தலையங்கம்

போக்குசார் பொருளாதாரத்துக்கு நோபல் விருதின் அங்கீகாரம்!

செய்திப்பிரிவு

அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ரிச்சர்ட் எச்.தேலருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டிருகிறது. ஒரு பொருளாதார அறிஞராக, மக்களுடைய மனப் போக்குகளைக் கூர்மையாக ஆராய்ந்தவர் தேலர். ஒரு பொருளை அல்லது சேவையை ஒருவர் எப்படித் தேர்வுசெய்கிறார் என்பதை நுட்பமாகக் கவனித்து, புதிய தேற்றத்தை உருவாக்கியவர். அதன் சிறப்பான பயன்பாட்டுக்காக அவருக்குப் பொருளாதாரத்துக்கான நோபல் விருது தரப்படுகிறது. அவர் கண்டுபிடித்த தேற்றம் ‘போக்குசார் பொருளாதாரம்’ (பிஹேவியரல் எகனாமிக்ஸ்) என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. நுகர்வோர் பகுத்தறிவுக்குப் பொருத்த மான முடிவுகளை எடுக்காமல், வேறு முடிவுகளை எடுப்பது ஏன் என்பதைக் கண்டுபிடித்ததுதான் அவருடைய சிறப்பு.

பொருளாதாரம் என்பது நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந் தாத பாடம் என்று அடிக்கடி கூறப்படுவது உண்டு. சமூகங்கள், நாடுகள், பெரு நிறுவனங்கள், உலக அளவிலான பேரியல் பொருளாதாரம் ஆகியவற்றின் செயல்பாடுகளை விளக்க அதில் பல தேற்றங்கள் உண்டு. ஒரு நுகர்வில் அதிகபட்சப் பயன்பாடு மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குகின்றனர். ஆனால் நடைமுறையில் எல்லோருக்கும் அதிகபட்சத் திருப்தியை அளிப்பதில்லை.

ஆனால், பொருளாதாரத்துடன் உளவியலைக் கலந்து இந்த ஆய்வை மேற்கொண்டார் தேலர். ஒரு பொருளை வாங்க நினைப்பவர் அதன் விலை, அதை வாங்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றுடன் அந்தப் பொருளின் தன்மை குறித்தும் தகவல்களைத் தெரிந்துகொண்ட பிறகே முடிவுசெய்வார். ஆனால், சில நுகர்வுகளில் அப்படிப்பட்ட பகுத்தறிவு சார்ந்த முடிவுகள் இருப்பதில்லை. தான் குடியிருக்கும் பகுதியில் அல்லது தான் வேலை பார்க்கும் இடத்தில் அல்லது தன் வயதையொத்த ஒருவர் என்ன வாங்குகிறார் என்று பார்த்து அதையே தெரிவுசெய்கிறார். இந்த முடிவை அவர் சுயக் கட்டுப்பாட்டுடன் மேற்கொள்வதில்லை. இதைத்தான் போக்குசார் பொருளாதாரம் என்று அழைக்கின்றனர்.

நல்ல மழைக் காலத்தில் குடையை வாங்க மக்களிடையே போட்டி இருக்கும். இந்த நேரத்தில் குடையின் விலையை உயர்த்தினால் பெரிய அளவில் லாபம் கிடைக்கும். ஆனால், ‘நேரம் பார்த்து நம்மைச் சுரண்டுகிறார்களே’ என்று வாடிக்கையாளர்கள் நினைப்பார்கள். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை நிறுவனம் இழக்க நேரும் என்பதால், இந்த முடிவை நல்ல நிறுவனங்கள் எடுக்காது. இதுபோன்ற உதாரணங்களுடன் போக்குசார் பொருளாதாரக் கொள்கையை விவரித்திருக்கிறார் ரிச்சர்ட் தேலர். பொருளாதாரம் மக்களுக்குப் புரியாததோ அந்நியமானதோ அல்ல, அவர்களுடன் நெருங்கிய உறவு கொண்டது என்பதை அங்கீகரித்த நோபல் விருது தெரிவுக் குழுவும் பாராட்டுக்குரியது!

SCROLL FOR NEXT