தலையங்கம்

பாதை தெரிகிறது!

செய்திப்பிரிவு

நலிவுற்றோர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களையும் உள்ளடக்கியதுதான் சமூகம். அவர்களை விடுத்து எந்த முன்னேற்றத்தையும் யோசிக்க முடியாது. அந்த வகையில் ஆக்கபூர்வமான விஷயம் ஒன்று சமீபத்தில் நடந்திருக்கிறது. பார்வையற்றோருக்கான புத்தகங்களை உருவாக்குவதற்குக் காப்புரிமைச் சட்டத்திலிருந்து விலக்களிக்கும் மராகீஷ் மாநாட்டு ஒப்பந்தத்தை ஏற்று, அதிகாரபூர்வமாக ஆதரவு தெரிவித்துக் கையெழுத்திட்டுள்ளது நரேந்திர மோடி தலைமையிலான அரசு. இந்த ஒப்பந்தத்தில் முதலில் கையெழுத்திட்ட நாடு இந்தியாதான்! கையெழுத்தோடு நின்றுவிடாமல், சட்டம் இயற்ற வேண்டிய கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அதன் பிறகு, பார்வையற்றோர் படிப்பதற்கான புத்தகங்கள் பிரெய்ல் உள்ளிட்ட முறைகளில் அதிக அளவில் உருவாக்கப்பட்டு வழங்கப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

உலகின் எந்தப் பகுதியில் பிரசுரமான புத்தகமாக இருந்தாலும் பார்வையற்றோர் படிப்பதற்காக, காப்புரிமைச் சட்டம்குறித்த அச்சம் இல்லாமல், மறுபதிப்பு செய்து வெளியிட ‘உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு' ஏற்படுத்தியுள்ள இந்த உடன்பாடு வழிசெய்கிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஐ.நா. கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா ஒப்புதல் தந்து கையெழுத்திட்டு 7 ஆண்டுகள் ஆகின்றன. இவ்வாறு கையெழுத்திட்ட நாடுகள் உள்நாட்டில், காப்புரிமைச் சட்டத்தினால் இந்த முயற்சிகளுக்குப் பாதிப்பு நேராதிருக்க, புதிய சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். புத்தகங்களை ஒவ்வொரு நாடும் தனித்தனியாக அச்சிட வேண்டும் என்பதில்லை. ஏற்கெனவே அச்சிட்ட நாட்டிடமிருந்து பெற்றுக்கொண்டு, தங்களிடம் உள்ள புத்தகங்களை அந்த நாட்டுக்குத் தந்து பரிமாற்றம் செய்துகொள்ளவும் இந்த சர்வதேச உடன்பாடு வழி செய்கிறது.

இனிமேல், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் புத்தகங்களைப் பரிமாற்ற அடிப்படையிலும் எளிதில் பெற்றுவிட முடியும். இந்த வகையில் உலக அளவிலான புத்தகங்களின் பட்டியலைப் பெறவும், புத்தகங்களை அச்சிடுவதற்கான முறைகளைத் தேர்வுசெய்யவும் கிடைக்கும் புத்தகங்களின் பட்டியல் அடங்கிய தொகுப்பை ‘உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு' வெளியிட்டுள்ளது. அதே வேளையில், இந்தியா மட்டும் கையெழுத்திட்டுவிட்டதாலேயே இது முடிந்துவிடாது. இன்னும் குறைந்தது 20 நாடுகளாவது இந்த உடன்பாட்டை ஆதரித்துக் கையெழுத்திட வேண்டும். முக்கியமாக, அமெரிக்கா கையெழுத்திட வேண்டும். ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா இந்த முயற்சியில் உற்சாகமாக ஈடுபடவில்லை. அமெரிக்கா இதில் தீவிரம்காட்டினால் தான் இது உலக இயக்கமாக வேகம் பெறும். இத்தருணத்தில், காப்புரிமை விவகாரத்தில், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு, கடந்த 30 ஆண்டுகளாகப் பாடுபட்டுவருவதை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

வளரும் நாடுகளில்தான் பார்வையற்றோர் எண்ணிக்கை அதிகம். அவர்களுக்கான புத்தகங்கள் உருவாக்கப்படுவதோ வளர்ந்த நாடுகளில்தான் அதிகம். உலகின் பார்வையற்றோரில் 90% வளரும் நாடுகளில்தான் இருக்கின்றனர் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது. இந்தியாவில் பார்வையற்றோர் மற்றும் பார்வைக் குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை 1.5 கோடிக்கும் மேல். மொரீஷஸ் நாட்டின் மக்கள்தொகையைவிட இது அதிகம். சமூகத்தில் இவ்வளவு பெரிய மக்கள் தரப்பை நெடுங்காலமாக அரசாங்கங்கள் கண்டுகொள்ளாமல் விட்டது பெரும் அவலம். அந்தத் தவறைத் திருத்திக்கொள்வதற்கான முதல் படியாகத்தான் இந்த ஒப்பந்தத்தைக் கருத வேண்டும்.

SCROLL FOR NEXT