கிக் தொழிலாளர்கள் (Gig workers) என அழைக்கப்படும் தற்காலிகப் பணியாளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், அவர்களை அதிக அளவிலான திட்டங்கள் சென்றடைவதில்லை என்பது பேசுபொருள் ஆகியிருக்கிறது.
தற்காலிக, பகுதிநேர உணவு விநியோகம், ஒப்பந்த அடிப்படையில், குறுகிய காலம், நெகிழ்வுத்தன்மை கொண்ட பணிகளின் (task) அடிப்படையில் ஒதுக்கப்படும் வேலைகளில் ஈடுபடுபவர்கள் கிக் தொழிலாளர்கள் என்று வரையறுக்கப்படுகிறார்கள். இவர்கள் முதலாளி - தொழிலாளி (employer-employee) என்கிற வரைமுறைக்குள் வராத தொழிலாளர்கள். இவர்களின் பங்களிப்பையும் மத்திய அரசு, புதிய தலைமுறைப் பொருளாதாரத்தின் கீழ் அங்கீகரித்துள்ளது.
எது உண்மை?
2025-26 நிதிநிலை அறிக்கையில், 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தளத்தில் (e-Shram Portal) பதிவு செய்துள்ளவர்களுக்குக் காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. 2025 பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதனால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவித்தார்.
அப்போது முதல் இதுபோன்ற தற்காலிகப் பணிகளில் உள்ளவர்கள் இ-ஷ்ரம் தளத்தில் அதிவேகமாகப் பதிவுசெய்து வருகிறார்கள். எனினும், அந்த எண்ணிக்கையில் உள்ள இடைவெளி பெரும்பாலான பணியாளர்கள் அந்த அறிவிப்பு மூலம் பலன் பெறவில்லை என்பதையே காட்டுகிறது. மேலும், அதிகரித்துவரும் தற்காலிகப் பணியாளர்களின் எண்ணிக்கையை அளப்பதில் உள்ள போதாமையையும் காட்டுகிறது.
இதுவரை ஒரு கோடி பயனாளிகள் இணைந்துள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இ-ஷ்ரம் தளத்தில் வெறும் 8.58 லட்சம் தற்காலிகப் பணியாளர்கள் மட்டுமே பதிவுசெய்துள்ளார்கள். 2026 ஜனவரி 29ஆம் தேதி வரை இந்த எண்ணிக்கையைத்தான் மத்தியத் தொழிலாளர் - வேலைவாய்ப்பு அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. இந்தத் தளத்தில் இந்தத் தேதி வரையிலான தகவல்கள்தான் உள்ளன.
ஜனவரிக்குப் பின்னர் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்திருந்தாலும், அது மதிப்பிடப்பட்ட அளவில் 15 சதவீதத்தை மட்டுமே எட்டியிருக்கும். இதற்கு, 6இல் 5 தற்காலிகப் பணியாளர்கள் அரசால் அணுக முடியாத நிலையில் உள்ளார்கள் என்பதே அர்த்தம்.
நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட பல பதில்களில் இந்தியாவின் தற்காலிகப் பணியாளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைவிட அதிகம் என்று குறிப்பிடப்பட்டது.
இந்தத் தகவல் 2022ஆம் ஆண்டு ஜூனில் வெளியான நிதி ஆயோக்கின் இந்தியாவில் அதிகரித்துவரும் தற்காலிகப் பணியாளர்கள், டிஜிட்டல் தளப் பொருளாதார அறிக்கையில் வெளியான தகவலில் இருந்து எடுக்கப்பட்டது. 2020-21இல் பணியாளர்களின் எண்ணிக்கை 77 லட்சமாக இருந்திருக்கலாம் என்று அறிக்கை கணித்திருந்தது.
அமைப்புசாரா / தற்காலிகப் பணியாளர்கள்
தற்காலிகப் பணியாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது குறித்து அரசு முயற்சி எடுத்துக் கணக்கெடுக்காவிட்டால், நிதி ஆயோக்கின் அறிக்கையை மட்டும்தான் நம்பிக்கொண்டு இருக்க வேண்டும். அது 2024-25ஆம் ஆண்டில் 1.27 கோடியும், 2025-26ம் ஆண்டில் 1.43 கோடியும் இருப்பார்கள் என்று கணக்கிட்டுள்ளது.
தேசிய அமைப்புசாராத் தொழிலாளர்களின் தரவுகளை (National Database of Unorganized Workers – NDUW) ஆதாருடன் சேர்த்து, பதிந்து, நன்மைகளைப் பெறுவதற்காக அரசு அதை ஒருங்கிணைந்த தளமாக அமைத்துள்ளது. தற்காலிகப் பணியாளர்களுடன் எவ்வளவு அமைப்புசாராத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் இதன் மூலம் கண்காணிக்கலாம்.
2025ஆம் ஆண்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த காலமுறைக் கணக்கெடுப்பு விவரங்களில் இந்தியாவின் மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 61.6 கோடி எனவும், அதில் 2 சதவீதத்தினர் தற்காலிகப் பணியாளர்கள் எனவும் குறிப்பிடுகிறது. ஆனால், தொழிலாளர் எண்ணிக்கை குறித்த காலமுறைக் கணக்கெடுப்பு, தற்காலிகப் பணியாளர்களைத் தனியாக வகைப்படுத்தவில்லை.
நன்மைகள் என்ன?
கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த 2020ஆம் ஆண்டின் சமூகப் பாதுகாப்புத் தற்காலிகப் பணியாளர்கள் சட்டத்தின்படி பதிவுசெய்துள்ளவர்கள் மட்டுமே தற்காலிகப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு அந்தச் சட்டம் எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்துள்ளது.
விபத்துக் காப்பீடு, மகப்பேறு நன்மைகள், சமூகப் பாதுகாப்பு நிதி என மேலும் பல சலுகைகள் கிடைக்கும். 2025-26ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் காப்பீட்டுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியால் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
ஆனால், மாநிலங்களில் ஒரே மாதிரியான அளவில் பதிவுசெய்யப்படவில்லை. அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் 10 மாநிலங்களில் அதிகளவு நகரமயமாக்கப்பட்ட தமிழ்நாடு (31,654), தெலங்கானா (29,251), கேரளம் (11,219) ஆகியவைகூட இடம்பெறவில்லை.
நிதி ஆயோக்கின் 2022ஆம் ஆண்டு அறிக்கைப்படி, 21 துறைகளில் தற்காலிகப் பணியாளர்கள் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் விவசாயம், சுகாதாரம், கல்வி, சில்லறை வணிகம், உணவுத் துறையில் ஈடுபடுபவர்கள், போக்குவரத்து, வீட்டுவேலை உதவியாளர்கள் ஆகிய துறைகள் உள்ளது இ-ஷ்ரம் பதிவுகளின் அடிப்படையில் தெரியவருகிறது. நிச்சயமற்ற எதிர்காலம் கொண்ட இத்தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.