இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துவருவதாக அறியப்படுகிறது. ரூபாயின் மதிப்பைத் தீர்மானிப்பது யார், எதனால் இந்தச் சரிவு, இதைச் சமாளிக்க வழிகள் உண்டா என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவோம்.
இந்திய நாணயத்தின் மதிப்பை அரசோ, ரிசர்வ் வங்கியோ நேரடியாகத் தீர்மானிப்பதில்லை. சர்வதேசச் சந்தையில் ரூபாய்க்கான தேவை, வழங்கல் ஆகியவற்றைப் பொறுத்தே அதன் மதிப்பு மாறுபடுகிறது. எடுத்துக்காட்டாக, சந்தையில் வெங்காயத்தின் விலை எவ்வாறு அதன் தேவை, வரத்து ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறதோ, அதுபோல்தான் ரூபாயின் மதிப்பும்.
முக்கியமாகப் பிற நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடுவதன் வழியாகத்தான் ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், ஒரு அமெரிக்க டாலரை வாங்க 96 இந்திய ரூபாய் தரும் நிலை இந்த மே மாதத்தில் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 85ஆக இருந்தது கவனிக்கத்தக்கது. இதுதவிர, உள்நாட்டில் ரூபாயின் மதிப்பானது பணவீக்கத்தைப் பொறுத்தது. அதாவது, குறிப்பிட்ட அளவு ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிகிறது என்பதைச் சார்ந்தது.
ஏற்றுமதி - இறக்குமதி
இந்தியப் பொருள்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் சூழலில் ரூபாயின் மதிப்பு கூடும். எடுத்துக்காட்டாக, திருப்பூர் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது, அவர்களுக்கு டாலர் அல்லது யூரோவில் பணம் கிடைக்கும்.
அந்த உரிமையாளர்கள் இங்குள்ள தொழிலாளர்களுக்கும் மூலப்பொருள் வழங்குபவர்களுக்கும் ஊதியம் பட்டுவாடா செய்ய டாலர் அல்லது யூரோவை இந்திய ரூபாயாக மாற்றுவார்கள். இதனால் ரூபாய்க்கான தேவை அதிகரிக்கும்.
இதன் மூலம் ரூபாயின் மதிப்பு கூடும். மறுபக்கம் கச்சா எண்ணெய், தங்கம், மின்னணுப் பொருள்களின் இறக்குமதி அதிகமாவதால் ரூபாயின் மதிப்பு சரிகிறது. ஏனெனில் கச்சா எண்ணெய், தங்கம் முதலானவற்றை இந்திய ரூபாயைக் கொண்டு நேரடியாக வாங்க முடியாது.
டாலர்களாக இந்திய நாணயத்தை மாற்றுவதன் வழியாகத்தான் கச்சா எண்ணெய் இறக்குமதி நடைபெறுகிறது. அதேபோன்று இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும்போது விமான நிலையத்தில் இந்திய ரூபாயைக் கொடுத்து அந்த நாட்டின் நாணயமாக மாற்றுவார்கள்.
இப்படிச் செய்யும்போதும் ரூபாயின் தேவை குறைந்து, அதன் மதிப்பும் குறையும். ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாகும்போது பணத்தின் மதிப்பு குறையும். இந்தியா தனது 80% எரிசக்தித் தேவைக்கு அயல்நாடுகளைச் சார்ந்திருப்பதால், அதிக அளவில் இறக்குமதி செய்யும் நிலை நீடிக்கிறது.
ஈடுசெய்யும் வழிகள்
டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற இந்தியத் தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மென்பொருள் சேவைகளை வழங்கி, அதற்குப் பதில் கோடிக்கணக்கில் டாலர்களை இந்தியாவுக்குள் கொண்டுவருகின்றன.
இந்தியாவின் மென்பொருள் துறைக்கு உலகளாவிய வரவேற்பு இருக்கவே பன்னாட்டுப் பெருநிறுவனங்கள், முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்படி இந்தியாவுக்குள் வரும் டாலர்கள் இங்குள்ள ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்க வேண்டி இந்திய ரூபாயாக மாற்றப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் டாலரைக் கொடுத்துவிட்டு இந்திய ரூபாயை அவர்கள் வாங்குவதால் ரூபாய்க்கான தேவை அதிகரித்து அதன் மதிப்பும் உயர்கிறது.
இவ்வாறு ஐடி நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்குள் வரும் டாலர்கள் நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பலப்படுத்துகின்றன. அதேபோன்று வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்கள் தாங்கள் ஈட்டும் பணத்தை நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதன் மூலமும் வெளிநாட்டு நாணய வரத்து அதிகரிக்கிறது.
இப்படியாக, அயல்நாடுகளின் நாணயங்கள் இந்தியா வந்தடைவதால் இறக்குமதிக்காக நாம் செலவிடும் பணப்பற்றாக்குறை ஓரளவு ஈடுகட்டப்படுகிறது.
நேரடி / தொகுப்பு முதலீடு
அந்நிய நேரடி முதலீடானது நீண்ட காலத் திட்டங்களின் அடிப்படையில் தொழிற்சாலைகள், வணிகங்களில் செய்யப்படும் முதலீடாக இருப்பதால் அவற்றின் ஆயுள்காலம் அதிகம்.
மறுபுறம் இந்தியப் பங்குச்சந்தை, பத்திரங்களில் செய்யப்படுவது அந்நியத் தொகுப்பு முதலீடு (Foreign Portfolio Investment). இது நிலையற்றது, ஊகங்களின் அடிப்படையில் இயங்கக்கூடியது.
இந்த முதலீட்டாளர்கள் விரைவான லாபத்தை எதிர்பார்த்து நாட்டுக்குள் வருவார்கள். ஏதேனும் ஆபத்து எனத் தெரிந்தாலோ, வேறு நாடுகளில் அதிக லாபம் கிடைத்தாலோ உடனடியாக முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு வெளியேறிவிடுவார்கள்.
அந்நியத் தொகுப்பு முதலீடுகள் உள்ளே வரும்போது, பங்குச் சந்தை உச்சத்துக்குச் செல்லும்; வெளியேறும்போது சந்தை பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும்.
மேற்காசியப் போர்ப் பதற்றமும், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் ஆபத்தும் தற்போது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாட்டால் அதன் விலை அதிகரிக்க அதிகரிக்க அதன் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்துக்குப் பெரும் சுமையாக மாறிவருகிறது.
டாலரின் மதிப்பு ரூ.85ஆக இருந்தபோது, 100 டாலர் மதிப்புள்ள ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்க ரூ.8,500 கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், அதே பீப்பாய் எண்ணெய்க்குத் தற்போது, ரூ.9,600 கொடுக்க வேண்டியிருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் தலையீடு
இவை தவிர, அமெரிக்காவின் வட்டி விகிதங்கள் உயரவே முதலீட்டாளர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறிப் பாதுகாப்பாகத் தங்கள் சொந்த நாடுகளுக்கு முதலீடுகளைக் கொண்டுசெல்லும் அபாயமும் மூண்டுள்ளது.
இது மாதிரியான சந்தர்ப்பங்களில் ரூபாயின் மதிப்பு மிக மோசமாகச் சரிவதைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி தலையிடுகிறது. அயல்நாட்டு முதலீட்டாளர்கள் ரூபாய் மதிப்பிலான தங்களின் சொத்துக்களை விற்றுவிட்டு, டாலரை நோக்கிச் செல்லும்போது இந்திய ரிசர்வ் வங்கி தனது இருப்பில் உள்ள டாலர்களைச் சந்தையில் விற்கும்.
இது சந்தையில் ரூபாய்க்கான தேவையை அதிகரித்து அதன் வீழ்ச்சி வேகத்தைக் குறைக்கும். அடுத்து, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி, ரெபோ விகிதத்தை உயர்த்தும். இதனால், அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்தியாவிலேயே நல்ல வட்டி கிடைக்கும்.
மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய வங்கிகளில் டாலராகவோ, பிற நாட்டு நாணயமாகவோ டெபாசிட் செய்யச் சிறப்புச் சலுகைகளை அறிவிக்கும்.
இதுபோன்ற உத்திகள் ரூபாயின் மதிப்பை ஓரளவு பாதுகாக்கத் தற்காலிகமாக உதவலாம். இருப்பினும், நிரந்தரத் தீர்வுக்கு, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தேவைகளைக் குறைக்கும் வழிகளை இந்தியா கண்டடைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.