சிறப்புக் கட்டுரைகள்

உணவு நஞ்சாதல் அதிகரிப்பு | சொல்... பொருள்... தெளிவு

கோடைக்காலத்திலும் மழைக்காலத்திலும் இந்தப் பிரச்சினை அதிகம் நிகழ்கிறது

உதயசங்கரன் பாடகலிங்கம்

சில நாள்களுக்கு முன் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 110க்கும் மேற்பட்ட குழந்தைகள் வயிற்றுவலி, வாந்தி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதற்கடுத்த சில நாள்களில், மகாராஷ்டிரத்தின் பிவண்டியில் உள்ள (Bhiwandi) தனியார் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட 90க்கும் மேற்பட்டோர் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, குமட்டல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர். இரண்டு சம்பவங்களிலும் காலாவதியான உணவுப் பொருள்கள் சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

இந்தச் சம்பவங்கள் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பில் உறுதியான அக்கறை காட்டப்படுகிறதா என்கிற கேள்வியை எழுப்புகின்றன. உணவுப் பாதுகாப்பு - தரநிலைகள் (FSS) சட்டத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகின்றன.

பாதுகாப்பற்ற, தரமற்ற, கெட்டுப்போன உணவின் காரணமாக, உலகம் முழுக்க ஆண்டுதோறும் 86.6 கோடி பேர் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். ஏறக்குறைய 15.2 லட்சம் உயிரிழப்புகள் நேரிடுகின்றன.

அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். உணவு உற்பத்தி, சிகிச்சைச் செலவுகள் என இவ்விவகாரத்தில் உலகம் முழுக்க ஏறக்குறைய 31,000 கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, பதிவுசெய்யப்பட்ட தரவுகளின்படி 2024இல் உணவு நஞ்சாதல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,122 என்பது கவனிக்கத்தக்கது.

உணவு நஞ்சாவது எப்படி?

பொதுவாக, தெருவோரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு, திறந்தவெளி விருந்துகள், வெட்டப்பட்டுச் சில மணி நேரம் கழித்து உண்ணப்படும் பழங்கள் எனப் பல வகைகளில் உணவு நஞ்சாதல் நிகழ்கிறது. நீர் மாசுறுதல், வெள்ளத்தில் கழிவு நீர் கலத்தல் உள்ளிட்டவை நீர்வழிப் பரவும் நோய்களை அதிகப்படுத்துகின்றன.

கோடைக்காலத்திலும் மழைக்காலத்திலும் உணவு நஞ்சாதல் பிரச்சினை அதிகரிக்கிறது; காரணம், அந்தப் பருவங்களில் உணவைக் கெடவைக்கிற நுண்ணுயிரிகளின் பெருக்கம் அதிகம்.

வெப்பநிலை, ஈரப்பதம் அதிகரிப்பதால் பாக்டீரியா வகைகளான அஸ்செர்சியா கோலி, சால்மோனெல்லா, நோரா வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் பெருகுகின்றன; தொற்று ஏற்படுத்தும் புரதமான பிரியான்கள் (Prions), தொற்றாநோய்களை ஏற்படுத்தும் கன உலோகங்கள் போன்றவை உணவில், நீரில் கலப்பதாலும் இந்தப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

குமட்டல், வயிற்றுவலி உள்ளிட்ட வழக்கமான அறிகுறிகள் மூலமாக இப்பிரச்சினையை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சை பெறலாம். அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் சிறுநீரகச் செயலிழப்பு, மூட்டுவலி, நீர்க்கடுப்பு, மலத்தில் ரத்தம் கலந்துவருதல் எனத் தீவிரமான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடலாம். செரிமான மண்டலம் மட்டுமல்லாமல் சில நேரம் நரம்பியல், மகப்பேறு, நோய் எதிர்ப்பு மண்டலம் சார்ந்த பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடலாம்.

தவிர்ப்பது எப்படி?

உணவு நஞ்சாவதைத் தவிர்க்க, நான்கு வழிகளைப் பயன்படுத்தலாம். முதலாவது, தூய்மைப்படுத்துதல். உணவைச் சமைப்பதற்கு முன்னும் சாப்பிடுவதற்கு முன்னும் கைகளை சோப்பு போட்டுக் கழுவுவது அவசியம்.

சமைத்து முடித்த பின்னர் அந்த இடத்தைச் சுத்தப்படுத்த வேண்டும். இரண்டாவது, அசுத்தமடையாதவண்ணம் உணவையும் உணவுப் பொருள்களையும் தனியே பிரித்து வைத்தல்.

முக்கியமாக, உடனடியாகச் சமைக்க வேண்டியதையும் அடுத்தடுத்த நாள்களில் பயன்படுத்துவதையும் தனித்தனியே வைக்கலாம்.

மூன்றாவதாக, சமைத்த பொருள்களின் வெப்பநிலை சீராக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

நான்காவதாக, உணவுப்பொருளைக் குளிர்பதனப் பெட்டியில் சரியான வெப்பநிலையில் வைக்க வேண்டும். அழுகும் உணவுப்பொருள்களை 4 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் கீழே வைக்க வேண்டும்.

சமைத்த உணவை இரண்டு மணி நேரம் வெளியில் வைக்கலாம் என்கிறபோதும், கோடைக்காலத்தில் அதை ஒரு மணி நேரமாகக் குறைத்துக்கொள்வது நல்லது. மிக முக்கியமாக, சமைக்கும் பொருள்களின் காலாவதி தேதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெளியிடங்களைப் பொறுத்தவரை, வெந்நீர் பருகுவது நீர்வழிப் பரவும் நோய்களைத் தடுக்கும். சமைக்காத இறைச்சி, பதப்படுத்தப்படாத பால்பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.

கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

உணவு வழிப் பரவும் நோய்களால் சமூகப் பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது. நாட்டின் பொருளாதாரம், சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட துறைகள் பாதிப்பை எதிர்கொள்கின்றன. உணவு நஞ்சாதல் பிரச்சினை தொடர்வது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நிலவுகிற குறைகளையே உணர்த்துகிறது.

உணவுப் பாதுகாப்புத் தரநிலைகள் சட்டத்தின்படி, அங்கீகாரம் பெற்ற அனைத்து உணவகங்களிலும் உணவு மாதிரிகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை செய்வது கட்டாயம். அண்மையில் இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

எந்த வகையான உணவகம், அதன் முந்தைய செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை முன்வைத்து, எத்தனை முறை சோதனை மேற்கொள்வது என்பது முடிவு செய்யப்படவுள்ளது.

2024 – 25ஆம் நிதியாண்டில், பதிவு செய்யப்பட்ட உணவகங்களைவிட உணவு மாதிரிச் சோதனைகள் நடத்தப்பட்டவற்றின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது; இந்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தரவுகளில் இருந்து இது தெரியவருகிறது.

எடுத்துக்காட்டாக, 2024இல் மகாராஷ்டிரத்தில் பதிவுசெய்யப்பட்ட 1.8 லட்சம் உணவகங்களில் 20,877இல் மட்டுமே உணவு மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டன.

விழிப்புணர்வு அவசியம்

உணவுப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு மத்திய அரசின் பொறுப்பு என்றால், களத்தில் ஆய்வுகளைச் செயல்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டியது மாநிலங்களின் பொறுப்பு.

ஆனால், அதைத் தீவிரமாகச் செயல்படுத்த ஏதுவாக மத்திய, மாநில உணவுப் பாதுகாப்புத் துறைகளில் காலியிடங்கள் நிரப்பப்படுவதில்லை என்பது வருத்தமான விஷயம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தில் காலியிடங்கள் 30% முதல் 40% வரை உயர்ந்திருக்கிறது. 2025 – 26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுவரை நாடு முழுவதும் உள்ள 4,208 உணவுப் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களில் 2,997 மட்டுமே நிரப்பப்பட்டிருப்பதாக மாநிலங்கள் அவையில் மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது.

உணவு நஞ்சாதல் பாதிப்பால், 2021இல் இயலாமையைச் சரிசெய்வதற்குத் தேவைப்படும் வாழ்நாள்களாக (disability adjusted life years - DALYs) ஏறக்குறைய 5 கோடியே 71 லட்சம் நாள் இழப்பு நேரிட்டதாகச் சொல்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.

உணவுப் பாதுகாப்பில் போதிய விழிப்புணர்வைப் பெறுவதன் வழியாக, இந்த அவலத்தைத் தவிர்க்கலாம். அதற்கான முயற்சிகளைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டியிருப்பதையே மேற்சொன்ன நிகழ்வுகள் உணர்த்தியிருக்கின்றன.

SCROLL FOR NEXT