சிறப்புக் கட்டுரைகள்

இந்தியர்கள் எப்படிப் பயணிக்கிறார்கள்? | சொல்... பொருள்... தெளிவு

பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான வலுவான வரைபடம் இது

ம.சுசித்ரா

இந்திய மக்களின் பயணப் பழக்கங்கள், போக்குவரத்து முறை, அன்றாடப் பயணச் செலவு தொடர்பான தரவுகள், ‘தேசிய வீட்டுப் பயணக் கணக்கெடுப்பு’ (National Household Travel Survey – NHTS) அறிக்கை மூலம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளன.

மத்தியப் புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறையின்கீழ் இயங்கும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம், நாடு முழுவதும் உள்ள கிராமங்கள், நகர்ப்புறங்களை உள்ளடக்கிக் கடந்த 2025 ஜூலை தொடங்கி நடப்பு ஆண்டு ஜூன் வரை விரிவாக நடத்தப்பட்ட கள ஆய்வின் முடிவு இது.

நாடு முழுவதும் உள்ள 14,274 கிராமங்கள், 10,377 நகர்ப்புறப் பகுதிகளில் நிலவும் பயண முறைகள் தேசிய அளவிலான இந்தப் பயணக் கணக்கெடுப்பில் ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வளவு பெரிய பரப்பளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 4,92,023 குடும்பங்களிடம் இருந்து நேரடியாகத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 20,34,371 நபர்களின் பயண முறைகள் பற்றிய துல்லியமான புள்ளிவிவரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

ஒரு கிலோமீட்டருக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட பயண நிகழ்வுகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

வெளியூருக்கு முந்தும் பேருந்து

நீங்கள் நகரவாசியாக இருந்தால், நெடுந்தூர வெளியூர்ப் பயணங்கள் என்றதுமே ரயில் வழிப் பயணம் நினைவுக்கு வருவது இயல்பு.

ஆனால், நிதர்சனமோ வேறு. பெருவாரியான இந்தியர்களுக்கு வெளியூர், இரவு நேரப் பயணங்களுக்கு ரயிலைக் காட்டிலும் பேருந்துதான் முதன்மையான தேர்வாக உள்ளது.

புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மொத்த இரவு நேரத் தனிப்பட்ட பயணங்களில் 55.8% பேருந்துப் பயணங்கள். இதற்கு அடுத்தபடியாக நகரங்களுக்கு இடையிலான ரயில்கள் (Inter-city railways) மூலம் 17.7% பயணங்கள் நிகழ்கின்றன.

இந்த இரண்டு வகைப் போக்குவரத்து முறைகளும் இணைந்து நாட்டின் மொத்த வெளியூர்ப் பயணங்களில் 73.5% பங்கை வகிக்கின்றன; கார்கள் 15.1%, இருசக்கர வாகனங்கள் 8.8% பங்கு வகிக்கின்றன.

முன்னதாகக் குறிப்பிட்டதுபோல், நகர்ப்புறக் குடும்பங்கள் மத்தியில் ரயில் பயணம் சற்று அதிகமாகக் காணப்படுகிறது. நகரவாசிகளில் 22.7% பேர் வெளியூர்ப் பயணங்களுக்கு ரயில்களைப் பயன்படுத்துகின்றனர். கிராமப்புறங்களில் 14% மட்டுமே ரயிலில் வெளியூர் செல்கின்றனர்.

உறவுப் பயணங்கள்

இதேபோன்று விடுமுறை, சுற்றுலாவோடுதான் வெளியூர்ப் பயணங்களைப் பலரும் தொடர்பு படுத்துவோம். ஆனால், பெரும்பான்மையான வெளியூர்ப் பயணங்கள் சுற்றுலாவுக்காக மேற்கொள்ளப்படுவதில்லை என்கிறது இந்த ஆய்வு.

குடும்பத்துடனான இரவு நேரப் பயணங்களில் 70.2% சமூக உறவுகள், குடும்ப நிகழ்வுகள், பண்டிகை முதலான சமய நிகழ்வுகளை முன்னிட்டுதான் மேற்கொள்ளப்படுகின்றன. ஓய்வு நேரம், சுற்றுலா, விளையாட்டு நிகழ்வுகள் முதலான காரணங்களுக்காக 7.4% பயணங்கள் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றன.

இருசக்கரத்தின் ஆட்சி

வெளியூர்ப் பயணங்களில் பேருந்துகள் முதலிடத்தைப் பிடித்தாலும் அன்றாட வேலை தொடர்பான பயணங்களின் போக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. தொழிலாளர்களில் 42.6% பேர் இருசக்கர வாகனங்களின் மூலம் தங்களின் பணியிடங்களுக்குப் பயணம் செய்வது தெரியவந்துள்ளது.

கிராமப்புறங்களில் 37.1%ஆக உள்ள இருசக்கர வாகனப் பயன்பாடு, நகர்ப்புறங்களில் 53%ஐ எட்டியுள்ளது. நகர்ப்புறங்களில் பொதுப் போக்குவரத்தைக் காட்டிலும் தனிநபர் வாகனப் பயன்பாடு கணிசமாக அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது. சொந்த வாகனம் வாங்கும் வசதி வாய்ப்பு கூடியிருப்பதாகவும் இதைக் கருதலாம்.

இல்லையேல் இருசக்கர வாகனங்களின் தேவை பணிவாய்ப்புக்கு ஏற்ப ஏற்றம் கண்டிருப்பதாகவும் கொள்ளலாம். நகர்ப்புறப் போக்குவரத்து நெரிசலுக்கும் அதையொட்டிய காற்று மாசுபாட்டுக்கும் இத்தகைய இருசக்கர வாகனப் பெருக்கமும் முக்கியக் காரணி.

இதற்கு நேர்மாறாக அன்றாட வேலைப் பயணங்களில் பொதுப் போக்குவரத்தின் பங்கு தேசிய அளவில் மிகக் குறைவாக உள்ளது. பேருந்துகள் 6.7%; ரயில்கள், மோனோரயில், டிராம் போன்றவை இணைந்து 2.1% பங்கை மட்டுமே வகிக்கின்றன.

இருப்பினும், சில மாநிலங்களின் பெருநகரங்களில் நகர்ப்புறப் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிரத்தில் மெட்ரோ, புறநகர் ரயில்கள் நகர்ப்புறத் தொழிலாளர்களின் பயணங்களில் 20.7% பங்கு வகிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் இது 16.5% ஆகவும், டெல்லி 14.4% ஆகவும் பதிவாகியுள்ளன. ஆனால், வேலைக்குச் செல்லப் பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டின் தேசிய நகர்ப்புறச் சராசரி 5% மட்டுமே.

பயண நேரமும் செலவும்

பலவிதமான போக்குவரத்துச் சாதனங்களின் வருகையால், பணியிடங்களை நோக்கிய பயண நேரம், கடந்த காலத்தைவிட அண்மையில் வெகுவாகக் குறைந்துள்ளது. நிலையான பணியிடங்களுக்குச் செல்லும் இந்தியத் தொழிலாளர்களின் சராசரிப் பயண நேரம் 25 நிமிடங்களாக உள்ளது. 83.4 சதவீதத் தொழிலாளர்கள் 30 நிமிடங்களுக்கு உள்ளாகவே தங்களின் பணியிடங்களைச் சென்றடைகின்றனர்.

பணி நிமித்தமாக நாள்தோறும் பயணம் செய்வதற்கு மாதந்தோறும் ஆகும் சராசரிச் செலவு ஒரு நபருக்கு ரூ.785 ஆக உள்ளது. கிராமப்புறத் தொழிலாளர்கள் மாதம் ரூ.612 செலவழிக்கும் நிலையில், நகர்ப்புறத் தொழிலாளர்கள் ரூ.1,044 வரை செலவிடுகின்றனர்.

பயணச் செலவில் பாலின இடைவெளி

இந்த ஆய்வில் மிக முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மற்றொரு அம்சம் பாலின இடைவெளி. அன்றாட வேலைக்காக ஒரு கி.மீ.க்கும் மேல் பயணம் செய்யும் ஆண்கள் 61.9% ஆக உள்ள நிலையில், பெண்களின் பங்கு 41.9% ஆக மட்டுமே உள்ளது.

இது பணிச் சந்தையில் பெண்களின் குறைந்த பங்கேற்பு, பயணிக்கும் தன்மையைக் காட்டுகிறது. மேலும், பயணச் செலவிலும் பாலின வேறுபாடு காணப்படுகிறது.

ஆண் தொழிலாளர்கள் தங்களின் அன்றாடப் பயணத்துக்காக மாதந்தோறும் ரூ.835வரை செலவிடுகின்றனர்.

பெண் தொழிலாளர்களோ சராசரியாக ரூ.533 மட்டுமே செலவிடுகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள், பஞ்சாப், டெல்லி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய பிற மாநிலங்களைத் தவிர்த்து, பெருவாரியான இந்திய மாநிலங்களில் பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் நடைமுறையில் இல்லை என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

ஆகவே, தேசிய அளவில் ஆண்களைக் காட்டிலும் பெண் தொழிலாளர்களின் போக்குவரத்துச் செலவினம் குறைவாக இருப்பது பணியிடத்தைச் சென்றடைய அவர்கள் கூடுதலாகச் சிரமப்படுவதைத்தான் உணர்த்துகிறது.

எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள், சாலைகள், பொதுப் போக்குவரத்து வலைப்பின்னல் உள்ளிட்டவற்றை வடிவமைக்க இந்த அறிக்கை ஒரு வலுவான வரைபடம்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT