சிறப்புக் கட்டுரைகள்

நல்லகண்ணு என்னும் சமூக இயக்கம்!

மன நிறைவைத் தந்த பொது வாழ்க்கையை வாழ்ந்தவர்

Guest Author

தோழர் நல்லகண்ணுவின் அரசியல் போராட்டம், சிறை வாழ்வு, தலைமறைவு, எளிமை யாவும் நாடறிந்தது. ஆனால், அவரைக் குறித்துச் சிலர் மட்டுமே அறிந்த அகச் சிறப்புகள் அலாதியானவை, வியக்கத்தக்கவை.

ஆர்.என்.கே.வுக்கு வெளியூர் பயணங்கள் இல்லாதபோது அதிக நேரம் கட்சி அலுவலகத்தில் தான் இருப்பார். தன்னைச் சந்திக்க வந்திருப்பவர்கள் காத்திருப்பதை அறிந்தால், காத்திருப்பவர்களை அவரே காணச் செல்வது வியப்பூட்டும்.

பிரமுகர்கள் தொடங்கிக் கட்சி உறுப்பினர்கள் வரை அவர் சந்திப்பதும், உரையாடுவதும் இயல்பாகவே நடக்கும். பிறர் கூற்றுக்குச் செவி மடுப்பதை அவர் கடமையாகவே கருதினார். முகச்சுளிப்போ, தடித்த வார்த்தைகளோ வெளிப்பட்டதே இல்லை.

தன்னைச் சந்திக்கவரும் புதிய மனிதர்களிடம் கட்சியின் மாநில அலுவலகமான பாலன் இல்லம் குறித்துப் பேசுவது வழக்கம். நுழைவாயிலில் இருவர் காலடிகள் இருக்கும். ஒன்று உதயசங்கர், மற்றொன்று அவரது வாழ்விணையர் அமலா சங்கர்.

இருவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாட்டிய மேதைகள். அவர்களுக்குச் சொந்தமானதுதான் இன்றைய பாலன் இல்லத்தின் இடம். இதை மிக மிகக் குறைந்த விலைக்குக் கட்சிக்கு அவர்கள் வழங்கினார்கள். பல பேர் அதிக விலைக்குக் கேட்டும் தர மறுத்துக் கட்சிக்கு வழங்கியதாக ஆர்.என்.கே. கூறும்போது, அவரது முகத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

          

வாசிப்பின் ஆழம்

கட்சி மாநில அலுவலகத்தில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் நாள்தோறும் கூடுவது வழக்கம். ஒரு முறை கே.டி.கே.தங்கமணி (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பார்-அட்-லா) புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தார்.

தனது வாழ்வின் இறுதி நாள்களைக் கட்சி அலுவலகத்திலேயே அவர் கழித்துவந்தார். புத்தகத்தை மடியில் சாய்த்தபடி அவர் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார். இதனை உணர்ந்த ஆர்.என்.கே. அவர் அருகில் சென்று, “ஏன் கண் கலங்குகிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஒன்றுமில்லை, Uncle Tom’s Cabin நூல் வாசித்துக் கொண்டிருந்தேன். அது என்னை நிலைகுலைய வைத்துவிட்டது” என்றார். ஆர்.என்.கே. திரும்பி வந்து, அன்று அலுவலகத்தில் இருந்த என்னைப் போன்ற மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கே.டி.கே. குறிப்பிட்ட அந்த நூல் குறித்து விளக்கினார்.

“அமெரிக்கக் கறுப்பின மக்களின் துயரை வெளிப்படுத்திய நூல் இது. ரெஸ்கார்ட் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ரோஜெர்டோன், கறுப்பின மக்கள் மனிதர்களே அல்ல என்று தீர்ப்பளித்தார். அவர்கள் வெறும் கடைச் சரக்கு போன்றவர்கள். அவர்களை வாங்கலாம், விற்கலாம்.

அவர்களைக் கொன்றால்கூடக் குற்றமில்லை” என்கிற இந்தத் தீர்ப்புதான் Uncle Tom’s Cabin நூல் வெளிவரக் காரணமாக இருந்தது என விளக்கினார். ஆர்.என்.கே. இப்படிப் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்துக்கொண்டிருந்த கே.டி.கே. எழுந்துவந்தார்.

ஆர்.என்.கே.வைக் கட்டிப்பிடித்து வாழ்த்தினார். “நாங்களெல்லாம் ஐரோப்பாவில் படித்தவர்கள். எங்களுக்கெல்லாம் இது போன்ற நூல்களைப் படிக்க அங்கு வாய்ப்பிருந்தது. நல்லகண்ணு, ப.மாணிக்கம் போன்றவர்களெல்லாம் தமிழ்நாட்டில் படித்தவர்கள்.

அவர்களும் இதுபோன்ற அரிய நூல்களை வாசித்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது” என்று கே.டி.கே. நெகிழ்ந்தார். அந்த நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு, ஆர்.என்.கே.விடம் இருக்கும் வாசிப்பின் ஆழத்தை உணர்ந்துகொள்ள முடிந்தது.

சாதியால் தாழக் கூடாது!

ஆர்.என்.கே.வின் சிறை வாழ்க்கை பற்றிய பேச்சு எழும். அப்போது, மதுரை பாலு, மாரி மணவாளன் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட சூழல் குறித்து விளக்குவார். தான் இருந்த சிறைக் கொட்டடியைக் கடந்து தூக்குமேடைக்கு செல்லும் தோழர்களைப் பார்த்ததையும், எந்தவித அச்சமும் இன்றித் தங்கள் கரங்களை உயர்த்தி ‘இன்குலாப் சிந்தாபாத்’ என்று அவர்கள் முழங்கிக்கொண்டே தூக்கு மேடையை நோக்கி நடந்துசென்ற காட்சிகளையும் ஆர்.என்.கே. கூறும்போது, அவரது உடல் உணர்வலைகளால் குலுங்கும். சத்தமின்றி அவர் அழுவார்.

அவரிடம் புதைந்துகிடக்கும் மகத்தான மானுட ஈரம் அந்த நேரத்தில் வெளிப்படும். பொது வாழ்வில் அவரைப் பெரிதும் வருத்தப்படுத்தியது சாதிக் கலவரங்கள்தான். தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்கள் நிகழ்ந்தபோது, கட்சி முடிவின்படி அமைதி திரும்புவதற்கு அவர் நடைப்பயணம் மேற்கொண்டார்.

இதுபோன்ற ஒரு கலவரச் சூழலில்தான் அவருடைய மாமனாரும் கொல்லப்பட்டார். அப்போதும் சொந்தத் துயரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, மேலும் கலவரங்கள் பரவக் கூடாது என்பதற்காக அவர் துடித்தார்.

“தமிழ்ச் சமூகம் மொழியால், பண்பாடுகளால், கூடி வாழும் முறைமைகளால் நிகரற்றது. ஆனால், சாதியால் அது தாழ்கிறது. தமிழ்ச் சமூகம் தனக்குத்தானே உரையாடல் நடத்தி, சாதியை அது தோலுரித்துக் கொள்ளும் காலம் எழ வேண்டும்” என்று ஆர்.என்.கே. அடிக்கடி கூறுவார்.

வீழ்த்தப்பட வேண்டும்

சாதியக் கொடுமைகளுக்கு உள்ளாகும் எளிய மக்களுக்காகத் தலையீடுகள் செய்யவும், அவர்களுக்காகப் போராடவும் கட்சியில் தனித்த பிரிவு ஒன்று உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது இந்தக் கோரிக்கை பற்றி ஆழ்ந்து விவாதித்த கட்சி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் என்கிற அமைப்பைத் தோற்றுவித்தது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவராக ஆர்.என்.கே. இருந்தார்.

தர்மபுரியில் தலித் குடியிருப்புகள் எரிக்கப்பட்ட போதும், முஷ்ணம் தேர் எரிக்கப்பட்டபோதும், கோகுல் ராஜ் கொலை செய்யப்பட்டபோதும் சம்பவ இடங்களுக்கு ஆர்.என்.கே. சென்றார். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். “வர்க்கம் போல சாதியும் ஒரு யதார்த்தம்.

சுரண்டலை வீழ்த்துவதுபோல் சாதியும் வீழ்த்தப்பட வேண்டும். இதற்கு ஓர் இயங்கியல் அணுகுமுறை தேவை” என்று ஆர்.என்.கே. கூறுவார். கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ஒற்றுமை குறித்துச் சிந்திப்பவர்களில் ஆர்.என்.கே. முதன்மையானவர்.

இந்தியாவில் பிளவுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும் என்பதை எழுத்திலும், பேச்சிலும் அவர் பல்லாண்டு காலமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நிறைவு தந்த சமூக வாழ்க்கை

எதற்குமே கலங்காத, நிலைகுலையாத உறுதிகொண்ட ஆர்.என்.கே. தனது வாழ்விணையர் ரஞ்சிதத்தின் மறைவால் சற்று துவண்டுபோனார். வீடு, சுற்றம், உறவு என அவர் வாழ்ந்த வாழ்க்கைக் காலம் மிகவும் குறைவு.

படித்தவர்கள், பால்ய நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள், தனது வயது ஒத்த கட்சித் தோழர்கள் பலரின் பெயர்களை மனதில் பதித்து வைத்திருப்பார். நீண்ட காலம் சிறை வாழ்க்கை, தலைமறைவு வாழ்க்கை என வாழ்ந்த ஆர்.என்.கே. திருமணத்துக்குப் பிறகு கொஞ்சம் கூடுதல் நாள்கள் மனைவியோடும் குழந்தைகளோடும் செலவிட்டிருக்கலாம்.

“அதற்கெல்லாம் நேரம் கிடைக்கவில்லை” என்பார் ஆர்.என்.கே. எனினும், குறைகள் எதுவும் இல்லாதபடி தனது குடும்பத்தையும், குழந்தைகளையும் வாழ்விணையர் ரஞ்சிதம் நல்லபடியாகக் கவனித்துக்கொண்டார் என்கிற திருப்தி ஆர்.என்.கே.விடம் இருந்தது. தன்னுடைய கட்சி வாழ்க்கையும், பொது வாழ்க்கையும் தனக்கு மிகுந்த மன நிறைவைத் தந்ததாக ஆர்.என்.கே. அடிக்கடி கூறுவார்.

- மு.வீரபாண்டியன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

| இங்கே இடம்பெற்றுள்ள கட்டுரை, ஆர்.நல்லகண்ணு குறித்து விரிவான நூலான ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகத்தின் ‘அறவாழ்வின் அடையாளம்’ நூலில் வெளியானது. |

SCROLL FOR NEXT