சிறப்புக் கட்டுரைகள்

தீர்மானிக்கும் சக்தியாகும் இளம் வாக்காளர்கள் | சொல்... பொருள்... தெளிவு

தமிழ்நாட்டின் 5.67 கோடி வாக்காளர்களில் 20.72% பேர் 29 வயதுக்கு உள்பட்டவர்கள்

ம.சுசித்ரா

தமிழ்நாட்டின் 17ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதிசெய்ய மாநிலம் முழுவதும் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்களால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, முதல் முறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்களுக்குத் தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்த்த, கல்லூரி மாணவர்களைக் கொண்டு மனிதச் சங்கிலி, இளைஞர்களை ஈர்க்கும் ‘செல்ஃபி பூத்’, ‘செங்கை வீரா’ (செங்கல்பட்டு மாவட்டத்தில்) போன்ற உரையாடும் தேர்தல் சின்னம் சார்ந்த அனிமேஷன் படங்கள் முதலானவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முதல் முறையாகத் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம், தங்கள் ஜனநாயக உரிமையையும் கடமையையும் செயல்படுத்தவிருக்கும் 18-19 வயதினர் ‘முதல் முறை வாக்காளர்கள்’, 20-29 வயதினர் ‘இளம் வாக்காளர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். இந்தத் தேர்தலில் அவர்களின் வாக்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

          

மாணவர் எழுச்சி:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களில் முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் கடந்த 2011இல் இருந்துதான் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும் 1952இல் அன்றைய சென்னை மாகாணத்தில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த 2 கோடி பேருமே ஒருவகையில் முதல் முறை வாக்காளர்கள்தான்.

21 வயது நிரம்பிய இருபாலரும், கல்வி, வர்க்க பேதங்கள் நீங்கலாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட முதல் தேர்தல் இதுவே. 1960களில் இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திவந்த போராட்டங்கள் 1967 தேர்தலில் பெரும் தாக்கம் ஏற்படுத்தின. இந்தத் தேர்தலில் இளைஞர் படை கடல் அலையெனத் திரண்டு வந்து வாக்களித்தது.

பின்னர், 1988இல் 61ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், வாக்களிக்கும் வயது 21இலிருந்து 18 ஆக மாற்றப்பட்டது. இதன் வழியாகத் தேசிய அளவில் 5 கோடி புதிய வாக்காளர்கள் - தமிழ்நாட்டில் 20 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைந்தனர். இது 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞர்களின் வாக்குப்பதிவைக் கணிசமாக அதிகரித்தது.

சமூக ஊடக இளையோர்:

கடந்த 15 ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் 18-19 வயதுக்கு இடைப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 2011க்குப் பிறகான காலத்தில் இருந்து முதல் முறை வாக்காளர்களின் அரசியல் பார்வையைத் தீர்மானிப்பதில் சமூக ஊடகங்கள், அரசியல் கட்சிகளின் ‘ஐடி பிரிவுகள்’ முதன்மையாகப் பங்காற்றி வருகின்றன. வெற்றி, தோல்வியைக் கடைசி நேரத்தில் தீர்மானிக்கும் ‘ஸ்விங் வோட்டர்ஸ்’ (Swing Voters) ஆக இவ்வகை வாக்காளர்கள் மாறி உள்ளனர்.

எஸ்ஐஆர் விளைவு: 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள் 4 லட்சமாக மட்டுமே இருந்த நிலையில், நடப்பாண்டில் 12.51 லட்சமாக அது அதிகரித்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (எஸ்ஐஆர்) பணிகள்.

நடப்பாண்டில் சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ளவிருக்கும் அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகியவற்றோடு மேலும் ஏழு மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகளிலும் எஸ்ஐஆர் பணிகள் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து நடைபெற்றன. இதில் - இறந்தவர்களின் பெயர்கள், இரட்டைப் பதிவுகள் நீக்கப்பட்டதால் கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதுதொடர்பாக சர்ச்சையும் உருவானது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர் பட்டியலில் இருந்து 70 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. அந்த வகையில், 16ஆவது சட்டப்பேரவைத் தேர்தலின்போது இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 17ஆவது தேர்தலில் 62 லட்சம் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர்.

அதேநேரம் 7.40 லட்சம் இளம் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 10.92 லட்சமாக இருந்த தமிழ்நாட்டின் முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை இம்முறை 12.51 லட்சமாக அதிகரித்திருக்கிறது.

முதல் இடம்: சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்பார்த்திருக்கும் ஐந்து மாநிலங்களில் முதல் முறை வாக்காளர்கள் அதிகபட்சமாகப் பதிவான மாநிலமாகத் தமிழ்நாடு நிமிர்ந்து நிற்கிறது.

அசாம் (5.75 லட்சம்), மேற்கு வங்கம் (5.23 லட்சம்), கேரளம் (4.24 லட்சம்), புதுச்சேரி (23,033) என்கிற எண்ணிக்கையில் முதல் முறை வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். இளம் வாக்காளர்களைப் (21-29 வயது) பொறுத்தவரை, மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 1.31 கோடி பேர் உள்ளனர். இரண்டாவது இடத்தில் 1.05 கோடி இளம் வாக்காளர்களைச் சந்திக்கத் தமிழ்நாடு தேர்தல் களம் காத்திருக்கிறது.

பால்புதுமையர் வாக்கு:

இந்தியத் தேர்தல் ஆணையம், மூன்றாம் பாலினத்தவருக்கு 1994இல்தான் வாக்குரிமை அளித்தது. அதிலும் தனித்த அடையாளத்துடன் வாக்குரிமை வழங்கப்பட்டது 2009 பொதுத் தேர்தலில் இருந்துதான். தற்போது ஐந்து மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தமிழ்நாட்டில்தான் அதிகபட்சமாக 7,617 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். நிச்சயம் இவர்களிலும் இளம் வாக்காளர்கள் கணிசமாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.

மற்ற நான்கு மாநிலங்களில் சில நூறு மூன்றாம் பாலின வாக்காளர்களே பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு கிடைத்த 2,530 பேர் தற்போது 100 வயதைப் பூர்த்திசெய்து இந்தத் தேர்தலிலும் வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். மொத்தம் 5.67 கோடி வாக்காளர்களில் 20.72% பேர் 29 வயதுக்கு உள்பட்டவர்கள். இவ்வளவு இளைஞர்கள் தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப்போகிறார்கள் என்பது இந்தத் தேர்தலின் முக்கியமான அம்சம்!

SCROLL FOR NEXT