தலையங்கம்

விரும்பத் தக்கதல்ல தமிழக ஆளுநரின் கோவை ஆய்வு!

செய்திப்பிரிவு

தே

ர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் இருக்கும்போது மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாநகர ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை ஒரு ஆளுநர் வரவழைத்து பணிகளை ஆய்வுசெய்வது நல்ல அரசியல் நடைமுறைக்கு முரணானதாகவே பார்க்கப்படும். கோயம்புத்தூரில் இவ்வாறு அரசின் திட்டச் செயல்பாடுகளை ஆய்வுசெய்ததன் மூலம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பதவிக்குரிய அதிகார வரம்பை மீறிச் செயல்படுகிறார் என்ற விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார். ஆளுநர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்களில் ஒருவர்கூட உடன் இல்லை. மாநில நிர்வாகம் எப்படி நடக்கிறது என்று நேரில் பார்த்து அறியவே இப்படிச் செய்ததாகவும், அப்போதுதான் மாநிலம் திட்டங்களைச் சிறப்பாக அமலாக்குவது தொடர்பாக மத்திய அரசுக்குத் தகவல் அனுப்ப முடியும் என்றும் ஆளுநர் கூறியிருக்கிறார். அவர் சொல்வதை ஏற்க முடியவில்லை; அத்துடன் நிறுத்தாமல், அனைத்து மாவட்டங்களிலும் இப்படி ஆய்வைத் தொடரப் போவதாகக் கூறியிருப்பதையும் வரவேற்க முடியவில்லை. இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

இந்திய அரசியல் சட்டத்தின் 167-வது பிரிவு, “மாநில நிர்வாகம் தொடர்பான தகவல்களையும், பேரவையில் இயற்றப்படும் சட்ட மசோதாக்கள் பற்றிய விவரங்களையும் ஆளுநருக்கு மாநில முதல்வர் தெரிவிக்க வேண்டும்” என்கிறது. அதாவது மாநில நிர்வாகம் தொடர்பாக ஆளுநர் எதையாவது அறிந்துகொள்ள விரும்பினால் அதை மாநில முதல்வர் மூலமாகவே அவர் தெரிந்துகொள்ளலாம். முதல்வர் தானாகத் தெரிவிப்பனவற்றைத் தவிர வேறு ஏதாவது தகவல்களை அறிய ஆளுநர் விரும்பினாலும், அவற்றைத் தெரிவிக்க வேண்டிய கடமையும் முதல்வருக்கு இருக்கிறது. அரசின் திட்டங்கள் எப்படி அமலாகின்றன என்று அறிந்துகொள்ள ஆளுநர் புரோஹித் விரும்புவதில் தவறில்லை. ஆனால், அதை முதல்வர் பழனிசாமி மூலமாகவே அவர் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அசாதாரணமான சந்தர்ப்பங்களில் மாநிலத்தில் நடந்த ஏதாவதொரு சம்பவம் அல்லது தொடர்ந்து பெரிதாகிக்கொண்டுவரும் விவகாரம் தொடர்பாகவும் மூத்த அதிகாரியை அழைத்தோ, காவல் துறைத் தலைவரை வரவழைத்தோ விவரங்களை நேரடியாகக் கேட்டுப் பெறலாம். அதில் பிரச்சினை ஏதுமில்லை.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தன்னுடைய செல்வாக்கை வளர்த்துக்கொள்ளப் பார்க்கிறது மத்திய அரசை ஆளும் பாஜக. ஆனால், இங்கே காலூன்றும் இடம் இல்லாததால் தன் ஆசையைச் செயல்படுத்த முடியாமல் தவிக்கிறது. இப்போதுள்ள அரசுக்குப் பெரும்பான்மை வலு இல்லை என்பது நிரூபணமாகிவிட்டால் குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ், ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் தமிழகம் வந்துவிடும். அதற்கான ஒத்திகையைத்தான் இப்போதே ஆளுநர் தொடங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் உண்டாகிறது. இந்நிலை தொடரக் கூடாது. நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் ஆளுநர் நடந்துகொண்டு அந்தப் பதவிக்குரிய மாண்பைக் காப்பாற்ற வேண்டும்!

SCROLL FOR NEXT