சிறப்புக் கட்டுரைகள்

நல்லகண்ணு: மக்கள் மறப்பதில்லை!

ஜெயகாந்தன்

விடுதலைப் போராட்டத்தில் நேரடியாகப் பங்குபெற்ற தலைமுறையினர் மெல்ல மெல்ல அருகிவருகின்றனர். தோழர் நல்லகண்ணு போன்றோர் அந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் கடைசிப் படை வீரராக இருப்பர்.

எனவே, இவர்களின் வரலாற்றை இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டியது, வேறு எப்போதையும்விட இப்போது அவசியம் ஆகிறது. ஏனெனில், இதுவே கடைசி வரிசைத் தருணம். இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் அனைவரும் தேசபக்த விடுதலைப் போரில் விளைந்தவர்கள்தான்.

அதற்குப் புறம்பான, எதிரான இயக்கங்கள் ஒரு சில அக்காலத்தில் இருந்தபோதிலும், அதற்கு வசப்படாத முற்போக்குச் சிந்தனை உடையவர்கள்தான் காங்கிரஸிலிருந்து கம்யூனிஸ்ட்டுகளாக மாறி விடுதலைப் போராட்டத்தில் இணைந்து அரசியல் பணியாற்றினர்.

          

அந்தப் பாரம்பரியத்தில் வந்த தேசபக்த அணியினரைச் சேர்ந்தவர் தோழர் நல்லகண்ணு. நமக்குக் கடந்த கால அரசியல் நெறிகளையும் நிகழ்கால அரசியல் கடமைகளையும் வலியுறுத்தி, கட்சிப் பேதமின்றி அனைத்து மக்களுக்கும் வழிகாட்டி வருகிற அரிய தலைவர்களுள் ஒருவர் தோழர் நல்லகண்ணு.

சுதந்திரப் போராட்டத்திலும் சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த மக்கள் போராட்டங்களிலும் தொடர்ந்து பங்கெடுத்ததால், சொந்த வாழ்க்கையைப் போராட்டக் களமாக்கிக்கொண்ட தியாகிகள் மிகச் சொற்பம். அவர்களில் ஒருவர் தோழர் நல்லகண்ணு.

இப்படிப்பட்ட தலைவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், அவர்களை மக்கள் மறப்பதில்லை. பொதுமக்கள் மறந்தாலும் உழைப்பாளி மக்கள் ஒருபொழுதும் மறக்க முடியாது இவர்களை.

மக்கள் மீது நான் கொண்ட நேசமே எவ்வளவு கொள்கை பேதங்கள் இடையில் இருந்தாலும், இத்தகு தலைவர்களோடு என்னை நெருக்கமும் நேசமும் கொள்ள வைத்திருக்கிறது. எண்பது வயதிலும் தியாகச் சீலர்கள் இளைஞர்களாக விளங்க முடியும் என்பதற்கு இன்னுமோர் உதாரணம் இவர்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வீர வரலாற்றை வணங்குகிறவர்கள் தோழர் நல்லகண்ணுவை வணங்காமலும் வாழ்த்தாமலும் இருக்க முடியுமா? எண்ணற்ற பாட்டாளி மக்களின் இதயத்தில் வீற்றிருக்கின்ற தோழர் நல்லகண்ணு.

தியாகம் வெல்லும்... அது வென்று இருக்கிறது. இன்னும் பல வெற்றிகளைக் காணவும் அது போராடிக்கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டம் ஆக்கபூர்வமானது. இந்த ஆக்கபூர்வமான போராட்டத்தில் இருந்து, தோழர் நல்லகண்ணு ஒருபோதும் ஓய்வுபெற மாட்டார்.

- ஜெயகாந்தன், ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர்.

| இங்கே இடம்பெற்றுள்ள கட்டுரை, ஆர்.நல்லகண்ணு குறித்து விரிவான நூலான ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகத்தின் ‘அறவாழ்வின் அடையாளம்’ நூலில் வெளியானது.

SCROLL FOR NEXT