தலையங்கம்

பருப்பு இறக்குமதிக்கு சுங்க வரி உயர்வு: தேவை நீண்ட காலத் தீர்வு!

செய்திப்பிரிவு

பட்டாணி, மசூர் பருப்பு இறக்குமதி மீது 30% சுங்க வரியை விதித்திருப்பதன் மூலமாக, குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் கிராமப்புறங்களில் இழந்த ஆதரவை மீட்டெடுக்கும் முயற்சியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு இறங்கியிருக்கிறது. உள்நாட்டில் விளைச்சல் குறைந்தால் இறக்குமதி வரியைக் குறைப்பது, அதிகரித்தால் உயர்த்துவது போன்ற நடவடிக்கைகள் விவசாயிகளின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள உதவலாமே தவிர, அதனால் நீண்ட காலத்துக்குப் பயன்தரக்கூடிய விவசாயக் கொள்கை உருவாகிவிடாது.

விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதும், உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதும்தான் அரசின் லட்சியம் என்றால், அதற்கு ஆழ்ந்த சிந்தனையும் பல்வேறு துறைகளின் தீவிரமான ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் அவசியம்.

தற்போது இந்தியாவில் பருப்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. ரபி பருவ முடிவிலும் நிறைய சாகுபடியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் வியாபாரிகள், உள்நாட்டு விவசாயிகளிடம் பருப்பு வகைகளை வாங்குவதற்குப் பதிலாகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்துவிடக் கூடாது என்பதற்காகவே மத்திய அரசு இறக்குமதி வரியை அதிகப்படுத்தியிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் பருப்பு வகைகளின் இறக்குமதி மட்டும் கடந்த ஆண்டைவிட 30% முதல் 46% வரை அதிகரித்திருக்கிறது. பட்டாணியும் மசூர் பருப்பும்தான் ரூ.10,250 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு மொத்த பருப்பு வகைகளின் இறக்குமதி அதிகரிக்கக் காரணம். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், பட்டாணி இறக்குமதி அளவில் 373%-ம் மசூர் பருப்பின் இறக்குமதி அளவு 204%-ம் உயர்ந்திருக்கிறது.

கடந்த ஆண்டு பருப்பு வகைகளின் விலை உயர்ந்துகொண்டிருந்தபோது மொசாம்பிக் நாட்டிலிருந்து பருப்பு இறக்குமதியை இரட்டிப்பாக்குவதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். ஓரிரு பருவங்களில் விளைச்சல் அமோகமாக இருப்பதால், இத்தகைய ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடாது. 40-க்கும் மேற்பட்ட நாடுகளிடமிருந்து பருப்பு வகைகளை இறக்குமதி செய்வதன் மூலமே நாம் நட்புறவை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

நவம்பரில் ஏற்கெனவே துவரம் பருப்பின் மீது 10% மற்றும்மஞ்சள் பட்டாணி மீது 50% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. மின்னணுச் சாதனங்கள் மீதான இறக்குமதித் தீர்வையை அதிகரிப்பதாலேயே எப்படி உள்நாட்டில் அந்தத் தொழிலை வளர்ச்சிபெற வைக்க முடியாதோ அல்லது அதன் நுகர்வைக் குறைக்க முடியாதோ அதே போலத்தான் பருப்பு மீதான இறக்குமதித் தீர்வையும். இப்படித் தீர்வையை அதிகப்படுத்தினால் ஏற்கெனவே வாங்கி கையிருப்பில் வைத்திருக்கும் ஊக வியாபாரிகள்தான் லாபம் அடைவார்கள்.

புரதச் சத்துக்கு அவசியமான பருப்பு வகைகள் போன்றவை தொடர்பாக இறக்குமதி வரியை ஆயுதமாகக் கையாள்வது நமது நோக்கத்துக்கு எதிராகத் திரும்பிவிடும். உணவுப் பாதுகாப்பு கருதி பிற நாடுகளுடன் செய்துகொண்ட வேளாண் பொருட்கள் இறக்குமதி ஒப்பந்தங்களைத் தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். அதே வேளையில் விலைவாசி உயராமல், விவசாயிகளின் வருமானம் உயரும் வழிகளையும் அரசு கண்டறிய வேண்டும். பொருளாதார அறிஞர்களும் வேளாண் நிபுணர்களும் அரசு அதிகாரிகளும் கூடி விவாதித்தால் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்.

SCROLL FOR NEXT