமாச்சல பிரதேசத்தைப் பொறுத்தவரை காங்கிரஸைவிட பாஜகவுக்கு 7% வாக்குகள்தான் அதிகம் என்றாலும், அதிகத் தொகுதிகளை அக்கட்சி பெற்றிருக்கிறது. பாஜக மூன்றில் இரண்டு மடங்குக்கு நெருக்கமாகத் தொகுதிகளைப் பெற்றும், அக்கட்சியின் முதல்வர் பதவி வேட்பாளர் தூமல் உட்பட பல முக்கியத் தலைவர்கள் தோற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு, கட்சி நிர்வாகிகளிடம் பேசிய பிரதமர் மோடி, சீர்திருத்தங்கள் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். அவரது இந்த அதீத நம்பிக்கையைப் பார்க்கும்போது, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றால் மக்களிடையே தங்களுக்கு ஆதரவு குறையவில்லை என்று பிரதமரும் கட்சித் தலைவரும் நினைக்கின்றனரோ என்று அச்சமாக இருக்கிறது. இவ்விரண்டு நடவடிக்கைகளும் ஏற்படுத்திய துயரங்களிலிருந்து நாட்டு மக்களும் பொருளாதாரமும் இன்னமும் மீளவில்லை என்பதே உண்மை. குஜராத்தில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்ட முதல் கட்டத்தில், பாஜக ஆட்சியைத் தக்க வைக்குமா என்ற கேள்வியே எல்லோர் மனங்களிலும் எழுந்தது. அந்த அளவுக்கு பாஜகவுக்கு குஜராத் மக்களிடம் எதிர்ப்பு உருவாகியிருப்பதை உணர முடிகிறது. இந்நிலையில், மக்கள் மனதில் உருவாகியிருக்கும் அதிருப்தி அலைகளை அலட்சியம்செய்துவிட்டு, நாட்டு நலன், தேசப்பற்று என்றெல்லாம் பல்வேறு வாதங்களை முன்வைத்து, மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தொல்லை தரும் நடவடிக்கைகள் எடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். தேர்தல் வெற்றிகளைத் தாண்டி, மக்கள் மனதில் இடம்பெற இதுபோன்ற நடவடிக்கைகள் எவ்விதத்திலும் உதவாது என்பதை நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கட்டாயம் உணர்ந்துகொள்ள வேண்டும்!

SCROLL FOR NEXT