பெண்கள் இன்று பல்வேறு துறைகளிலும் தங்களுக்குஎன்று தனியிடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், இந்தியச் சமூகத்தில் - குறிப்பாகக் கிராமப்புறங்களில், வீட்டு வேலைகளில் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகவில்லையோ என்கிற ஐயம் நிலவுகிறது.
ஆய்வு சொல்லும் உண்மை ஹரியாணாவில் தொழில்முனைவோராக விரும்பும் பெண்களிடம் அண்மையில் நடத்தப்பட்ட உரையாடல் இதை வலுப்படுத்துகிறது. சமூக / பண்பாட்டு விதிமுறைகளைக் கடந்து, ஊதியம் பெறும் வேலைகளுக்குப் பெண்களால் அதிகம் செல்ல முடியாததற்குக் காரணமாக, அவர்களின் அதிகப்படியான வீட்டு வேலைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
அந்தப் பெண்கள் வீட்டு வேலைகளில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். அவர்களின் சுமைகளைக் குறைப்பதற்காக, அவர்களின் பெண் குழந்தைகள் வீட்டு வேலைகளில் உதவி செய்கிறார்கள். ஆனால், வீட்டு வேலைகளில் ஆண் குழந்தைகள் பெரும்பாலும் ஈடுபடுத்தப்படுவதில்லை.
மத்தியப் புள்ளியியல் - அமலாக்க அமைச்சகத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் நேரப் பயன்பாட்டு ஆய்வு (Time Use Survey – TUS), தங்களின் நேரத்தை எவ்வாறு ஊதியம் பெறும், ஊதியம் பெறாத நடவடிக்கைகளில் மக்கள் செலவழித்து வருகிறார்கள் என்பதைக் கணக்கிடுகிறது.
அந்த அமைப்பு 2025இல் நடத்திய ஆய்வு, வேலைப் பகிர்வு (Division of Labour) என்பது ‘வயதுக்கு வரும்’ பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கிவிடுகிறது என்று குறிப்பிடுகிறது.
குழந்தைப் பருவத்தில் இருந்தே பெண் குழந்தைகளை இந்தியக் குடும்பங்கள் பழக்கிவருகின்றன. குழந்தைப் பருவத்தில், பெண் குழந்தைகளிடம் தொடங்கும் இந்தப் பழக்கம், வயது அதிகரிக்கும்போது உயர்கிறது. அதிக அளவு வேலைகள் செய்ய உகந்த பருவத்தில் (Productive Age – Prime Working Years) அதன் உச்சத்தை அடைகிறது என்றும் ஆய்வு விளக்குகிறது.
பாரபட்சம்
பெண் குழந்தைகள் வீட்டு வேலைகளைச் செய்வது 10 வயது முதல் அதிகரிக்கிறது. வளர் இளம் பருவத்தின் (Teen age) இறுதி, 20 வயதுவரை அது தொடர்ந்து, 30 வயதில் உச்சக்கட்டத்தை அடைகிறது.
அந்த வயதில் குறைந்தது ஒரு நாளில் 450 நிமிடங்கள் அதாவது, ஏழரை மணி நேரம் வீட்டு வேலைகளிலேயே அவர்கள் பொழுதைக் கழிக்க வேண்டியுள்ளது. ஆனால், ஆண்கள் 6 முதல் 75 வயதுக்குள் ஒரு நாளில் 65 நிமிடங்களைத் தாண்டி வீட்டு வேலைகளில் ஈடுபடுவதில்லை.
குழந்தைப் பருவத்தின் தொடக்கத்தில் இரு பாலினத்தவர்களும் வீட்டு வேலைகளைச் செய்யும் நேரத்தின் அளவு ஒன்றாகத்தான் உள்ளது. ஆனால், வயது அதிகரிக்கும்போது இது மாறுகிறது. பெண் குழந்தைகள், 10 வயதில் வீட்டு வேலைகள் செய்வதற்கு ஒரு நாளில் 15 நிமிடங்களைச் செலவிடுகிறார்கள். 15 வயதில் 75 நிமிடங்களும், 17 வயதில் 130 நிமிடங்களும் செய்கிறார்கள்.
ஆனால், ஆண் குழந்தைகள் தோராயமாக, ஒரு நாளில் 6 வயதில் 5 நிமிடங்கள் தொடங்கி குழந்தைப் பருவம் முடியும்போது 17 நிமிடங்கள்வரை வேலை செய்கிறார்கள். 6 முதல் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வீட்டு வேலை செய்யும் நேரம் நாளொன்றுக்கு 124 நிமிடங்களாக உள்ளது. அவர்கள் ஓய்வெடுக்கும் நேரம் 115 நிமிடங்களாகக் குறைகிறது.
ஆண் குழந்தைகள் ஓய்வெடுக்கும் நேரமும் குறைவாகத்தான் உள்ளது. அதேநேரம், அவர்கள் வீட்டு வேலைகள் செய்யும் நேரமும் குறைவாக உள்ளது. பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்வதற்காகக் கூடுதல் நேரம் செலவிடுவதால், அவர்களுடைய கல்வி பாதிக்கப்படுகிறது.
அதேநேரம், அனைத்து வயதிலும் ஆண்களைவிடப் பெண்கள் அதிக நேரம் கற்பதற்குச் செலவிடுகிறார்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. படிக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் வீட்டு வேலைகளைச் செய்வதால், ஓய்வு நேரங்களில் பெண்கள் தங்களுக்கெனத் தனிப்பட்ட வகையில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
இவர்கள் ஓய்வு நேரத்தில் செய்யும் வேலைகளைப் பொருளாதாரரீதியாகக் கணக்கிட முடியாவிட்டாலும், அப்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள்தான் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க, சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள, உடல்திறனை மேம்படுத்திக்கொள்ள வழிவகுக்கும் நேரமாக உள்ளது. எதிர்காலத்தில் அவர்கள் வேலையில் சேர்ந்து முன்னேற வழிவகுக்கும் இந்த நடவடிக்கைகள் குறைவது, அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
வீடும் வெளியுலகமும்
வீட்டு வேலைகளில் சமையல் முக்கியமான வேலையாக உள்ளது. 15 முதல் 17 வயது வரை உள்ள வளரிளம் பெண்களில் 42.4 சதவீதம் பெண்கள் சமையல் செய்கிறார்கள். ஆண் குழந்தைகளில் 2.9 சதவீதத்தினர் மட்டுமே அந்த வயதில் சமையலில் ஈடுபடுகிறார்கள்.
வீட்டைச் சுத்தம் செய்வது, துணி துவைப்பது என அனைத்து வேலைகளிலுமே நேரம், ஈடுபடுதல் என அனைத்திலுமே பாலின இடைவெளி அதிகமாக உள்ளது. குழந்தைப் பருவத்துக்கும் வயது வந்தோர் பருவத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் பெண் குழந்தைகள் வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் ஆண் குழந்தைகள் வெளி உலகத்துடன் ஊடாடுவதற்கும் பழகிக்கொள்கிறார்கள்.
இந்தப் பாலின வேறுபாடுகள்தான், ஊதியம் பெறும் தொழிலாளர்களாகப் பெண்கள் உருவாவதைத் தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
நாட்டின் வேலைவாய்ப்பு / வேலையின்மை நிலவரங்களை மதிப்பிடும், தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey - PLFS) 2025இன் தகவலின்படி, பெண்களை அதிகம் தொழில் துறையில் ஈடுபடவிடாமல் தடுப்பது குழந்தை வளர்ப்பும் வீட்டுவேலைகளும்தான் என்று தெரியவருகிறது.
பெண்களின் வேலை தொடர்பாகக் கொண்டுவரப்படும் கொள்கைகள் பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு, பொதுச் சமையலறை, பாதுகாப்பான உள்கட்டமைப்பு வசதிகள், வேலையில் நெகிழ்வுத்தன்மை, சமூகப் பாதுகாப்பு குறித்து மட்டும்தான் பேசும்.
ஆனால், நேரப் பயன்பாட்டு ஆய்வு, திட்டங்கள், கொள்கைகள் இன்னும் முன்னதாகவே தொடங் கப்பட வேண்டும் என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
பெண்களின் பன்முகத்திறமை வளர வேண்டும் எனில், வீட்டுக்குள் செய்யும் வேலைகள், வெளியே சென்று செய்யும் வேலைகள் என இரண்டு வேலைகளிலும் இருபாலருக்கும் சம வாய்ப்பு கொடுத்து வளர்க்க வேண்டும். அதுவே பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டும்!