சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப்

 
சிறப்புக் கட்டுரைகள்

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் காமராஜரின் மகத்தான பங்கு - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 87

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

சென்னை மாகாண முதலமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் இருந்த காலத்தில் பல முக்கிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டன. அத்தகைய தொழிற்சாலைகள் இன்றைக்கும் செயல்பாட்டில் உள்ளன. அதேபோல் நீர்த்தேக்கங்கள், அணைகள், கால்வாய்கள் போன்ற வேளாண் வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்புகளும் காமராஜர் ஆட்சிக் காலத்தில் பெருமளவில் அமைக்கப்பட்டன.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அதாவது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காரணத்தினால் தமிழகத்துக்கான திட்டங்கள் எளிதாகக் கிடைத்தன. இவற்றைப் பற்றியெல்லாம் முன்பே பதிவிட்டுள்ளேன். இருப்பினும் சில முக்கியத் திட்டங்களைப் பற்றி இங்கே குறிப்பிட்டுக் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இந்திய அரசாங்கத்துக்கும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கார் அண்டு எலிவேட்டர் மேனுபாக்சரிங் கார்ப்பரேஷனுக்கும் இடையே இந்தியாவில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் 1949-ம் ஆண்டு கையெழுத்தானது. அப்போதைய ரயில்வே அமைச்சராக லால் பகதூர் சாஸ்திரியும், ரயில்வே இணை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த ஓ.வி.அளகேசனும் இருந்தார்கள்.

அந்த தொழிற்சாலையை சென்னை மாகாணத்தில் உள்ள பெரம்பூரில் தொடங்க இந்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி ரூ.12 கோடி மதிப்பீட்டில் 8.84 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்ட தொழிற்சாலை அமைக்கும் பணி 1951-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு 1955-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, பெரம்பூர் ரயில்பெட்டி தொழி்ற்சாலையைத் திறந்து வைத்து உற்பத்தியைத் தொடங்கி வைத்தார். அந்த ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலைதான் தற்போது ஐசிஎஃப் (இன்டகரல் கோச் பேக்டரி) என்று அழைக்கப்படுகிறது.

இந்திய நாட்டின் தேவைக்காகத் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலை 1967 - 68 காலகட்டத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு விரிவடைந்தது. தாய்லாந்து, தைவான், பர்மா, ஜாம்பியா, பிலிப்பைன்ஸ், உகாண்டா, தான்சானியா, வியட்நாம், நைஜீரியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கும் ரயில் பெட்டிகளை ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்தத் தொழிற்சாலையில் 170 வகையான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கல்வி நிலையங்கள், மருத்துவ வசதிகள் போன்றவையும் ஐசிஎஃப் மற்றும் ரயில்வே தொழிலாளர்களின் குடும்பங்களுக்காக செயல்படுத்தப்படுகின்றன. இன்றைக்கு சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக ஐசிஎஃப் திகழ்கிறது.

நீலகிரியில் ரூ.11 கோடியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் தொழிற்சாலை 1960-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது., தெற்காசியாவின் முதல் பிலிம் தொழிற்சாலையாக இது விளங்கியது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்தனர். இருப்பினும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த பிலிம் தொழிற்சாலை மூடப்பட்டு விட்டது.

சென்னை கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் நிறுவனம் (ஹெச்.டி.எல்) 1960-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது. இதில் டெலி பிரிண்டர்கள் (தந்தி இயந்திரங்கள்) மற்றும் பிற தகவல் தொடர்பு உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது தற்போது இதன் வளாகத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகித்தது.

பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) நிறுவனத்தின் சார்பில் கொதிகலன் தயாரிக்கும் நிறுவனம் திருச்சியில் தொடங்கப்பட்டது. கடும் பிரயத்தனத்துக்குப் பிறகே இந்த தொழிற்சாலை தமிழகத்துக்குக் கிடைத்தது என்றால் அது மிகையில்லை.

செக்கோஸ்லோவேகியா நாட்டின் உதவியுடன் தென்னிந்தியாவில் ஒரு பெரிய தொழிற்சாலை நிறுவ மத்திய அரசு 1962-ம் ஆண்டு தீர்மானித்தது. இதற்கான இடம் மற்றும் கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நிபுணர் குழு ஒன்று அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தது. முதலில் ஆந்திரா சென்ற அந்தக் குழு தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிட்டனர். பின்னர் சென்னைக்கும் அழைத்து வரப்பட்டனர். அங்கு சில இடங்களை அக்குழு பார்வையிட்டது. ஆனால் தண்ணீர் வசதி, நிலத்தின் அமைப்பு போன்றவற்றில் அந்தக் குழுவுக்கு திருப்தி இல்லை. எனவே இங்கு தொழிற்சாலை அமைப்பதற்கான சூழல் இல்லை என்று அந்தக் குழு தெரிவித்தது.

அதேநேரம், அந்தத் தொழிற்சாலையை எப்படியாவது தமிழகத்துக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று அப்போதைய முதலமைச்சர் காமராஜர் பெருமுயற்சி எடுத்தார். தமிழக தொழில் துறை அமைச்சராக இருந்த புதுக்கோட்டை ராமையாவை அழைத்து, திருச்சி பகுதியில் அவர்கள் எதிர்பார்த்த வகையில் நிலப்பகுதி உள்ளது. மேலும் காவிரி ஓடுவதால் தண்ணீர் பிரச்சினையும் இருக்காது. எனவே அந்த நிபுணர் குழுவை திருச்சிக்கு அழைத்துச் சென்று நிலத்தை பார்வையிடச் செய்யுங்கள் என்று உத்தரவு பிறப்பித்தார்.

அதைத்தொடர்ந்து, அமைச்சர் ராமையா உடனே செக்கோஸ்லோவேகியா நாட்டு நிபுணர் குழுவை திருச்சியை அடுத்த திருவெறும்பூருக்கு அழைத்துச் சென்றார். காடுபோல் ஏகாந்தமாக இருந்த நிலப்பரப்பை நிபுணர் குழு பார்வையிடச் செய்தார். அங்குள்ள நிலத்தின் தன்மை மற்றும் தண்ணீர் வசதி ஆகியவற்றைக் கண்ட நிபுணர் குழு திருப்தியடைந்தது. தொழிற்சாலை அமைப்பதற்கு உகந்த இடம்தான் என்பதை உறுதி செய்தனர். நிபுணர் குழு திருச்சிக்கு சென்றதும் காமராஜரால் இருப்புக் கொள்ளவில்லை.

என்ன ஆச்சு? என்ன சொன்னார்கள்? இந்த இடம் அவர்களுக்கு பிடித்துவிட்டதா என பலமுறை அமைச்சர் ராமையாவைத் தொடர்பு கொண்டு கேட்ட வண்ணம் இருந்தார் காமராஜர். நிபுணர் குழு திருப்தியடைந்த விஷயத்தை காமராஜருக்கு அமைச்சர் ராமையா தெரிவித்த பிறகுதான் காமராஜர் நிம்மதி பெருமூச்சு விட்டார். அந்த அளவுக்கு தமிழகத்தின் தொழில்வளத்தைப் பெருக்குவதில் காமராஜர் முனைப்புடன் இருந்தார்.

திருச்சியில் உள்ள  பெல் நிறுவனம்

இதற்கிடையே செக்கோஸ்லோவேகியா நாட்டின் உதவியுடன் திருச்சியில் ‘பெல்’ நிறுவனம் அமைய உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தவுடன் ஆந்திராவில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. தங்கள் மாநிலத்துக்குத்தான் அந்தத் தொழிற்சாலை வரவேண்டும் என்று அங்குள்ளவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து பெல் நிறுவனத்தின் டிரான்ஸ்பார்மர் தொழிற்சாலையை ஆந்திராவில் அமைப்பது என்றும், கொதிகலன் தொழிற்சாலையை திருச்சியில் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அந்த தொழிற்சாலை மற்றும் குடியிருப்புக்கு என 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை ஆர்ஜிதம் செய்து தமிழக அரசு வழங்கியது.

பணிகள் தொடங்கப்பட்டு 1965-ம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன், பெல் நிறுவனத்தின் கொதிகலன் தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கி வைத்தார். ஆனால் அன்றைக்கு முதலமைச்சராக காமராஜர் இல்லை. பக்தவத்சலம்தான் முதலமைச்சராக இருந்தார் என்பது வேறு விஷயம். இப்படித்தான் திருச்சியில் பெல் நிறுவனம் அமைந்தது.

இந்த தொழிற்சாலைகள் திருச்சியின் தொழில்துறை பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக உள்ளது, மின் உற்பத்தி, மருந்துத் துறை போன்ற பல துறைகளுக்கு கொதிகலன்கள் மற்றும் உதிரிபாகங்களை தயாரித்து வழங்குகின்றது.

இந்த நிறுவனம் அமைவதில் தமிழக தொழில் துறை அமைச்சர் ராமையாவின் பங்கு மகத்தானது. அரசியல், பொது வாழ்வில் அப்பழுக்கற்றவர் ராமையா. அமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்காகவோ, தன் பிள்ளைகளுக்காகவோ, உற்றார் உறவினர்களுக்காகவோ தவறான வழியில் பொருளீட்டியதில்லை.

சுதந்திரப் போராட்ட தியாகியான அவர், பதவி போன பிறகு தனக்குக் கிடைத்த பென்சனை வைத்து தனது இறுதிக் காலத்தைக் கழித்தவர். அவரது குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் இன்றைக்கு உள்ளது. அவரது மகன் வெங்கடேசன் இப்போதும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் காலத்திலோ, குமாரசாமி ராஜா காலத்திலோ, ராஜாஜி காலத்திலோ எத்தனையோ தன்னலம் கருதாத அமைச்சர்கள் பொதுவாழ்வில் தங்களை ஈடுபடுத்தி மறைந்துள்ளனர். அவர்களை எல்லாம் காலம் மறந்து விட்டது. அப்பேர்ப்பட்ட தியாக சீலர்கள் எல்லாம் அமைச்சர்களாக அன்றைக்கு இருந்தார்கள். ஆனால் இன்றைய நிலைமை என்ன? அதைப்பற்றியெல்லாம் உங்களுக்கு விளக்க வேண்டியது இல்லை. நீங்களே கண்கூடாகப் பார்த்து வருகிறீர்கள்.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் தென்னாற்காடு மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 1956-ம் ஆண்டு ரூ.160 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இதுகுறித்து விரிவாக முன்பே பதிவு செய்துள்ளேன். சென்னை ஆவடியில் ராணுவ டாங்கி தொழிற்சாலையும் காமராஜர் ஆட்சியின்போதுதான் தொடங்கப்பட்டது. ரஷ்ய நாட்டு உதவியுடன் அறுவை சிகிச்சைக் கருவிகள் தயாரிப்பு தொழிற்சாலையும் அங்கு அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் நீர் மேலாண்மையைப் பொருத்தவரை காவிரியின் குறுக்கே சோழ மன்னன் கரிகாலன் கட்டிய கல்லணைதான் முதன்மையானது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கரிகால் சோழனால் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட உலகின் மிகப் பழமையான மற்றும் இன்றும் பயன்பாட்டில் உள்ள அணை என்றால் அது கல்லணைதான். இதன் மூலம் சோழமண்டலத்தின் விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.

பின்னாளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1934-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டது. சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பிரம்மாண்டமான அணை இது. ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்றும் இது அழைக்கப்படுகிறது. நீர் பாசனத்துக்கும், நீர் மின் உற்பத்திக்கும், குடிநீர் வழங்கலுக்கும் முக்கிய ஆதாரமாக இந்த அணை உள்ளது,

காமராஜர் ஆட்சிக் காலத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு அணை கட்டப்பட்டது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு போன்ற ஆறுகளின் நீரைத் திருப்பி, வறண்ட பகுதிகளை நீர்ப்பாசனம் செய்யவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் உதவுகிறது. அடுத்து கீழ்பவானி நீர்த்தேக்கத் திட்டம், சாத்தனூர் அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை, கிருஷ்ணகிரி அணை, புள்ளம்பாடி கால்வாய் போன்ற ஏராளமான நீர் மேலாண்மைத் திட்டங்கள் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன.

இதில் பல திட்டங்கள் ஓமந்தூரார் காலத்தில் தீட்டப்பட்டு, குமாரசாமி ராஜா காலத்தில் அனுமதி கொடுக்கப்பட்டு, ராஜாஜி காலத்தில் பணிகள் நடந்தாலும், அதற்குப் பின்னால் வந்த காமராஜர் காலத்தில்தான் திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டன.

இதுபோன்ற எத்தனையோ மக்கள் நலத் திட்டங்கள் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன. அத்திட்டங்களில் எந்தவிதமான முறைகேடுகளோ, லஞ்ச லாவண்யங்களோ நடைபெற்றதில்லை. அதனால்தான் இன்றைக்கும் அவை உறுதியான கட்டமைப்புடன் நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, தங்களது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட மக்கள்நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் தோல்வியடைந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். நான் மேலே குறிப்பிட்டுள்ள இந்தத் திட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவையா என்று இளம் தலைமுறையினர் ஆச்சரியப்படும் நிலைதான் இன்றைக்கு உள்ளது.

தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை காமராஜருக்கும் பெரியாருக்கும் நல்ல நட்புணர்வும், புரிதலும் இருந்தது. பெரியாரை தங்கள் தந்தை என்று கூறும் திராவிட முன்னேற்றக் கழகத்தினரோ காமராஜரை அரசியல் ரீதியாக தீவிரமாக எதிர்த்தனர். அவரது ஆட்சியின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். அதேபோல் உணவுப் பொருள் தட்டுப்பாடு, இந்தி எதிர்ப்பு போன்றவற்றால் மக்கள் கொண்டிருந்த அதிருப்தியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் களமாடினார்கள் திமுகவினர் என்ற பார்வையும் அரசியல் வட்டாரத்தில் இருந்தது.

மேலும் காங்கிரஸாரின் அன்றைய சட்டமன்ற பேச்சுக்களையோ, பொதுக்கூட்ட பேச்சுகளையோ கவனித்தால் சம்ஸ்கிருதம், இந்தி கலந்து இருக்கும். காங்கிரஸ் தலைவரை ‘அக்கிராசனர் ’என்பார்கள். செயலாளர் ‘காரியதரிசி’ என்று அழைக்கப்பட்டார். இப்படியாக மக்களுடன் ஒன்றிப் போவதில் காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு தடுமாற்றம் இருந்தது.

பெரியாரின் எழுத்துக்களிலும் கூட செந்தமிழ் அதிகமாக இருந்தது இல்லை. ஆங்காங்கே வடமொழி எழுத்துகளும், வாசகங்களும் இடம்பெற்றதுண்டு. குறிப்பாக ‘விடுதலை’யில் கடைசி பக்கத்தில் இடம்பெறும் ‘இம்பிரிண்ட்’டில் கூட ‘சுயமரியாதை ஸ்தாபனம்’ என்றுதான் இருக்கும். ‘நிறுவனம்’ என்று குறிப்பிட்டதில்லை. அதேநேரம் திமுகவினர் மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒன்றிணைந்து அவர்களின் மொழியிலேயே பேசி மக்களைக் கவர்ந்து விட்டனர்.

சட்டப்பேரவையில் 15 உறுப்பினர்களை மட்டுமே திமுக பெற்றிருந்தாலும், மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து அரசியல் செய்ததால் தினசரிகளில் தினமும் தலைப்புச் செய்திகளாக திமுகவின் செயல்பாடுகள் இடம்பிடித்தன. திமுகவை விட்டு ஈவிகே சம்பத் வெளியே வந்த பிறகுதான் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார உத்திகளும், அணுகுமுறைகளும் மாற்றி அமைக்கப்பட்டன.

(தொடரும்...)

SCROLL FOR NEXT