இந்தியாவின் காசநோய் மரணங்கள் 2015 முதல் 38% குறைந்திருப்பதன் மூலம் காசநோய்க்கு எதிரான போரில் இந்தியா ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.
உலக அளவில் காசநோய் மரணங்களின் எண்ணிக்கை 35% குறைந்துள்ளது. இந்தியா அதைவிட 3% கூடுதலாகக் குறைத்து சாதனை படைத்துள்ளது.
மேலும், உலகச் சுகாதார நிறுவனத்தின் உலக அளவிலான காசநோய் அறிக்கையில், இந்தியாவில் மருந்துக்குக் கட்டுப்படும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 94% பேர் குணமடைகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை இந்தியா எட்டியதற்குத் தேசிய காசநோய் அகற்றும் திட்டத்தின் தீவிரமான நடவடிக்கைகள்தான் காரணம்.
காசநோய் ஒழிப்புத் திட்டம்
மத்திய அரசு, 2020ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட தேசிய காசநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தை (Revised National Tuberculosis Control Program – RNTCP) தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டம் (National TB Elimination Program – NTEP) எனப் பெயர் மாற்றம் செய்தது.
இத்திட்டத்தின் கீழ் தேசிய உத்திகள் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் நான்கு தூண்களாக நோய் கண்டறிதல் (Detect), சிகிச்சை (Treat), தடுப்பு (Prevent), கட்டமைப்பை உருவாக்குவது (Build) ஆகியவை உள்ளன.
பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்களில் தவறிப்போனவர்களைத் தேடிக் கண்டுபிடித்து நோயைத் தொடக்கத்திலேயே கண்டறிவது; தரமான மருந்துகளை வழங்கி, தேவையான நேரத்தில் சிகிச்சை அளிப்பது; தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளையும் அணுகுவது; நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் கிடைக்க வழிவகை செய்வது; காசநோயாளியுடன் தொடர்பில் இருந்தவரைக் கண்டறிவது; வீட்டில் உள்ள மற்றவர்களுக்குக் காசநோய் தடுப்பு சிகிச்சை அளிப்பது; குழந்தைகளுக்குப் போதிய சிகிச்சை கொடுப்பது, ஹெச்ஐவி வைரஸ் தொற்றுடன் வாழ்பவர்களையும் அதிக ஆபத்து அல்லது பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பவர்களையும் கண்டறிந்து, அவர்களுக்குத் தொற்று பரவாமல் தடுப்பது உள்ளிட்டவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்.
காசநோய் இல்லாத இந்தியா
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில், 2022 செப்டம்பர் 9இல் ‘காசநோய் இல்லாத இந்தியா திட்ட’மும் (Pradhan Mantri TB Mukt Bharat Abhiyaan) உருவாக்கப்பட்டது.
காசநோயாளிகள் புரதச் சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளும்போதுதான், மருந்துகளின் பக்கவிளைவுகளை உடல் எதிர்க்கும். அந்த வகையில் நி-க் ஷை போஷன் யோஜனா (Ni-kshay Poshan Yojana and the Ni-Kshay Mitra Programme) 2015இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது ஒவ்வொரு காசநோயாளிக்கும் மாதம் ரூ.1,000 நிதி உதவியை அளிக்கிறது. காசநோய் சிகிச்சை நீண்ட காலம் வழங்க வேண்டிய ஒன்று. நி-க் ஷை மித்ரா என்பது ‘காசநோய் ஒழிப்பு நண்பர்’ அல்லது நோயாளிக்கு சிகிச்சைக் காலத்தில் உதவிபுரிபவரைக் குறிக்கிறது.
தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், மதம், சாதி சார்ந்த குழுக்கள், அரசு அதிகாரிகள், பிரபலங்கள் என யார் வேண்டுமானாலும் தன்னார்வத்துடன் காசநோயாளிகளுக்கு நண்பர்களாக முன்வரலாம்.
நோயாளிகளுக்குக் காசநோய் நண்பர்கள் உணவைக் கொடுப்பதன் மூலம் அவர்களின் செலவைக் குறைக்க முடியும். அவர்களுக்கு மன ஆறுதல் கொடுக்கலாம். அவர்கள் இல்லங்களுக்குச் சென்று நலம் விசாரிப்பதை வழக்கமாக்கிக்கொள்வதன் மூலம் சிகிச்சைக்குப் பின்னர் தங்களின் வாழ்க்கையைக் காசநோயாளிகள் மீண்டும் உருவாக்கிக்கொள்ள உதவலாம்.
100 நாள் திட்டம்
மத்திய சுகாதார - குடும்ப நலத் துறை அமைச்சகம் காசநோயை ஒழிக்க இந்தியாவின் மிகப்பெரிய முன்னெடுப்பைச் செய்தது. அதற்கு ‘100 நாள் காசநோய் ஒழிப்பு திட்டம் (100-Day TB Mukt Bharath Abhiyaan)’ எனப் பெயரிட்டு, 2024 டிசம்பர் 7இல் 33 மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகளில் அதிக முன்னுரிமை உள்ள 347 மாவட்டங்களில் செயல்படுத்தியது. பின்னர், அது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
இதன் மூலம், அதிக பாதிப்புக்கு உள்ளாவதற்கு வாய்ப்பு உள்ளவர்களைக் கண்டறிந்து, தொடக்க நிலையிலே நோய் கண்டறிவது பலப்படுத்தப்பட்டது.
இதில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில், மேலும் ஒரு 100 நாள் பரப்புரையை 2026 மார்ச் 24 அன்று மத்திய அரசு செயல்படுத்தியது. அதில் 1.58 லட்சம் அதிக ஆபத்துள்ள கிராமங்கள், வார்டுகளில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சாத்தியமுள்ள மக்களிடையே காசநோய்ப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
என்ன பலன்கள்?
25 கோடிக்கும் அதிகமானவர்கள் கண்டறியப்பட்டு, காசநோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். காசநோயைத் தொடக்கத்திலேயே கண்டறிய 11 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நெஞ்சுப் பகுதியில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
3 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நியூக்ளிக் அமிலப் பெருக்கப் பரிசோதனைகள் (NAAT - nucleic acid amplification tests) துரித, துல்லியமான நோய் கண்டறிதலுக்காக மேற்கொள்ளப்பட்டது.
48.64 லட்சம் புதிய காசநோயாளிகள் கண்டறியப் பட்டனர். அதில் 14.97 லட்சம் பேர் அறிகுறியற்ற காசநோயாளிகளாக (Asymptomatic) இருந்தனர். காசநோயை ஒழிக்கும் நோக்கத்தில் தேசம் முழுவதும் சமூக வலைத்தளப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கு ஜோஷ் (Joint Squad for Health - JOSH) சுகாதாரத்துக்கான கூட்டு அணி எனப் பெயரிடப்பட்டது. 2026 அக்டோபர் மாதம் 11 மாநிலங்களில் 55 மாவட்டங் களில் முன்னோட்ட முறையில் இது தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு ஜோஷ் குழுவிலும் ‘எனது பாரதம்’ (MY Bharat) என்னும் தன்னார்வலர்கள், தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்கள் இருப்பார்கள்.
குறிப்பிட்ட நேரத்தில் பரிசோதனை, சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அலுவலரும் இருப்பார். இது, அடிமட்டத்தில் இருப்பவர்கள்வரை விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்களை ஊக்குவிக்கும்.
அனைத்து அமைச்சர்கள், துறைகள், சுகாதார மையங்கள், தன்னார்வலர்கள் - ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்கள், குடிமக்கள் என அனைவரும் காசநோய் ஒழிப்புப் பிரச்சாரத்தில் ஒன்றுசேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் இதில் முனைப்புடன் ஈடுபட வேண்டும்.
அதில் இணைந்து விழிப்புணர்வு, தொடக்க நிலையிலேயே நோயைக் கண்டறிதல், சிகிச்சை கண்காணிப்பு, இழிவுபடுத்துதல் இல்லாத சமூகம் ஆகியவை குறித்துச் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஊக்கம் அளிக்கும் கதைகளைப் பதிவிடுவது, ஒளிப்படங்கள், காணொளிகளைப் பகிர்ந்து இந்தத் திட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.