உலகளாவிய ஒத்துழைப்பு, மனிதாபிமான உதவி வழங்குதல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா), இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1945-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்காக நிறுவப்பட்ட அமைப்பாகும். இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது.
இதற்கு முன்னோடியாக இதேபோன்ற அமைப்பு முதல் உலகப் போருக்குப் பிறகு வெர்சைல்ஸ் உடன்படிக்கையின் கீழ் (1919) ‘லீக் ஆஃப் நேஷன்ஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. சர்வதேச மோதல்களை போருக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க ஒரு மன்றத்தை வழங்குதல், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாக இருந்தன. மேலும், தொழிலாளர் நிலைமைகள், பூர்வீக குடிமக்களை நியாயமாக நடத்துதல், மனித மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்கள், ஆயுத வர்த்தகம், உலகளாவிய சுகாதாரம், போர்க் கைதிகள் மற்றும் ஐரோப்பாவில் சிறுபான்மையினரைப் பாதுகாத்தல் ஆகியவையும் இதன் நோக்கங்களாக இருந்தன.
முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பாரிஸ் அமைதி மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் (நோபல் பரிசு பெற்றவர்) இந்த அமைப்பை உருவாக்கினார். இது சில சிறிய மோதல்களைத் தீர்ப்பதில் வெற்றி கண்டது. சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது.
முதலாம் உலகப் போரின் பயங்கரமான இழப்புகள், ஆண்டுகள் செல்லச் செல்ல அமைதிக்கான அறிகுறி தெரியாததால், நவீனப் போரின் தவிர்க்க முடியாத பகுதியாகக் கருதப்படும் துன்பம் மற்றும் அழிவு மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க ஏதாவது ஒரு வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை உலக அளவில் வலுத்தது. அதன் விளைவாகவே இந்த ‘லீக் ஆஃப் நேஷன்ஸ்’ உருவானது என்று கூறினால் அது மிகையாகாது.
அதன்படி, எதிர்கால அமைதியை உறுதிசெய்யும் திறன் கொண்ட லீக் ஆஃப் நேஷன்ஸை நிறுவுவது அதன் பணியாக இருக்க வேண்டும் என்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த அமைப்பு முதலில் தீர்க்க வேண்டிய விஷயங்களில் இவைதான் பிரதானமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் வலியுறுத்தினார்.
இந்தப் பணி பிராந்திய மற்றும் ராணுவத் தீர்வை விட மிக அதிக வேகத்தில் நடந்தன, முக்கியமாக போர் ஆண்டுகளில் இந்தப் பொருள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதால். அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சில நடுநிலை நாடுகளில் உள்ள அதிகாரப்பூர்வமற்ற சமூகங்கள் பல திட்டங்களையும் வகுத்தன, மேலும் அவ்வாறு செய்வதன் மூலம் அவை முந்தைய சிந்தனையாளர்களின் முயற்சிகளைப் பயன்படுத்திக் கொண்டன.
நவம்பர் 1920-இல் லீக், 42 நிறுவன உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அதன் ஸ்தாபக ஆண்டில் (டிசம்பர் 1920-க்குள்) ஆறு மாநிலங்கள் இணைந்தன, மேலும் 7 நாடுகள் செப்டம்பர் 1924-இல் இணைந்தன, இதனால் லீக்கில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது. இந்நிலையில், கோஸ்டாரிகா டிசம்பர் 1924-இல் விலகியது, இது மிக விரைவாக விலகிய உறுப்பினராக மாறியது, அதைத் தொடர்ந்து, ஜூன் 1926-இல் விலகிய முதல் நிறுவன உறுப்பினராக பிரேசில் ஆனது. ஜெர்மனி (வீமர் குடியரசின் கீழ் ) செப்டம்பர் 8, 1926 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் லீக் ஆஃப் நேஷன்ஸில் அனுமதிக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எண்ணிக்கை 54 ஆக இருந்தது.
1930களின் முதல் பாதியில், 1932-இல் ஈராக் (நாடுகள் சங்கத்தின் ஆணையிலிருந்து பெயரளவில் சுதந்திரமானது ) மற்றும் 18 செப்டம்பர் 1934-இல் சோவியத் யூனியன் உட்பட 6 நாடுகள் இணைந்தன, ஆனால் ஜப்பான் மற்றும் ஜெர்மனி பேரரசு (ஹிட்லரின் கீழ்) 1933-இல் விலகியது. அப்போது மிகப்பெரிய அளவிலான 58 உறுப்பு நாடுகளை லீக் கொண்டிருந்தது.
டிசம்பர் 1920-இல், அனைத்து இறையாண்மை கொண்ட நாடுகளும் லீக்கில் அனுமதிக்கப்படும் என்ற அர்ஜென்டினா தீர்மானம் நிராகரிக்கப்பட்டதால், அர்ஜென்டினா முறையாக விலகாமல் (அனைத்து அமர்வுகளிலும் வாக்கெடுப்புகளிலும் கலந்து கொள்ளாமல்) வெளியேறியது. அது செப்டம்பர் 1933-இல் மீண்டும் தனது பங்களிப்பைத் தொடங்கியது.
1930களின் இரண்டாம் பாதியில் லீக்கின் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து பலவீனமடைந்தது. 1935 முதல் செப்டம்பர் 1939-இல் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதற்கு இடையே, எகிப்து மட்டுமே இணைந்தது (இதுவே கடைசியாக இணைந்த நாடு). 11 உறுப்பினர்கள் எஞ்சியிருந்தனர், மேலும் 3 உறுப்பினர்கள் (எத்தியோப்பியா , ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவாக்கியா) இருப்பதை நிறுத்தினர் அல்லது ராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வந்தனர். பின்லாந்தை ஆக்கிரமித்ததற்காக சோவியத் யூனியன் டிசம்பர் 14, 1939 அன்று வெளியேற்றப்பட்டது. இது லீக் செயல்படுவதை நிறுத்துவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக அமைந்தது.
அதேபோல், இரண்டாம் உலகப் போர் வெடிப்பதை இந்த அமைப்பால் தடுக்க முடியவில்லை. அதற்கு முதன்மையான காரணம் வல்லரசு நாடான அமெரிக்கா இந்த அமைப்பின் உறுப்பினராக இல்லாததுதான். மேலும் பல பெரிய நாடுகளின் சுயநலன்களுக்கு இந்த அமைப்பு அடிபணிந்தது என குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பு கலைக்கப்பட்டது. அதன் பொறுப்புகள், ஐக்கிய நாடுகள் சபைக்கு மாற்றப்பட்டன.
உலக அமைதி என்ற அதன் முக்கிய இலக்கை அடைய லீக் தவறிய போதிலும் , உலகம் முழுவதும் சட்டத்தின் ஆட்சியை விரிவுபடுத்துவதற்கான புதிய பாதைகளை உருவாக்க முடிந்தது. மேலும், கூட்டுப் பாதுகாப்பு என்ற கருத்தை வலுப்படுத்தியது. சிறிய நாடுகளுக்குக் குரல் கொடுத்தது. அதோடு பொருளாதார நிலைத்தன்மை மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை வளர்த்தது.
குறிப்பாக 1920-களில் மத்திய ஐரோப்பாவில் அதன் ஏராளமான கமிஷன்கள் மற்றும் குழுக்கள் மூலம் தொற்றுநோய்கள், அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர், காலனித்துவ கொடுங்கோன்மை, அகதிகள் நெருக்கடிகள் மற்றும் பொது வேலை நிலைமைகள் போன்ற பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியது. அதேபோல், ஆணை அமைப்பு, காலனித்துவ சக்திகளை சர்வதேச கண்காணிப்பின் கீழ் வைத்ததால், புதிய வடிவிலான அரசுரிமைக்கு வழி வகுத்தது என்பது தற்போதைய அறிஞர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
லீக் ஆஃப் நேஷன்ஸ் தோல்வியடைந்தாலும், இது உலக அமைதிக்கான முதல் பெரிய முயற்சியாக இருந்தது, மேலும் இதன் அனுபவங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்துக்கு வழிகாட்டின.
ஐ.நா சாசனம் ஜூன் 26, 1945 அன்று கையெழுத்திடப்பட்டது, மேலும் அக்டோபர் 24, 1945 அன்று ஐ.நா. அமைப்பு செயல்முறைக்கு வந்தது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், தேவைப்படுபவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குதல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துதல், உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவை ஐ.நா. அமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.
ஐக்கிய நாடுகள் சபையில் மொத்தம் 193 உறுப்பு நாடுகள் உள்ளன, அவை அனைத்தும் ஐ.நா. பொதுச் சபையின் பகுதியாகும். இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சனின் யோசனையின் பேரில்தான் இதுவும் உருவாக்கப்பட்டது, ஐ.நா. உலகின் மிகப்பெரிய பன்னாட்டு அமைப்பாக விளங்குகிறது. இதன் முக்கிய அலுவலகங்கள் ஜெனீவா, நைரோபி, வியன்னா, தி ஹைக் ஆகிய இடங்களில் உள்ளன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிர்காலப் போர்களைத் தடுக்கும் பிரதான நோக்கத்தை ஐ.நா. அமைப்பு கொண்டுள்ளது. இவ்வமைப்பு நிறுவப்பட்டபோது, இது 51 உறுப்பு நாடுகளைக் கொண்டிருந்தது. 2011-இல் தெற்கு சூடானின் சேர்க்கையுடன், உறுப்பினர்களின் எண்ணிக்கை 193 ஆக உள்ளது, இது உலகின் அநேகமாக அனைத்து இறையாண்மை நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
ஐ.நா.வின் ஆரம்ப காலகட்டங்களில் அமெரிக்காவுக்கும் மற்றும் சோவியத் யூனியன் அந்தந்த நட்பு நாடுகளுக்கும் இடையிலான பனிப்போரால் சிக்கலானது. 1960-களில் தொடங்கிய பரவலான குடியேற்ற விலக்கத்தைத் தொடர்ந்து ஐ.நா. உறுப்பினர் எண்ணிக்கை கணிசமாக வளர்ந்தது. அப்போதிருந்து, 80 முன்னாள் குடியேற்ற நாடுகள் விடுதலை பெற்றுள்ளன, இதில் 11 ஐக்கிய நாடுகளின் பொறுப்பாட்சிகள் அறக்கட்டளை பிரதேசங்கள் ஐ.நா. அறங்காவலர் குழுவால் கண்காணிக்கப்பட்டு வந்தன.
1970களில், பொருளாதார, சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஐ.நா.வின் வரவுசெலவுத் திட்டம், அமைதி காக்கும் பணிக்கான செலவினங்களை விட அதிகமாக இருந்தது. பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு, ஐ.நா. தனது களச் செயல்பாடுகளை மாற்றியும், விரிவுபடுத்தியும், பல்வேறு சிக்கலான பணிகளை மேற்கொண்டது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுச் சபை, பாதுகாப்புப் பேரவை, பொருளாதார, சமூகப் பேரவை (ECOSOC), பொறுப்பாட்சி மன்றம், அனைத்துலக நீதிமன்றம், ஐக்கிய நாடுகள் செயலகம் ஆகிய ஆறு முக்கிய உறுப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றை விட உலக வங்கிக் குழுமம், உலக சுகாதார அமைப்பு, உலக உணவுத் திட்டம், யுனெஸ்கோ, சிறுவர் நிதியம் ஆகிய சில சிறப்பு நிறுவனங்கள், நிதி அமைப்புகள், திட்டங்களையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கொண்டுள்ளது. அத்துடன், கூடுதலாக, அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு ECOSOC மற்றும் பிற நிறுவனங்களுடன் ஐ.நா.வின் பணிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகின்றன.
ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல், பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல், மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல், மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல், உறுப்பினர்கள் அனைவருக்கும் சமமான அந்தஸ்து, உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளுதல், உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்பவை இதன் செயல் திட்டங்களாக உள்ளன.
ஐ.நா.வின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுச் செயலாளர் ஆவார். தற்போதைய பொதுச் செயலாளராக போர்ச்சுகலைச் சேர்ந்த அன்டோனியோ குட்டெரெஸ் உள்ளார். இவர் 2017-ல் பதவியேற்ற 9-வது பொதுச் செயலாளர் ஆவார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பும் அதன் கிளை அமைப்புகளும் அமைதிக்கான நோபல் பரிசுகள் பலவற்றை வென்றுள்ளன, இருப்பினும் அதன் செயல்திறன் பற்றிய மதிப்பீடுகள் கலவையாக உள்ளன. சிலர் இவ்வமைப்பு அமைதி மற்றும் மனித மேம்பாட்டுக்கான ஒரு முக்கிய சக்தியாக இருப்பதாக நம்புகிறார்கள், வேறு சிலர் இது பயனற்றது, பக்கச்சார்பானது அல்லது ஊழல் மிகுந்தது என்றும் கூறுகின்றனர்.
உலகத்தில் அமைதியும், சமாதானமும், நாடுகளுக்கிடையே நட்புறவும் பேண வேண்டும், சர்வதேச வணிகம், ஒவ்வொரு நாட்டிலும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படல், போரற்ற உலகம் என்ற நோக்கத்தில் ‘லீக் ஆஃப் நேஷன்ஸ்’ தொடங்கப்பட்டாலும், அது தன்னுடைய அதிகாரமற்ற நிலையில் அமைப்பு ரீதியாக முடக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஐ.நா. அமைப்பு தொடங்கப்பட்டாலும், இதுவரை அதனுடைய நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. ஓரளவே வெற்றி கிடைத்துள்ளது. சில நேரங்களில் சக்தியற்ற, திறனற்ற அமைப்பாக ஐ.நா. மாறி விட்டது. இருப்பினும் இன்றைக்கும் ஐ.நா. அமைப்பு இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அது ஒரு ஆளுமையாகக் கட்டமைக்கப்படுகிறதே ஒழிய, பல விடயங்களில் அதனுடைய ஆளுமை எடுபடவில்லை என்ற நிதர்சனமான உண்மையை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
ஐ.நா.வின் மூலமாக, ஆப்பிரிக்க நாடுகளான ஹாங்கோ, சூடான் மற்றும் அங்குள்ள பெரிய ஏரி (கிரேட் லேக்ஸ்) சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன. மேலும் ஆப்பிரிக்காவில் உள்ள புரூன்டி, ருவாண்டா, மேற்கு ஆப்பிரிக்கா, லைபீரியா, கினியா, மாலி, மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள், சோமாலியா, தெற்கு சூடான் பிரச்சினை, லிபியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே ஏற்பட்ட இனச் சிக்கலை தீர்த்ததோடு, அங்கு அமைதி திரும்புவதற்கான முயற்சிகளையும் ஐ.நா. சபை மேற்கொண்டது. அதேபோல் அமெரிக்க கண்டங்களில் கொலம்பியா, ஹைட்டி போன்ற நாடுகளின் சிக்கல்களிலும் தலையிட்டது.
அதேநேரம், இந்தியாவில் நீண்டகாலமாக உள்ள காஷ்மீர் பிரச்சினை, மியான்மர் பிரச்சினை, இலங்கை இனவாத சிக்கல், பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே நடந்த போர்கள், லெபனான், ஏமன், ஆப்கானிஸ்தான், கம்போடியா பிரச்சினை என ஆசியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளின் பிரச்சினைகளில் அமைதி திரும்புவதற்கான முயற்சிகளை ஐ.நா. சபை மேற்கொண்டாலும், பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.
அதேபோல் ஐரோப்பிய நாடுகளில் சைப்ரஸ், கிரீஸ், கொசாவா, சவுத் காக்காசஸ், போஸ்னியா போன்ற நாடுகளின் இனப் பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டுப் போர் உள்ளிட்ட ஒரு நீண்ட பட்டியல் ஐ.நா.வால் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உலக நாடுகளிடையே உள்ளன.
(தொடர்வோம்...)