தலையங்கம்

தர்மம் நிச்சயம் வெல்லும், இறுதியிலாவது!

செய்திப்பிரிவு

கும்பகோணத்தில் 94 பிஞ்சுகளின் உயிர்களை எரித்தழித்த ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி வழக்கில் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. 2004 ஜூலை 16-ல் நேரிட்ட அந்தக் கொடுமையான சம்பவத்தை நினைத்தால், இப்போதும் நெஞ்சமெல்லாம் பதறுகிறது.

உலகையே அதிரவைத்த சம்பவம் அது. இந்தியக் கல்வித் துறையில் ஊடுருவியிருக்கும் தனியார் பண வேட்கையையும், புற்றுநோய்போலப் புரையோடிக்கொண்டிருக்கும் ஊழலையும் ஒருசேர அம்பலப்படுத்திய சம்பவம். ஒரே இடத்தில் 3 பள்ளிக்கூடங்களை நிறுவி, அதில் சுமார் 700 குழந்தைகளை ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைத்து வைத்ததைப் போல நடத்தி, பணத்துக்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவை அத்தனையையும் செய்து பார்த்திருந்தது ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி.

அதிகாரிகள் பணத்துக்காக விதிகளை வளைக்கவில்லை; உடைத்து நொறுக்கி, தூளாக்கிப் பள்ளி நிர்வாகத்தின் காலடியில் வைத்திருந்தனர். இப்படிப்பட்ட ஒரு வழக்கில்தான் 10 ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பளித்திருக்கிறது தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்.

பள்ளிக்கூட நிறுவனர் புலவர் பழனிச்சாமி, அன்றைய மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், பள்ளிக்கூட நிறுவனரின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, பொறியாளர் ஜெயச்சந்திரன், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகிய 10 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி முகம்மது அலி தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

ஏனையோர் - அதாவது, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பி. பழனிச்சாமி, தஞ்சை மாவட்டக் கல்வி அலுவலர் நாராயணசாமி, நகரமைப்பு அலுவலர் முருகன், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகா லட்சுமி, அந்தோணியம்மாள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதவன், பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுருக்கமாக, புலவர் பழனிச்சாமிக்கு மட்டும் அதிகபட்சமாக ஆயுள் சிறையும், ஏனையோருக்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான தண்டனையும் விதித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு.

இந்த வழக்கின் ஆரம்பக் கட்டத்தில் 24 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அவர்களில் 3 அரசு அதிகாரிகள், தமிழக அரசின் பரிந்துரையால் 2010-ல் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஒருகட்டத்தில், இந்த வழக்கு முன்னேற்றமே இல்லாமல் ஸ்தம்பித்திருந்தது. 10-வது எதிரியான கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் தன்னையும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தபோதுதான், இந்த வழக்கு முடிவடையாமல் நிலுவையில் இருப்பது உச்ச நீதிமன்றத்துக்குத் தெரிந்தது.

வழக்கை உடனடியாக நடத்துமாறு அது அளித்த உத்தரவுக்குப் பிறகே, 2012 செப்டம்பர் 12-க்குப் பின் வழக்கு விசாரணை கொஞ்சமாவது துரிதமாக்கப்பட்டு, இப்போது தீர்ப்பு வந்திருக்கிறது.

குடிமக்களுக்குத் தரமான கல்வியைக் கட்டணமில்லாமல் கொடுக்க வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. அதை அரசால் ஒழுங்காகச் செய்ய முடியாத சூழலிலேயே மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கின்றனர். தங்கள் வாழ்வின், உழைப்பின் ஆகப் பெரும் பகுதியைத் தனியார் பள்ளிக்கூடங்களின் முன் கொண்டுபோய் வைக்கின்றனர். இப்படிப் பணம் கொடுத்து கல்வியை வாங்கவைக்கும் அரசாங்கம், அப்படிப் பணத்துக்குக் கல்வியைக் கொடுக்கும் நிறுவனங்களையும்கூட நெறிப்படுத்த முடியாது என்றால், அநியாயம் இல்லையா?

கல்வி நிறுவனங்கள் அவற்றுக்கென வகுக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றி இயங்க வேண்டியதைக் கண்காணிக்கத்தானே கல்வித் துறையினர் சம்பளம் வாங்குகிறார்கள்? அவர்கள் அந்தப் பணியைச் செய்யவில்லை; கூடவே, அந்த விதிகளை உடைக்கவும் உடந்தையாக இருக்கிறார்கள் என்றால், அக்கிரமம் இல்லையா?

கும்பகோணம் வழக்கில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு இதற்கெல்லாம் முடிவுகட்ட ஒரு தொடக்கப் புள்ளியாக, கடுமையான எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. குறிப்பாக, குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களிடமும் உயிர் பிழைத்த மாணவர்களிடமும் இருந்தது.

இந்தத் தீர்ப்பு எல்லோரையும் ஏமாற்றிவிட்டது. இப்போது வெளியாகியிருக்கும் தீர்ப்பைப் பெற்றோர்கள் ஏற்கப்போவதில்லை என்பது நீதிமன்ற வளாகத்திலேயே தெரிந்துவிட்டது. ஏமாற்றமும் வேதனையும் பிடுங்கித் தின்ன, “மேல்முறையீட்டுக்குச் செல்வோம்; எங்கள் பிள்ளைகளுக்கான நீதியை அவர்களுடைய சமாதியில் வைக்கும்வரை நாங்கள் ஓய மாட்டோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மறுபுறம், தண்டனை பெற்றவர்களும் இந்தத் தீர்ப்பை ஏற்கப்போவதாகத் தெரியவில்லை.

ஆக, மீண்டும் இந்த வழக்கு மேல்முறையீடுகளின்பேரில் விசாரிக்கப்படும். அந்த விசாரணைகள் எப்போது தொடங்கும், எப்போது முடியும், இறுதித் தீர்ப்பு எப்போது வரும் என்ற கேள்விகளுக்கெல்லாம் நம்மிடம் பதில் இல்லை. ஆனால், இப்படிப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பு சவுக்கடியாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணம். தர்மம் நிச்சயம் வெல்லும். தர்மம் நிச்சயம் வெல்ல வேண்டும்... இறுதியிலாவது!

SCROLL FOR NEXT