தலையங்கம்

மக்களின் ஒரே நம்பிக்கை

செய்திப்பிரிவு

ஊழலை அம்பலப்படுத்த விரும்பும் உண்மை விளம்பிக்கும், உள்நோக்கத்தோடு குற்றம்சாட்டுபவருக்கும் நூலிழை அளவு வித்தியாசம் இருக்கலாம். ஆனால், வெளிப்படும் உண்மை, அநியாயத்தைக் களைந்து நியாயம் இழைப்பதாகவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருவதாகவோ, எதிர்காலத்தில் இத்தகைய நிலைமை ஏற்படாமல் தடுக்கவோ உதவினால் நல்லதுதான். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஒருவர் மீது, காலம் கடந்து கூறியுள்ள குற்றச்சாட்டு அத்தகைய துதான்.

அந்த நீதிபதிக்கு உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதியாகப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதன் பின்னணியில் திமுக இருந்ததாகவும், சில குற்றச்சாட்டுகள் அவர் மீது கூறப்பட்டிருந்தாலும் முறையற்ற வகையில் அவருக்குப் பதவி நீட்டிப்பு தரப்பட்டதாகவும், பிறகு நிரந்தரப்படுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் கட்ஜு. நீதிபதிக்கு ஆதரவாக தி.மு.க. தந்த அரசியல் அழுத்தமே இந்த நடவடிக்கைகளுக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய தரப்பு என்ன என்று விளக்கம் சொல்ல அந்த நீதிபதி உயிருடன் இல்லாத நிலையில் - கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு - கட்ஜு இதைத் தெரிவித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. நீதி, நேர்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை தருகிறவராக இருந்தால், சம்பந்தப்பட்ட நீதிபதியின் பதவி நீட்டிப்பு, நிரந்தர நீதிபதியாக நியமனம் போன்ற நடவடிக்கைகளை அப்போதே கண்டித்திருக்கலாம். ஆனால், கண்டிக்க வேண்டிய நேரத்தில் கட்ஜு மவுனமாக இருந்திருக்கிறார். நீதித் துறையில் தனக்கேற்பட்ட அனுபவங்களைக் கூறத் தொடங்கியபோது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவிவகித்தபோது நடந்தவற்றை எழுதுமாறு தமிழ்நாட்டு நண்பர்கள் கோரியதால் இவற்றை நினைவுகூர்ந்திருப்பதாக கட்ஜு கூறியிருப்பது ஏற்கும்படியாக இல்லை.

அதே சமயம், கட்ஜு சொன்ன விதமும் சொன்ன நேரமும் சரியில்லை என்பதால், அவருடைய குற்றச்சாட்டே உண்மையில்லை என்றும் நிராகரித்துவிட முடியாது. அவரது கூற்றை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுத்திருந்தாலும், அரசியல் வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள தகவல்கள் அது உண்மை என்பதை உணர்த்துகின்றன. எனவே, உண்மையை வெளிக்கொண்டுவர உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடுவதுதான் நீதித் துறையின் மாண்பைக் காப்பதற்கு அவசியமான நடவடிக்கையாக அமையும்.

இப்போதுள்ள நியமன முறையே நேர்மையானது, நடுநிலையானது என்று நீதிபதிகள் பலரும் கூறினாலும் நம்பகத்தன்மைக்கு இதெல்லாம் போதுமானதல்ல. ஆளும் கட்சி அல்லது கூட்டணிகள் அரசின் நிர்வாகத்தில் மட்டுமல்லாது, நீதித் துறை நடவடிக்கைகளிலும் தலையிடுகிறார்கள் என்பதற்கு மேலும் ஒரு ஆதாரம் கிடைத்திருக்கும் சூழ்நிலையில், நியமன முறையை இனியும் எப்படி நம்புவது?

அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்று எல்லாத் தரப்புகள்மீதும் நம்பிக்கை இழந்திருக்கும் மக்களுக்கு, எஞ்சியிருக்கும் சிறிது நம்பிக்கை நீதித் துறை மட்டுமே. நீதித் துறையின் செயல்பாடு சுதந்திரமாக இருப்பதும், நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டியதும், நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறவர்கள் தங்களுடைய பதவிக்கு உண்டான பொறுப்பு, கண்ணியம் ஆகியவற்றையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டியதும் மட்டுமே மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும்.

SCROLL FOR NEXT