வாக்குச் சாவடிகளை நோக்கிப் பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் பின்னால் இருப்பது அவர்களுடைய அரசியல் விழிப்புணர்வு. குடும்பத் தலைவரின் விருப்பமும் பரிந்துரையுமே தேர்தல் நாளில் பெண்களின் வேதவாக்காக இருந்த காலம் மலையேறிவிட்டது.
தங்கள் - குடும்பத்தின் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை மனதில் நிறுத்தி, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் ‘நிர்ணய சக்தியாக’ பெண் வாக்காளர்கள் உருவெடுத்துவிட்டனர்.
வாக்களித்தல் அவர்களது சுயசார்பின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இதன் விளைவாகக் கடந்த ஐந்து தேர்தல்களில் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் பெண்களே வாக்களித்து (Turnout) வந்திருப்பதைத் தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தியாவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 99.1 கோடி. இதில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 48 கோடி. தேசிய அளவில் ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்கள் ஏறக்குறைய 50 லட்சம் அதிகம் உள்ளனர்.
ஐந்து மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் 7.15 கோடி, மகாராஷ்டிரத்தில் 4.50 கோடி, மேற்கு வங்கத்தில் 3.73 கோடி, பிஹாரில் 3.51 கோடி, தமிழ்நாட்டில் 2.89 கோடி எனப் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்த ஆண் வாக்காளர்கள் 2.77 கோடி. ஆனால், ஆண்களைவிட 12 லட்சம் பெண் வாக்காளர்கள் இங்கு அதிகம் உள்ளனர்.
முதன்மை வாக்கு வங்கி
அதேபோல் பாலின விகித அடிப்படையில் தமிழ்நாட்டில் 1,000 ஆண் வாக்காளர்களுக்கு ஏறக்குறைய 1,044 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இந்த விகிதம்தான் தேர்தல் முடிவுகளை மாற்றும் ‘ஸ்விங் வோட்டர்ஸ்’ (Swing Voters) என்கிற மௌனப் புரட்சியாளர்களாக, வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக (Deciding Factor) பெண் வாக்காளர்களைக் கருதவைக்கிறது.
ஆண்களைவிட எண்ணிக்கை அடிப்படையில் பெண்கள் முதன்மை வாக்குவங்கியாகப் (Primary vote bank) பார்க்கப்படுவதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அது, பெரும்பாலான பெண் வாக்காளர்கள் தேர்தல் நாளுக்கு மிகச் சமீபமாகவே தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
தமிழ்நாடு உள்படப் பெரும்பாலான மாநிலங்களில் மூன்று முதல் நான்கு அணிகளாகக் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிடுகின்றன. விளைவாக, வாக்குகள் பிரிவதில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் என்பது 5,000 முதல் 20,000 வாக்குகளுக்குள்ளாகச் சுருங்கிவிடுகிறது.
இந்தக் கண்ணோட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பெண் வாக்காளர்களில் 2 முதல் 5 சதவீதம் பேர் இறுதி நேரத்தில் எடுக்கும் முடிவுகளால் தேர்தல் முடிவுகள் மாறிவிடுவது கடந்த பல தேர்தல்களில் நடந்திருக்கிறது.
பெண்களை மனதில் வைத்து...
நீண்ட காலமாக ஒரு கட்சியின் உறுப்பினராக அல்லாமல், அக்கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகள், சின்னம் ஆகியவற்றுக்கு அபிமானியாக இருப்பது, ஒரு குறிப்பிட்ட தலைவரின் ஆளுமையால் கவரப்பட்டு ஆதரிப்பது போன்ற அடிப்படையான காரணங்களுக்காக வாக்களிக்கும் பெண்கள், எல்லாப் பெரிய கட்சிகளுக்கும் அவற்றின் வாங்கு வங்கியின் அஸ்திவாரமாகத் திகழ்கிறார்கள்.
ஆனால், எந்தக் கட்சியையும் சாராத பெண் வாக்காளர்கள் இவர்களைவிட அதிகம். இவர்களில் படித்துக்கொண்டிருக்கும் பெண்கள், பட்டதாரிப் பெண்கள், படித்து வேலைக்குச் செல்பவர்கள், வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள், வீட்டிலிருந்தே சுயதொழில் செய்பவர்கள், இல்லத் தலைவியர் எனப் பலவாறான நிலைகளில் உள்ளனர்.
இவர்களே தேர்தல் முடிவுகளை மாற்றும் சக்திகொண்ட ‘ஸ்விங் வோட்டர்ஸ்’ என அழைக்கப்படு கின்றனர். இந்த நடுநிலைப் பெண் வாக்காளர்களை மனதில்கொண்டே நலத்திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்ற இலவசத் திட்டங்களைத் தாண்டி, தற்போது இலவச எரிவாயு, மகளிர் உரிமைத் தொகை, கல்வி கற்கும் காலத்துக்கான உதவித்தொகை, இலவசப் பேருந்துப் பயணம், கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி போன்ற திட்டங்கள், பெண்கள் நேரடியாகப் பயன்பெறும் திட்டங்களாக (Direct Benefit Schemes) அவர்களை மையப்படுத்தி வகுக்கப்படுவதும் அமல்படுத்தப்படுவதும், அவர்களின் வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்கான கட்சிகளின் பகீரத முயற்சியைக் காட்டுகின்றன.
ஏனென்றால், வீட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளின் மீது நேரடித் தாக்கம் செலுத்தும் எதுவொன்றையும் மூத்த பெண்கள் மிக முக்கியமாகக் கருதுகிறார்கள்.
அத்தியாவசியப் பொருள்களின் விலை, உணவு சமைப்பதற்கான எரிபொருள் செலவு, குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், குடும்பத்தின் மருத்துவச் செலவு ஆகியவைதான் பெண்களின் அன்றாட வாழ்வில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த அடிப்படையான வாழ்வாதாரப் பிரச்சினைகளின் மீது எந்த அரசை அல்லது கட்சியை அவர்கள் நம்புகிறார்களோ, அவர்களுக்கே ஆதரவு அதிகமாகக் கிடைத்துவிடுகிறது.
அதேநேரம், தற்போதுள்ள அரசியல் சூழலில், பாரம்பரியக் கட்சி அபிமானத்தைக் கடைப்பிடிக்கும் பெண்களும்கூட, தங்களுக்கு நடைமுறையில் கரம் கொடுக்கும் திட்டங்களை வழங்கும் அல்லது வழங்கப்போவதாக வாக்குறுதிகளைக் கொடுக்கும் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதைக் குறைத்து மதிப்பிட முடியாது.
இதனால்தான் பெண்களுக்கான நேரடி நலத்திட்டங்கள் - ஆளுங்கட்சிக்குப் பாதுகாப்புக் கவசமாக இருப்பதுடன், பெண்களை ஈர்க்கும் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தை எதிர்க்கட்சிகளுக்கு இந்தியா முழுவதும் ஏற்படுத்தியிருக்கின்றன.
பாதுகாப்பும் எதிர்காலமும்
நலத்திட்டங்களுக்கு அடுத்த இடத்தில் மதுப்பழக்கத்தால் சிதையும் குடும்பப் பொருளாதாரம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தல் அல்லது அது குறித்த அச்சம் ஆகியவை இளம் பெண்களின் வாக்களிக்கும் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மதுவிலக்கு என்பது பெண்களின் நீண்ட காலக் கோரிக்கை. மதுவின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்கிற முரண்பாட்டை அவர்கள் கவனத்தில் கொள்கின்றனர்.
இதனால், முழு மதுவிலக்கு அல்லது கடுமையான சட்ட ஒழுங்கு நிர்வாகம் குறித்த வாக்குறுதிகள் இளம் பெண்களை எளிதில் ஈர்க்கின்றன. இன்றைய இளம் பெண்கள் / புதிய பட்டதாரிப் பெண் வாக்காளர்கள் நலத்திட்டங்களை மட்டும் எதிர்பார்ப்பதில்லை.
உள்ளூரிலேயே கிடைக்கும் கண்ணியமான வேலைவாய்ப்பு, பணிப் பாதுகாப்பு ஆகியவற்றை எதிர்பார்ப்பதுடன், பெண்களை அரசியல் கட்சிகள் எவ்வாறு நடத்துகின்றன, பெண்களைக் குறித்துப் பொதுவெளியில் எவ்வளவு கண்ணியமாக மதிப்பிட்டுப் பேசுகின்றன என்பதையும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
தேர்தலில் போட்டியிடப் பெண்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கும் கட்சிகளை நோக்கிப் புதிய பெண் வாக்காளர்களில் ஒரு பகுதியினரின் கவனம் திரும்புவதையும் கவனிக்க வேண்டும். இதனால் பெரிய கட்சிகள் 2026இல் அதிகப் பெண் வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
இது ஆட்சிமன்றத்தில் பாலினச் சமநிலையை மேம்படுத்தலாம். அதேபோல், புதிய பெண் வாக்காளர்களில் ஒரு பகுதியினர் திரைப்பட நட்சத்திரங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு இருந்தாலும், பெரும்பான்மையானவர்கள் ‘பாதுகாப்பு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு’ ஆகியவற்றை யார் உறுதிசெய்கிறார்களோ, அவர்களுக்கே முன்னுரிமை அளிப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால், தமிழகத்தின் அடுத்த முதல்வரைத் தீர்மானிக்கும் மந்திரக்கோல் தமிழகப் பெண் வாக்காளர்களின் கைகளிலேயே இருக்கிறது!
- தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in