தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (Special Intensive Revision -SIR) தொடங்கி நடைபெற்றுவருகின்றன. அரசியல் கட்சிகள் மத்தியில் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே காணப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கம் செலுத்தும் எனக் கருதப்படும் நடவடிக்கை இது.
வாக்காளர் பட்டியல்: தேர்தலை நடத்துவது மட்டுமல்ல, தேர்தலுக்கு முன்னேற்பாடாக வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதும் தேர்தல் ஆணையத்தின் மிக முக்கியமான பணியே. இந்தியாவில் ஆண்டுதோறும் சிறப்புச் சுருக்கத் திருத்தம் (எஸ்.எஸ்.ஆர். - Special Summary Revision) தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
மரணமடைந்த வாக்காளர் பெயர் நீக்கம் / புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், இடமாற்றம் ஆனவர்களின் பெயர்கள் நீக்கம் / சேர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதையொட்டி வரைவு வாக்காளர் / இறுதிப் பட்டியல் வெளியிடுவதும் தேர்தல் ஆணையத்தின் பணியே. இந்தப் பணி அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும்.
சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி: ஒவ்வோர் ஆண்டும் வாக்காளர் சுருக்கத் திருத்தம் நடைபெறுவது போல, குறிப்பிட்ட ஆண்டுகள் இடை வெளியில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடை பெறுவதும் வழக்கம்தான். அதாவது, எஸ்.ஐ.ஆர். என்பது தேவையைப் பொறுத்துத் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கை.
1951 - 2004 காலக்கட்டத்தில் எட்டு முறை தேர்தல் ஆணையத்தால் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக, சிறப்புத் தீவிர திருத்தம் நடத்தப்பட்டு 21 ஆண்டுகள் ஆகின்றன. எஸ்.எஸ்.ஆர். போல அல்லாமல் எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறபோது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னணி என்ன? - எஸ்.ஐ.ஆர். என்பது வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை உறுதிசெய்வதற்காகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் பெரிய அளவிலான, வீடுவீடாகச் சென்று சரிபார்க்கும் இயக்கம் என்றும் சொல்லலாம். பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை உருவாக்குவதே இதன் நோக்கம். தகுதியுள்ள ஒவ்வொரு குடிநபரும் வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்வதாகும்.
அதேபோலத் தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். 2026இல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம் உள்பட 12 மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகளில் இந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்துவரும் நிலையில், தேர்தல் ஆணையம் இதற்குப் பல்வேறு காரணங்களைப் பட்டியலிடுகிறது. விரைவான நகரமயமாக்கல், மக்கள் இடப்பெயர்வு, இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதிபெறுவது, வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் இடம்பெற்றிருப்பது போன்ற காரணிகளைத் தேர்தல் ஆணையமும், அதன் பணிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களும் தெரிவிக்கின்றனர்.
பிஹாரில் நடந்தது என்ன? - நீண்ட காலமாக, தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெறாமல் இருந்த சூழலில், 2025 ஜூனில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதிப் பட்டியலில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்து சர்ச்சையானது.
பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட எளிதில் வழங்க முடியாத ஆதாரங்கள் கேட்கப்பட்டதால் ஏழை, எளிய வாக்காளர்களால் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதில் ஆவணமாக, தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை, இந்திய அரசு வழங்கிய ஆதார் அட்டை ஏற்கப்படாததும் சர்ச்சையானது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றது.
உச்ச நீதிமன்றம், வாக்காளர் பட்டியல் திருத்த செயல்முறையைத் தடைசெய்ய மறுத்தது. ஒரு சட்டபூர்வ நடைமுறை என்பதால், அதை இடைநிறுத்த முடியாது என்றே நீதிமன்றம் கூறியது. ‘வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பெயர்களையும், நீக்கப்பட்ட காரணங்களுடன் வெளியிட வேண்டும். மீண்டும் பதிவு (re-registration) செய்வதற்கான நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்.
ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஏதேனும் அரசின் அடையாள ஆவணம் போதுமானதாக இருக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. இத்தீர்ப்புக்குப் பிறகு நடைபெற்ற பதிவில் மீண்டும் 21.53 லட்சம் பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். என்றாலும் 47 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.
உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டதை, நிர்வாகக் குறை என்று தேர்தல் ஆணையம் கூறியதும் விமர்சனத்துக்கு வழிவகுத்தது. 47 லட்சம் பேர் நீக்கத்துக்கு மரணம் / இரட்டைப் பெயர் / இடமாற்றம் / கண்டறிய முடியவில்லை என்று பொத்தாம் பொதுவாக மட்டுமே தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
தமிழ்நாட்டில் எப்படி? - தமிழ்நாட்டில் இதற்கு முன்பு 2002 - 2004 காலக்கட்டத்தில் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு இப்போதுதான் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியை எதிர்த்து திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன. மறுபுறம், ஆதரவாக அதிமுகவும் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
என்ன தேவை? - அரசமைப்பு சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்ள முழு உரிமையும் இருக்கிறது. இந்தப் பணிக்குத் தேர்தல் ஊழியர்கள் மட்டுமல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பது அவசியம். இந்தியாவில் 100 சதவீத வாக்கு என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.
வாக்களிப்பதில் சுணக்கங்களும் இருக்கவே செய்கின்றன. இந்தச் சூழலில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதில் வாக்காளர்கள் அலைக்கழிக்கப்படாமல் இருப்பதையும் அவர்கள் எளிமையாகப் பட்டியலில் இடம்பெறுவதையும் உறுதிசெய்ய வேண்டும். குடியுரிமை சார்ந்து மக்களுக்குத் தேவையற்ற சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்கும் வகையிலான ஆவணங்களைப் பெற வேண்டும். அப்போதுதான் இந்நடவடிக்கையில் அனைவருக்கும் நம்பிக்கை பிறக்கும்!