“நேபாள நாட்டின் பசுங்குடில் வாயு உமிழ்வு கிட்டத்தட்ட பூஜ்ஜியம் எனலாம். ஆனால், தான் உருவாக்காத ஒரு பிரச்சினையின் சுமையை நேபாளம் சுமந்துகொண்டிருக்கிறது.
அதிக உமிழ்வை வெளியிடும் சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தார்மிகப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். எங்களுக்கு நிவாரண நிதி தேவையில்லை, எங்களுக்கு வேண்டியது நீதி, இழப்பீடு” என்று நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிஷிர் கனால் உறுதியாகக் கூறியிருக்கிறார்.
பல நூறு பேரின் இறப்புக்குக் காரணமாக இருந்த மோசமான பனிச்சரிவுப் பேரிடருக்குப் பின்னர் அளித்த பேட்டியில் இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். இந்தப் பேரிடரும் அவரது அறிக்கையும் உலகெங்கிலும் காலநிலை நீதி பற்றிய பல விவாதங்களை எழுப்பியிருக்கின்றன.
நியாயமற்ற தண்டனை
உலகின் மொத்த பசுங்குடில் வாயு உமிழ்வில் 0.027 விழுக்காட்டை மட்டுமே வெளியிடும் சிறிய நாடான நேபாளம், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த மிக மோசமான பேரிடரை எதிர்கொண்டு இருக்கிறது.
“இது சாதாரணமான வெள்ளம் அல்ல, காலநிலை மாற்றத்தால் உருவான பல அச்சுறுத்தல் நிகழ்வுகளால் உருவானது” என்று நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார். கடல்மட்டத்திலிருந்து அதிக உயரம் கொண்ட மலைகள் (High altitude mountains) எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படலாம் என்று காலநிலை நிபுணர்கள் முன்பே கணித்திருக்கிறார்கள்.
2024ஆம் ஆண்டிலேயே காலநிலை மாற்றத்தால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி நேபாளப் பிரதிநிதிகள் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர்.
“எங்கள் நாட்டில் உள்ள பனியாறுகள், பனி, நிரந்தர உறைபனி ஆகியவை வெப்பமாதலால் பாதிக்கப்படுகின்றன. காலநிலையால் ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவு, பிற பேரிடர்கள் மக்களுக்கும் கட்டுமானங்களுக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன.
உலக நாடுகளுக்குக் காலநிலை சார்ந்த பொறுப்புகள் இருக்கின்றன. காலநிலை மாற்றம் என்பது சர்வதேசச் சட்டப் பொறுப்பு” என்று பிரதிநிதிகள் அப்போது வாதிட்டனர். இதேபோன்ற கோரிக்கைகளைத் தீவு நாடுகளும் பன்னாட்டு அரங்கில் வைத்திருக்கின்றன.
வளர்ந்த நாடுகளின் பொறுப்பின்மை
கள நிலவரம் இப்படி இருக்கும்போது, வளர்ந்த நாடுகளின் செயல்பாடுகள் இதற்கு முற்றிலும் நேர் எதிராக இருக்கின்றன. காலநிலை மட்டுப்படுத்தப்படுதல் செயல்பாடுகளுக்கான பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.
வளர்ந்துவரும் நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் கொடுத்துக்கொண்டு இருந்த நிதியுதவித் திட்டத்தையும் நிறுத்திவிட்டார். அமெரிக்காவில் வெளியிடப்படும் பசுங்குடில் வாயு உமிழ்வுக்கான கட்டுப்பாட்டு விதிகளையும் அவரது அரசு நீக்கியிருக்கிறது.
சீனாவும் இந்தியாவும் நிலக்கரி மீதான சார்பைக் குறைத்துக்கொள்ள இன்னமும் தயக்கம் காட்டிவருகின்றன. 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, பல பெரிய நாடுகளின் உமிழ்வு இந்த ஆண்டு அதிகரித்திருக்கிறது. காலநிலையின் தீவிரம் இவ்வளவு மோசமாக இருக்கும் சூழலிலும் போர்கள் நடத்தப்படுகின்றன.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகளின் போதாமை ஒருபுறம் என்றால், காலநிலைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன என்று சுட்டிக்காட்டுகிறார் பத்திரிகையாளர் நெஸ்ரின் மாலிக்.
பெரிய, வளர்ந்த நாடுகளில் பேரிடர் பாதிப்புகளைத் தாங்கிக்கொள்ளப் பல வசதிகள் உண்டு. பாதிப்பை முழுமையாகவே ஏந்திக்கொள்ளும் காப்பீடு உள்ளிட்ட துறைகள் உண்டு. பாதிப்புகளைச் சீரமைக்கும் நவீனத் தொழில்நுட்பம், போதுமான அளவில் நிதி ஒதுக்கீடு, நன்கு வளர்ந்த அரசு / தனியார் துறைகள் எனப் பலவும் வளர்ந்த நாடுகளுக்கு உதவுகின்றன.
ஆனால், வளரும் நாடுகளிலும் ஏழை நாடுகளிலும் இவை இருப்பதில்லை. நேபாளப் பேரிடரையே எடுத்துக்கொள்வோம். இந்தப் பேரிடரின் பாதிப்புகளைச் சரிசெய்ய மட்டுமே நேபாளத்தின் மொத்தப் பொருளாதாரத்தில் பத்து விழுக்காடு பணம் தேவைப்படும் என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இதுதவிர, வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்பம், அங்கு உள்ள வல்லுநர்கள், கருவிகள் போன்ற பலவும் தேவைப்படும். எளிதில் பாதிப்படையக் கூடிய பகுதி என்பதால், பேரிடரில் இருந்து மீண்டு வந்தாலும், அடுத்த பாதிப்பு ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் செயல்பாடுகள், தயார்நிலை போன்றவற்றைப் பற்றி விவாதிக்கும்போதே, வளர்ந்துவரும் நாடுகள் நிதியுதவி குறித்தும் தார்மிகப் பொறுப்பு குறித்தும் கோரிக்கை விடுத்துவிட்டன.
ஆனால், இன்றுவரை அது முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த புவி அரசியல் சூழல், இதற்கு ஒரு பெரிய தடையாக இருக்கிறது. சமூக நீதியை ஒரு முக்கியமான மைய அங்கமாக மாற்றினால் மட்டுமே எதிர்காலத்தில் காலநிலைச் செயல்பாடுகள் நியாயம் அடிப்படையிலானதாக இருக்கும்.
- தொடர்புக்கு: nans.mythila@gmail.com