சிறப்புக் கட்டுரைகள்

முதல் பேரவைத் தேர்தல் சுவாரசியங்கள் | சொல்... பொருள்... தெளிவு

ம.சுசித்ரா

தமிழ்நாட்டின் 17ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கோடையும் சுட்டெரிக்கிறது. தகிக்கும் கோடையில் தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கமாகிவிட்ட தற்காலத்தில் இதமான குளிர்காலத்தில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலைத் திரும்பிப் பார்ப்பது சுவாரசியமாக இருக்குமல்லவா! அது, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முந்தைய காலம்.

இன்றைய தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரத்தின் பெரும்பகுதி, கர்நாடகத்தின் சில பகுதிகள், கேரளத்தின் மலபார் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அன்றைய சென்னை மாகாணம் இருந்தது. 1952 ஜனவரி 2-இலிருந்து 25-வரை சென்னை மாகாணத்தில் 9 கட்டங்களாக முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

ஒரு தொகுதி 2 எம்.எல்.ஏ.க்கள்

மொத்தம் 309 தொகுதிகள், அவற்றில் இரட்டை உறுப்பினர் தொகுதிகளின் எண்ணிக்கை 66. இந்தத் தொகுதிகளில் பொது வேட்பாளர், பட்டியல் சாதி வேட்பாளர் என இருவர் தேர்வுசெய்யப்படுவர். 62 இடங்கள் பட்டியல் சாதியினருக்கும், 4 இடங்கள் பழங்குடி வகுப்பினருக்கும் ஒதுக்கப்பட்டன.

இதன்படி மொத்தம் 375 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். ஒரு தொகுதிக்கு இரண்டு எம்.எல்.ஏ-க்களைத் தேர்வுசெய்ய வேண்டும் எனில், இரண்டு வாக்குகளை வாக்காளர் அளிக்க வேண்டும்.

          

இது மிகவும் குழப்பமான முறையாகக் கருதப்படவே 1961இல் இரட்டை உறுப்பினர் தொகுதி முறை ரத்துசெய்யப்பட்டது. மொழிவாரி மாநிலக் கொள்கைப்படி 1953 அக்டோபர் 1இல் ஆந்திரம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டதன் விளைவாக சென்னை சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தது.

சமூகப் புரட்சி

சாதி, மதம், இனம், வர்க்கம், பாலினம் முதலான வேறுபாடுகளைக் கடந்து 21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை முதன்முறையாக வழங்கப்பட்டது. சொத்து, கல்வித் தகுதி, சமூக அந்தஸ்து, பதவிக்கு அப்பாற்பட்டு நிலமற்ற விவசாயிகள், தொழிலாளர்கள் முதலான வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் முறை அமல்படுத்தப்பட்டது.

அழியாத மை

வாக்காளர் அட்டை பற்றி யோசித்திராத காலம். அவ்வளவு ஏன் பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை போன்ற எத்தகைய சரிபார்ப்பு முறைகளும் பின்பற்றப்படவில்லை. அப்படியானால், வாக்கு செலுத்துவதில் முறைகேடு நிகழ்வதைத் தடுக்க வழி? கர்நாடகத்தின் ‘மைசூர் வார்னிஷ் அண்டு பெயின்ட்ஸ் லிமிடெட்’ நிறுவனம் தீர்வு தந்தது.

சில்வர் நைட்ரேட் வேதிக் கூட்டுப்பொருளுடன் ‘ரகசிய’ வேதிப்பொருள்களைக் கலந்து அழியாத மையை அந்நிறுவனம் கண்டுபிடித்தது. காலப்போக்கில் இந்தியத் தேர்தல் முறையில் எது மாறினாலும், அன்றிலிருந்து இன்றுவரை தேர்தல் மை அழியா இடம்பிடித்துவிட்டது. இதன் தனித்துவத்தால், தற்போது 35 நாடுகளுக்கு இந்நிறுவனத்தின் தேர்தல் மை விநியோகிக்கப்படுகிறது.

வாக்குப்பதிவில் புதுமை

அன்றைக்கு சென்னை மாகாணத்தின் மக்கள்தொகை 5 கோடியே 70 லட்சமாக இருந்த நிலையில், அவர்களில் 2.69 கோடி பேர் வாக்காளர்களாக அடையாளம் காணப்பட்டனர். பெரும்பாலானோர் எழுத்தறிவு இல்லாதவர்கள் என்பதால் எளிமையாக வாக்களிக்க ஒவ்வொரு வேட்பாளருக்கும் வெவ்வேறு வண்ணங்களில் தனித்தனி வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டன.

தங்களுக்குப் பிடித்தமான வேட்பாளருக்கு உரிய வண்ணப்பெட்டியில் வாக்காளர்கள் வெற்று வாக்குச்சீட்டைச் செலுத்தினர். முதல்முறையாகப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டதால் அவர்கள் தயக்கமின்றி வாக்களிக்க, தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

சில இடங்களில் பெண் அதிகாரிகளே பணி அமர்த்தப்பட்டனர். அன்று இது முற்போக்கு நடவடிக்கையாகக் கருதப்பட்டது. 52.82% வாக்குகள் பதிவானது அன்றைய தேதியில் மகத்தான வெற்றியாகக் கொண்டாடப்பட்டது.

பிரச்சார உத்திகள்

தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் இல்லாத காலத்தில் ‘சுதேசமித்திரன்’, ‘தினமணி’, ‘திராவிட நாடு’, ‘கல்கி’, ‘தி இந்து’, ‘தி மெயில்’, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ முதலான நாளிதழ்கள், பத்திரிகைகள் மக்கள் மத்தியில் நேரடித் தாக்கம் செலுத்தின. விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினை போன்றவை இத்தேர்தலின் மையக் கருப்பொருள் ஆகின.

ஊடகங்களுக்கு அப்பாற்பட்டு மக்களைச் சென்றடைய அரசியல் தலைவர்கள் புதுமையான வழிகளைக் கையாண்டனர். காமராஜரின் ‘திண்ணைப் பிரச்சாரம்’ - கிராமங்களில் மக்களுடன் சகஜமாக அமர்ந்து பேசி அவர்களை காங்கிரஸ் பக்கம் இழுத்தது.

பகலில் வேலைக்குச் செல்லும் உழைக்கும் மக்களைக் கவரும் வகையில் மாலை, இரவு நேரம் மேடைப் பேச்சு நிகழ்த்தினார் அண்ணாதுரை. கம்யூனிஸ்ட் கட்சி பல இடங்களில் தடை செய்யப்பட்டிருக்கவே, அதன் தலைவர்கள் தலைமறைவாக இருந்தனர். தொழிலாளர் வர்க்கத்தினரைக் கடிதங்கள், ரகசியக் கூட்டங்கள் மூலம் அவர்கள் ஒன்றிணைத்தனர்.

போட்டியிடாமல் முதல்வர்

இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மாணிக்கவேலரின் காமன்வீல் கட்சி, ராமசாமி படையாச்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, பி.டி.ராஜன் தலைமையிலான நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கின.

திமுக தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில் முதல் தேர்தலில் அக்கட்சி நேரடியாகப் போட்டியிடுவதில்லை என்றும், ‘திராவிட நாடு’ கோரிக்கையை முன்னிறுத்தும் வேட்பாளர்களுக்கு ஆதரவு என்றும் நிலைப்பாடு எடுத்தது.

திமுக ஆதரவுடன் 8 வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். தேர்தல் நடந்துகொண்டிருந்தபோதே ‘பொட்டி ஸ்ரீராமுலு’ தனி ஆந்திரத்துக்காக உண்ணாவிரதம் இருந்தார். இது காங்கிரஸுக்குப் பெரும் சரிவை ஏற்படுத்தியது.

அப்போதைய முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜா உள்பட ஆளும் கட்சி அமைச்சர்கள் பலர் தோல்வி அடைந்தனர். காங்கிரஸ் 152 இடங்களைக் கைப்பற்றினாலும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆந்திரப் பகுதிகளில் 62 இடங்களில் சிபிஐ வென்றது. ஆட்சியமைக்க 188 இடங்கள் அவசியம்.

கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து ‘ஐக்கிய ஜனநாயக முன்னணி’யை உருவாக்கி ஆட்சியமைக்க உரிமை கோரின.

காங்கிரஸுக்குப் பெரும்பான்மை இல்லாதபோதும் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்த ஆளுநர் ஸ்ரீபிரகாசா, தேர்தலில் போட்டியிடாத ராஜாஜியை ஆட்சி அமைக்க அழைத்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் முதல்வர் ஆவது ஜனநாயகமற்றது என்று கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். எதிர்ப்புகளை முறியடிக்கத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜாஜியைச் சட்ட மேலவைக்கு நியமன உறுப்பினர் ஆக்கினார் ஆளுநர்.

பின்னர் காமன்வீல் கட்சி, உழைப்பாளர் கட்சி, சில சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டி அதே ஆண்டு ஜூலையில் தனது பெரும்பான்மையைச் சட்டசபையில் ராஜாஜி நிரூபித்தார்.

SCROLL FOR NEXT