சிறப்புக் கட்டுரைகள்

பாக்யராஜ்: முந்தைய தலைமுறையின் ரசிக்கத்தக்க பிரதிநிதி | அஞ்சலி

திரைப்படக் கதாநாயகர்களின் தோற்றம் சார்ந்து உருவாக்கப்பட்டிருந்த கட்டமைப்பில் உடைப்பை ஏற்படுத்தியவர்

ஆனந்தன் செல்லையா

வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் ரயிலில் அபாயச் சங்கிலி இழுக்கப்படுகிறது. ரயிலை நிறுத்திய பெரியவர், தண்டவாளத்தில் எதையோ தேடிக் கண்டெடுத்துக் கொண்டுவருகிறார். அது தாயற்ற ஒரு குழந்தை தவறவிட்ட ரப்பர் நிப்பிள். குழந்தைக்காக ரயிலை நிறுத்தி அபராதம் செலுத்தும் பெரியவர்தான் படத்தின் நாயகன்.

1991இல் வெளிவந்த ‘பவுனு பவுனுதான்’ படத்தில் பாக்யராஜ் அறிமுக​மாகும் காட்சி இது. சாகச நாயகர்​களுக்கு நடுவே, எளிமையான செயல்களே பாக்யராஜுக்குப் போதுமானதாக இருந்தன. அவருடைய படங்கள் வணிகரீதியான சட்டகத்​திலிருந்து பெரிதாக விலகிய​தில்லை. ஆனால் அவர் முன்னிறுத்திய நாயகனின் முதன்மையான அடையாளம், சராசரி மனிதனால் வெளிப்​படுத்​தப்​படக்கூடிய பரிவும் புத்தி​சாலித்​தன​மும்தான்.

சும்மா இருக்காதவர்

அண்மையில் இறந்த பாக்யராஜுக்கு 73 வயது. முதுமை காரணமாக வேலைக்கு விடைகொடுத்து​விட்டுச் சாய்வு நாற்காலியில் இளைப்பாறுபவராக அவர் இருக்க​வில்லை. வாய்ப்பு இருக்கும்வரை ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற தொழில்​சார்ந்த முனைப்பு மட்டுமே, இதற்குக் காரணமாக இருந்திருக்க முடியாது. அவர் சும்மா இருக்கக்​கூடியவரல்ல என்பதுதான் முக்கியக் காரணம்.

அவருக்கெனத் திரைப்​படங்களில் சில கதாபாத்​திரங்கள் காத்திருந்தன. ‘ரியாலிட்டி ஷோ’, யூ டியூப் அலைவரிசைகள், திரைப்பட விழா என ஏதேனும் ஒன்று அவரது நேரத்தைக் கேட்டுக்​கொண்டே இருந்தது.

நடிகர், கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை பாக்யராஜ் பகிர்ந்து​கொண்டே இருந்தார். இடைவிடாத பங்கேற்பு அவரின் முதுமை குறித்த மதிப்பீடுகளை ரசிகர்​களிட​மிருந்து விலக்கியே வைத்திருந்தன எனலாம்.

உதயமான நாயகன்

1977இல் வெளியான ‘16 வயதினிலே’ பல விதங்களில் தமிழுக்கு முக்கியமான படம். பாக்யராஜ் என்கிற கதாசிரியர் அடியெடுத்து வைக்கவும் அது வழியமைத்​துக்​கொடுத்தது. அதில் அவர் துணை இயக்குநராகப் பணிபுரிந்தார்.

அதன் இயக்குநரான பாரதிராஜா வைத்திருந்த கதைக்குத் தகுந்த நடிகர்களைத் தேர்வுசெய்தல், கதாபாத்திர வடிவமைப்பு, திரைக்​கதைக்கு வலுசேர்த்தல் எனச் செறிவூட்​டியதில் பாக்யராஜின் பங்களிப்பு முக்கிய​மானது.

‘சுவரில்லாத சித்திரங்கள்’ மூலமாக இயக்குந​ராகவும் நாயகனாகவும் களமிறங்க அவர் ஆயத்தமாகிக்​கொண்​டிருந்த சூழலில்தான், பாரதிராஜாவால் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் நாயகனாக ஆக்கப்​பட்டார்.

அதுவரை படங்களில் நாயகனுக்குத் தோற்றம் சார்ந்து உருவாக்​கப்​பட்​டிருந்த கட்டமைப்பில் பாக்யராஜின் வருகை உடைப்பை ஏற்படுத்​தியது. மாநிறமான, மூக்குக்​கண்ணாடி அணிந்த, அனைத்துக் குடும்​பங்​களிலும் சாதாரணமாகக் காணப்படக்கூடிய சாயலுடன் கூடிய நாயகனை தமிழ் சினிமா கண்டது.

பிற்காலத்தில் பாக்யராஜின் முகாமிலிருந்து பாண்டிய​ராஜன், பார்த்திபன், லிவிங்ஸ்டன் ஆகியோர் நாயகன் ஆவதற்கும் இந்நிகழ்வு பாதை அமைத்தது. நாயகனுக்குக் குரல் சார்ந்து உருவாக்​கப்​பட்​டிருந்த கற்பிதங்களும் பாக்யராஜுக்குத் தொடக்கத்தில் சவாலாக இருந்ததைப் புரிந்து​ கொள்​ளலாம்.

‘புதிய வார்ப்புகள்’ படத்தில் அவருக்கு கங்கை அமரன் பின்னணிக் குரல் கொடுத்​திருந்தார். போகப்போக அவரது குரலும் தனி அடையாளங்களில் ஒன்றாக மாறியது. பின்னாளில் பாட்டுப் பாடும் அளவுக்கு அவரது தன்னம்​பிக்கை வளர்ந்தது. எனினும் டைட்டில் பாடலில் கதை சொல்​லியின் குரலாக இடம்பெற்றால் போதும் என வரையறுத்​துக்​கொண்​டதுதான் பாக்யராஜின் பலம்.

புது வகை நகைச்சுவை

பாக்யராஜ் நகைச்சுவையில் புதிய வகைமையை உருவாக்கினார். எம்ஜிஆரும் சிவாஜியும் நகைச்சுவைத் திறனை அவ்வப்போது வெளிப்​படுத்​தி​யிருந்​தாலும், நகைச்சுவை நடிப்பு என்பது நாயகனுக்கு சம்பந்தப்படாத தனித்துறையாகவே அணுகப்​பட்டது.

பாக்யராஜின் நாயகன் சிரிப்​பூட்​டக்​கூடிய​வ​னாகவும் இருந்தான். அதற்காகத் தன்னையே பரிகசித்​துக்​கொள்ளவும் அவன் தயங்கவில்லை. இயல்பான வாழ்க்கையில் சிரித்துக் கடக்க வேண்டிய சில தர்மசங்கடமான தருணங்கள், பாக்யராஜின் படங்களில் பதிவு செய்யப்​பட்டன.

எடுத்துக்​காட்டாக, ‘சுந்தர​காண்டம்’ படத்தில் ஆசிரியராக ஒரு பள்ளியில் சேரும் நாயகனுக்கும் தேர்ச்சி அடையாமல் இன்னும் படித்துக்​கொண்டு இருக்கும் வெள்ளந்தியான அவனது முன்னாள் நண்பனுக்குமான உரையாடலைக் கூறலாம். சில விநோதமான உதிரிகளும் சித்தரிக்​கப்​பட்டனர்.

‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தில், மறைவாகப் புகைத்​துக்​கொண்​டிருக்கும் நாயகன், தனது தந்தை வருவதைப் பார்த்து, அதை அவசரமாக மறைப்பான். தந்தை கோபத்துடன் கேட்பார்: ‘எங்கே நான் கேட்டுரு​வேன்னுதானடா மறைச்சு வைக்கிற?’. தந்தையாக நடித்த கல்லாப்​பெட்டி சிங்காரத்தின் தொனியில் இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்!

பேச்சுக்கு வந்த புது விஷயங்கள்

கதை எழுதக்கூடிய நடிகர் என்பது பாக்யராஜின் தனிச்சிறப்பு. ஒவ்வொரு​வருக்கும் ஒரு கதை இருக்கிறது என்கிற திரைக்கதை மந்திரத்தை நன்கு உணர்ந்தவராக பாக்யராஜ் இருந்தார்.

உயிர்ப்பான கதாபாத்​திரங்கள், அனைத்துக் குடும்​பங்​களிலும் நிகழ்வதற்குச் சாத்தியமான உரசல்கள், அரவணைப்புகள் ஆகியவற்றை அவரது கதைகள் உள்ளடக்கி​யிருந்தன. அவர் எழுதிய நாயகக் கதாபாத்​திரங்கள் உணர்ச்சி ரீ​தியாகப் புதிய எல்லைகளுக்குள் நடமாடின.

ஆண் - பெண் உறவு அவருக்குக் கைவந்த பேசுபொருள். ஆண்களை உயர்த்திப்​பிடிக்கும் வழக்கமான வணிகச் சூத்திரத்​தில்தான் அவரும் இயங்கினார். உடல்கவர்ச்சியை மையப்படுத்தி ஆண்-பெண் நெருக்​கத்தைச் சித்தரிக்கும் காட்சிகளுக்கும் டூயட் பாடல்களுக்கும் அவரது படங்கள் விதிவிலக்கு அல்ல. ஆனால், குடும்ப அமைப்பில் ஆணின் தவறுகளைப் பேச அவர் தயாராக இருந்தார்.

அத்தகைய குறைகள் கொண்ட கதாபாத்​திரங்களில் நடிக்கவும் அவர் தயங்கவில்லை. மனைவிக்குத் துரோகம் இழைத்த கணவனாக ‘மௌன கீதங்கள்’ படத்தில் அவர் நடித்தார். ‘

அப்பாக்கள் சில பேரு செய்கின்ற தவறைத்தான் அடியேனும் செய்தேன் முன்னாளிலே’ என தந்தை சொல்வதும், ‘அது என்ன தப்பு?’ என மகன் கேட்பதுமான ‘டாடி டாடி ஓ மை டாடி’ பாடலும் அக்காலத்தில் துணிச்சலான முயற்சிதான்.

‘அந்த 7 நாட்கள்’ படத்தின் முடிவு இன்றுவரைக்கும் விவாதத்​துக்குரிய ஒன்றாக இருக்கிறது. வரதட்சிணைக்கு எதிரான குரல் ‘தாவணிக் கனவுகள்’ படத்தில் இடம்பெற்றது.

பாக்யராஜின் முந்தைய படங்களைக் காட்டிலும் நாயகியின் ஆளுமையை ‘பவுனு பவுனுதான்’ உயர்த்திக் காட்டியது. தங்களது சிரமங்களைப் பேச முயல்கிறவனாக இருந்த பாக்யராஜின் நாயகன் பெண்களால் ஆதரிக்​கப்​பட்டான். பொதுவாக, அவருடைய படங்களில் இடம்பெற்ற பாலியல் குறித்த பேச்சுகள் விமர்சனங்​களுக்கு உள்ளாயின; அதேநேரம் திரையரங்குக்கு மக்கள் கூட்டத்தையும் வரவழைத்தன.

ஓல்டு இஸ் கோல்டு

அவர் நடத்திய ‘பாக்யா’ வார இதழ் வாசகர்களது வரவேற்பைப் பெற்றது. இசையமைப்​பாளர், பாடல் ஆசிரியர் போன்ற பொறுப்பு​களிலும் அவர் ஒரு சுற்று பயணித்தார். சாதி வேறுபாடுகளை விமர்சிக்கும் கதைக்காக மட்டுமல்​லாமல், பாக்யராஜ் அமைத்த பாடல்களுக்​காகவும் ‘இது நம்ம ஆளு’ நினைவு​கூரப்​படும்.

எனினும் இசையமைப்பு, ஓர் இயக்குநராகத் தனக்கு ஏற்பட்ட விலகல் என்று பிற்காலத்தில் அவர் குறிப்​பிட்​டிருக்​கிறார். 1989இல் அவர் தொடங்கிய ‘எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ கட்சியும் அத்தகைய முயற்சியே.

தொடர்ந்து தனது அரசியல் நிலைப்​பாட்டை வெளிப்​படுத்​திக்​கொள்​பவராகவே இருந்து​வந்தார். கதாசிரியர் சங்கத் தலைவராக நடுநிலையோடு அவர் செயல்பட்டது, ‘சர்கார்’ படம் தொடர்பான பிரச்சினை​யின்போது பாராட்​டப்​பட்டது.

சுயமரி​யாதையை ஒருபோதும் விட்டுக்​கொடுக்​காதவராகவே பாக்யராஜ் இருந்ததை, அவரது நேர்காணல்கள் மூலம் உணர முடிகிறது. தனது படங்களில் மட்டுமல்லாது, தான் எதிர்கொண்ட பிரச்சினை​களிலும் பேச்சு​வார்த்தையை முன்னெடுப்​பவ​ராகத்தான் அவர் இருந்தார்.

கதாசிரியராகத் தனது தவறுகளையும் அவர் பேசத் தயங்கிய​தில்லை. ‘இது கொஞ்சம் ஓல்டு கிளைமாக்ஸ்தான், ஆனால் கோல்டு’ என ஒரு படத்தை அவர் முடித்து வைப்பார். அத்தகைய ​முந்தைய தலை​முறையின் ரசிக்கத் தகுந்த பிரதிநிதி ​பாக்​ய​ராஜ்!

- தொடர்புக்கு: anandchelliah@hindutamil.co.in

SCROLL FOR NEXT