நீ
திபதிகள் நியமனத்துக்கான நடைமுறைகளைப் புதிதாக வகுக்கத் தாமதம் ஆவது ஏன் என்று மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். அப்படி யொரு நடைமுறையை வகுக்க முடியாமல் மத்திய அரசைத் தடுப்பது எது என்ற கேள்வி நமக்கும் எழுகிறது. நீதிபதி பதவிக்கு உரியவர்களை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அம்சங்களில் மத்திய அரசுக்கும், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கிய தேர்வுக் குழுவுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதைத்தான் தற்போதைய சூழல் காட்டுகிறது.
இரு தரப்புக்கும் இடையிலான தகவல் தொடர்பே நின்றுவிட்டிருக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்துகொள்ளவும், ஆலோசனை நடைமுறையை விரைவுபடுத்தித் தீர்வு காணவும் உச்ச நீதிமன்றம் விரும்புகிறது என்று தெரிகிறது. நீதிபதிகள் நியமனம் தொடர்பாகப் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளாமல், நீதிபதிகளை நியமிக்கக் கூடாது என்று ஒரு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, நீதிபதி கள் நியமனம் தொடர்பான நடைமுறையை வகுக்க இனியும் தாமதம் கூடாது என்ற நோக்கில், மத்திய அரசிடம் விளக்கம் கேட்கத் தீர்மானித்திருக்கிறது.
நீதிமன்றம் கேட்டுள்ள விளக்கத்துக்குப் பதில் அளிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையிலான ஆலோசனைகளைப் பற்றிய விவரங்களை அரசு வெளியிட வேண்டும். நியமனத்துக்கான வழிமுறையை இறுதி செய்யாமலிருப்பது கவலை அளிக்கிறது. உயர் நீதிமன்றங்களில் மொத்தமுள்ள 1,079 பதவிகளில் 387 நிரப்பப்பட வேண்டியுள்ளது. ஏழு உயர் நீதிமன்றங்களுக்கு நிரந்தரத் தலைமை நீதிபதிகள் இல்லை. இந்நிலையில், புதிய நியமனங்களுக்கான வழிமுறைகளை இறுதிசெய்வதில் தாமதம் நீடிப்பது சரியல்ல. நீதித் துறையின் தேர்வுக் குழுவே ஒரு நடைமுறையை இறுதிசெய்து, அதை அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டால்கூடப் பிரச்சினை தீரும். ஆனால், அது நீதித் துறையின் அதிகாரத்தை மட்டும் காட்டுமே தவிர, நீதித் துறை யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டதல்ல என்பதாகவே பார்க்கப்படும்.
நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, மத்திய அரசு கொண்டுவந்த ‘தேசிய நீதித் துறை நியமன ஆணையம்’, உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இரண்டு ஆண்டுகளில், காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாகப் பதவி வகித்தவர்கள் வருத்தமும் அதிர்ச்சியும் கலந்து பேசுவது வழக்கமாகிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதுமட்டும் போதாது. நீதித் துறையைச் சீர்திருத்த அனைவரும் ஏற்கத்தக்க புதிய தேர்வு நடைமுறை அவசியம். அத்துடன் அத்தகைய நியமனங்கள் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். இரு தரப்பும் கருத்தொற்றுமை அடிப்படையில் விரைந்து தீர்வு காண்பதைப் போல நல்ல வழி ஏதுமில்லை!