இடது: எஸ்.எஸ்.மாரிசாமி எழுதிய ‘சுயராஜ்யம்’ நூல் | வலது: காமராஜர்

 
சிறப்புக் கட்டுரைகள்

தமிழக காங்கிரஸ் கமிட்டியும், அன்றைய நெருக்கடிகளும் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 75

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

1957 காலகட்டத்தில் முதுகுளத்தூர் கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பசும்பொன் தேவரை சிறையிலிருந்து சட்டரீதியாக விடுவிக்கப் போராடியவர்களுள் முக்கியமானவர் எஸ்.எஸ்.மாரிசாமி. நாடாளுமன்ற உறுப்பினரான இவர், சிறந்த பத்திரிகையாளரும் கூட. மூதறிஞர் ராஜாஜிக்கு மிகவும் நெருக்கமானவர். அதேநேரம் பெருந்தலைவர் காமராஜரின் அன்பையும் பெற்றவர். உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை அறிந்தவர். அதைப்பற்றி நூல்களும் எழுதியுள்ளார். அவர் எழுதிய ‘சுயராஜ்யம்’ என்ற புத்தகத்தில் காங்கிரஸ் கட்சியில் நிலவிய கருத்து மோதல்கள், தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து விலாவாரியாக எழுதியுள்ளார்.

அந்தப் புத்தகம் நீண்ட நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதை எஸ்.எஸ்.மாரிசாமி எனக்குப் பரிசாக அளித்தார். பின்னாளில் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் கொடுத்த அந்தப் புத்தகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் 1957 - 58 காலகட்டங்கள் மிகவும் நெருக்கடியானவை. கருத்து மோதல்கள் உச்சத்தில் இருந்தன.

அன்றைய காலகட்டத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஒரு குழுவாகவும், ராஜாஜி தலைமையில் ஒரு குழுவாகவும், கம்யூனிச சித்தாந்தத்தடன் சோசலிச காங்கிரஸ் என மற்றொரு குழுவாகவும் காங்கிரஸ் பிரிந்து கிடந்தது. அப்போதைய சில சம்பவங்களை தனது நூலில் விரிவாக எடுத்துரைத்துள்ளார். அதை அப்படியே, அவரது வார்த்தைகளாலேயே கீழே தருகிறேன்...

1952-ல் இருந்து 1957 வரை, தமிழ்நாடு காங்கிரஸை பொறுத்தவரை மிக சங்கடமான நேரம். அமிர்தசரசில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி மொழிவாரி பிரிவினைகள் ஏற்படுவதை எதிர்த்தது. இரண்டு மூன்று மாநிலங்களை ஒன்றுசேர்த்து பல பிரதேசங்களாக வைக்கலாம் என்றும், வெறும் மொழி அடிப்படையில் பிரித்தால் தவறாக முடியும் என்றும் காரிய கமிட்டி கூறியது. இந்த கூட்டத்தையடுத்து, ஐதராபாத்தில் நாணல் நகரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடியது.

இக்கூட்டத்திற்கு ராஜாஜி விஜயம் செய்திருந்தார். அவர் பேசும்போது மொழிவாரி மாகாணம் ‘நாகரிகம் அற்றது’ என்றார். ‘நாகரிகம் அற்றது’ என்பதை நானாகத்தான் போடுகிறேன். உண்மையில் அந்த வார்த்தைக்கு ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று பொருள். ராஜாஜி அப்படி பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய பத்திரிகையில் ராஜாஜி பேசியதை ஆதரித்து தட்சிணபிரதேசம் வேண்டும் என்று எழுதினேன். பல கட்டுரைகள் இதையொட்டி வந்தன.

பெருந்தலைவர் காமராஜருக்கு இது பிடிக்கவில்லை. அவர் முணுமுணுப்பதாக நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். அதை நான் லட்சியம் செய்யவில்லை. காமராஜரிடம் மற்ற உறுப்பினர்களின் பிடி குறைந்து வந்தது. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால் கட்சி ஊழியர்களை காமராஜர் மதிக்கவில்லை. அதேபோல் தொண்டர்களும் அவரை லட்சியம் செய்யவில்லை - பொருட்படுத்தவில்லை. பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம் போன்றவர்கள் இருந்தால் போதும் என்று காமராஜர் நினைத்தார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் என் காரியாலயம் இருந்தது. அங்குதான் பல கார்கள் நிற்கும். பலர் வந்து போவார்கள். அவர்கள் எல்லோரும் காமராஜருக்காக உயிரையும் கொடுத்து வேலை செய்தவர்கள். தன்னலம் கருதாமல் எந்தவிதமான தியாகமும் செய்து வந்தவர்கள். எல்லோரும் தங்கள் குறைகளைப் பற்றி கூறுவார்கள். அதைக் கேட்ட நான் சில சமயம் காமராஜரிடம் போய் பேசுவேன். யாரைப் பற்றி பேசினாலும், ‘அவன் இதைக் கேட்பான், அதைக் கேட்பான்’ என்று குறிப்பிடுவார். நான் இல்லாத சமயம் என்னைப் பற்றியும் குறை சொல்வார். தொடர்ந்து பத்து இருபது நாட்கள் போகாமல் இருந்தேன். ஆனால் அவர் அடிக்கடி என்னைப் பற்றி விசாரிக்கிறார் என்று மட்டும் தெரியும். ஒருநாள் கடுமையான வெறுப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்தது.

மதுரை மாவட்டம் கொடைக்கானலில் ஜெயராஜ் நாடார் என்ற பஸ் அதிபர் இருந்தார். அவர் எனக்கு நல்ல நண்பர். சென்னைக்கு வந்தால் நாடார் மேன்ஷனில் தங்குவார். என்னையும் சந்திப்பார். ஊர்க் கதை எல்லாம் பேசுவோம். அவர் பெயர் மட்டும் ஜெயராஜ் இல்லை, அவர் உள்ளமும் உறுதியும் வெற்றியை நம்புவது. “ஐயா என் தலையைப் பாருங்கள். இது எப்படி ஆனது என்றால் உருளைக் கிழங்கு கூடையை தலையில் சுமந்து சுமந்து இப்படி ஆகிவிட்டது. ஆனால் இப்பொழுது எனக்கு பஸ் அதிபர் என்று பட்டம்” என்பார். அவ்வளவு எளிய உள்ளம்.

ஒரு சமயம் அவர் வந்து இருந்தார். மதுரை நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். செங்கல்பட்டிலுள்ள எங்கள் கட்சியைச் சேர்ந்த வி.கே.ராமசாமி முதலியார் வந்து இருந்தார்.

அந்த சமயத்தில் ராஜாஜி மந்திரி சபை நடக்கிறது. வந்த நண்பர்கள் எல்லோரும் வெளியூர் போய் கையெழுத்து வேட்டை நடத்த வேண்டும் என்றார்கள். தியாகிகளுக்கு கொடுத்த நிலத்தையும் ராஜாஜி பறிப்பதாக சொன்னார்கள். அதோடு புதுக் கல்வி திட்டமும் வந்தது. இதற்கு எல்லாம் எதிர்ப்பு திரட்ட மாநாடு போடவேண்டும் என்றார்கள். சொன்ன நண்பர்கள் பணம் பற்றி பேசவில்லை. எங்களிடம் பணம் இல்லாத காலம்.

அந்த சமயத்தில் ஜெயராஜ் நாடார் வந்து உட்கார்ந்திருந்தார். நீங்கள் சொல்வதெல்லாம் சரி, ஆனால் போக்குவரத்துக்கு பணத்துக்கு என்ன பண்ணுவது? என்று கேட்டேன். அப்போது ஜெயராஜ் நாடார் கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி தன் சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்துப் போட்டார். அதை எடுத்து எண்ணினால் ரூ.625 இருந்தது. அதில் ரூ.20 எடுத்துக் கொண்டார். மீதியை எங்கள் கையில் கொடுத்து சுற்றுப் பயணம் செல்லச் சொன்னார். அவர் கொடுத்த பணத்தை அவர் முன்னாலேயே இரண்டு மூன்று பேர் எடுத்து சென்றார்கள்.

இவரை மனதில் ஒரு பக்கம் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நான் உண்மை கதைக்கு வருகிறேன். காமராஜர் முதலமைச்சர் ஆகிவிட்டார். அமைச்சரவையும் அமைந்துவிட்டது. காலம் சென்ற பரமேஸ்வரன் பஸ் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில் ஜெயராஜ் நாடார் மிகவும் வாடிப் போய் ஒருநாள் என் காரியாலயத்திற்கு வந்தார். அவர் அந்த மாதிரி இருக்க நான் பார்த்ததே இல்லை. அவர் என்னிடம் சொன்னார். “நல்ல வருமானம் வரக் கூடிய ஒரு ரூட்டை வேண்டுமென்றே என்னிடமிருந்து வேறு ஒரு கம்பெனிக்கு அதிகாரிகள் கொடுத்து விட்டார்கள். நிறைய கையூட்டு நடைபெற்று இருக்கிறது” என்றார்.

ஜெயராஜ் நாடாரை காமராஜருக்கு நன்கு தெரியும். அவர் எங்களுக்குப் பணம் கொடுத்ததும் தெரியும். இருந்தும் இப்படி நடந்து இருக்கிறதே என்று கோபம் வந்தது.

நாடாரை என் அலுவலகத்தில் உட்கார வைத்து விட்டு நான் செகரட்டேரியட் போய் காமராஜரை சந்தித்தேன். நாடார் விவஷயத்தைச் சொன்னேன். ‘நிர்வாகத்தில் இதெல்லாம் சகஜம்’ என்றார். பின்னர், ‘நீங்கள் போய் பரமேஸ்வரனைப் பாருங்கள்’ என்றார். அவர், விவரங்களை எல்லாம் கேட்டுவிட்டு என்னைப் பார்த்துச் சொன்னார். “நீங்கள் இதிலெல்லாம் தலையிடக் கூடாது. இது நிர்வாகக் காரியங்கள். எனக்கு பிறர் தலையீடு பிடிக்காது” என்றார்.

பரமேஸ்வரன் இவர் மந்திரி ஆவதற்கு முன்பே எனக்கு நன்கு தெரியும். என்னுடன் அன்பாக பழகுவார். தன்னுடைய கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் எடுத்துச் சொல்வார். இந்தியன் கமர்ஷியல் பாங்கில் அவர் கடன் வாங்கி இருந்தார். அவர்கள் வழக்கு தொடர்ந்து விட்டார்கள். அந்த நெருக்கடியான நேரத்தில் அவர் புகலிடம் புகுந்தது என காரியாலயம்தான். அவரை உட்கார வைத்துவிட்டு சங்கரலிங்க ஐயரைப் பார்க்கச் சென்றேன்.

அவர் தான் இந்தியன் கமர்சியல் பாங்க் அதிபர். அவர் பெரிய உள்ளம் கொண்ட பிரமுகர். அவரிடம் பரமேஸ்வரன் மீது வழக்கு தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் அப்படியே செய்வதாக வாக்களித்தார். இப்படிப்பட்ட பரமேஸ்வரன் என்னிடம் மிகவும் கடுப்படித்தார் போல் பேசியது எனக்கு எரிச்சலாக இருந்தது. நானும் கோபத்தில் ஏதேதோ பேசி விட்டு வெளியேறி விட்டேன். நான் திரும்பவும் சென்றது காமராஜரிடம். பரமேஸ்வரன் சொன்ன பதிலைக் கேட்டு “நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் போய் வாருங்கள்” என்றார்.

இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன. ஜெயராஜ் நாடார் வந்து வந்து போனார். ஐயா காரியம் ஆகி விட்டதா? என்று கேட்பேன். இல்லை என்பார். ஒரு சமயம் இதை “நீங்கள் பெரிதுபடுத்த வேண்டாம்” என்றார். அடுத்து காமராஜ் வீட்டிற்கு போய் வந்ததையும் சொன்னேன். நாடார் ரொம்ப வருத்தப்பட்டார்.

இப்போது தட்சிண பிரதேசத்தைப் பற்றி பல கட்டுரைகள் வெளியிட்டேன். அதை எதிர்ப்பவர்களைச் சாடினேன். புள்ளி விவரங்கள் எல்லாம் கொடுத்தேன். இதை எதிர்ப்பவர்கள் சுயநலத்திற்காக எதிர்க்கிறார்கள். காரணம் கர்நாடகம், மலபார், ஆந்திரம் இவற்றோடு அசெம்பிளி பெரிதாகி உண்டாகி விடும். அதை சமாளிக்க முடியாதவர்கள்தான் பயப்படுகிறவர்கள். தட்சிண பிரதேசத்தை எதிர்க்கிறார்கள் என்று எழுதினேன்.

காமராஜ் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அந்தக்கால கூட்டத்தில் ‘தட்சிண பிரதேசத்தைப் பற்றி பிரச்சினை உண்டு பண்ணிய மாரிசாமியை ஆறு வருடத்திற்கு கட்சியிலிருந்து நீக்குகிறேன்’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஒரு தீர்மானம் போட்டார். நான் பயப்படவில்லை. காமராஜருடைய கோபத்திற்கு நான் உள்ளானதில் வருத்தமுமில்லை. தொடர்ந்து எழுதி வந்தேன். என்னை நீக்கியதை பிரசுரித்தேன். பெரும் தலைவரைக் கடுமையாகத் தாக்கினேன். இந்தக் கட்டத்தில் வெங்கடகிருஷ்ண ரெட்டியார், திருக்கோயில் ராஜ கோபால் மற்றும் மதுரை கிருஷ்ணமூர்த்தி ஆகிய நாங்கள் நால்வரும் டெல்லி போய் நேருஜியைப் பார்ப்பது என்று தீர்மானித்தோம். அதன்படி நால்வரும் ரயிலில் டெல்லி போனோம்.

நாங்கள் போன நேரம் மோசமான நேரம். நாங்கள் போன நேரத்தில் நேருஜி காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் போக இருந்தார். நாங்கள் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்குவதற்கு பகல் ஒரு மணி ஆகிவிட்டது. நேருஜி லண்டன் போவது எனக்குத் தெரியாது. நேருஜியுடைய காரியதரிசிக்கு நான் போன் பண்ணினேன். அவர் பெயர் சி.ஆர்.ஸ்ரீனிவாசன். நான் யார் என்று சொன்னதும் ‘M.R.A. எக்ஸ்போஸ்ட் எழுதிய மாரிசாமியா?’ என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னேன். நமது பெயரை தெரிந்து வைத்திருக்கிறாரே என்று எனக்கு மட்டமற்ற மகிழ்ச்சி. “நேருஜி நாளை காலை 4 மணிக்கு லண்டன் போகிறார். இன்று ஏகப்பட்ட நிகழ்ச்சி இருக்கிறது. அவர் எப்படி சந்திப்பார்? தாங்கள் ஒருவாரம் தங்கி இருக்க முடியுமா?” என்று கேட்டார்.

“நாங்கள் மிகுந்த கஷ்டத்தோடு இங்கு வந்து இருக்கிறோம். ஒருநாள் இரண்டு நாள் தங்குவதற்குத்தான் பணம் இருக்கிறது. அன்புகூர்ந்து எப்படியாவது அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக் கொடுக்க வேண்டும்” என்று சொன்னேன். அவர் என்னுடைய போன் நம்பரை வாங்கிக் கொண்டு திரும்ப போன் பண்ணுவதாகச் சொன்னார். அந்த மனிதர் சொன்னபடியே அதாவது ‘மாலை 4.30 மணிக்கு நேருஜி அலுவலகத்துக்கு வந்து விடவும். பத்து நிமிடங்கள்தான் ஒதுக்கப்பட்டு இருக்கிறது’ என்றார். அவருக்கு நன்றி சொன்னேன். அன்று மதியம் 3.30 மணிக்கே நேருஜி காரியாலயத்திற்கு சென்றுவிட்டேன்.

என்னுடன் டெல்லி வந்த கிருஷ்ணமூர்த்தியும் திருக்கோயில் ராஜுவும் கடைசி நேரத்தில் காலை வாரி விட்டுவிட்டார்கள். வெங்கடகிருஷ்ண ரெட்டியார் மட்டும்தான் என்னுடன் வருவதாகச் சொன்னார். அவர் கூட மிகுந்த கஷ்டத்தோடுதான் வந்தார். காரணம் அவருக்கு உடல் நிலை சரியில்லை. மற்றவர்கள் வரவில்லை என்ற கோபம் வேறு இருந்தது.

நாங்கள் பேட்டிக்காக ஸ்ரீனிவாசன் அறையில் காத்துக் கொண்டு இருந்தோம். எஸ்.கே.பட்டீல், கந்துபாய் தேசாய், கே.டி.மாளவியா போன்றவர்கள் எங்கள் அறைக்குள் வந்து வந்து போனார்கள். அனைவரும் நேருஜியைக் காண வந்திருப்பவர்கள் என்று ஸ்ரீனிவாசன் சொன்னார். “எப்படிப்பட்ட தலைவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். நீங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இரண்டு நிமிடங்கள் குறைத்து கொள்ள வேண்டும்” என்றார். சரியாக 4.40 மணிக்குத்தான் நேருஜி எங்களைக் கூப்பிட முடிந்தது. அவர் அறைக்குள் சென்றோம். வெங்கடகிருஷ்ண ரெட்டியார் ‘நீங்கள் பேசுங்கள்’ என்றார்.

நான் தட்சிண பிரதேச விஷயத்தைச் சொன்னேன். அகில இந்திய காரியக் கமிட்டி மாகாண கமிட்டியை விட சிறியதா? என்று கேட்டேன். இந்த மாதிரி கேள்வியை வேறு யாரும் கேட்டு இருப்பார்களோ என்னவோ! என் கேள்வியைக் கேட்டதும் நேருஜி அவர்கள் சிலிர்த்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். என்ன சொல்கிறீர்கள் என்றார். கையில் வைத்திருந்த காரியக் கமிட்டி தீர்மானத்தைக் கொடுத்தேன். பிறகு காமராஜரின் போக்கை விவரித்தேன். காங்கிரஸ் பணக்காரர்களிடம் போய்விட்டது என்றேன்.

ஸ்ரீனிவாசன் ஒரு முறை தலையை அறைக்குள் நீட்டினார். கடைசியாக 18வது நிமிடத்தில் நேருஜி இருக்கையில் இருந்து எழுந்தார். அவரது மேஜை லாடம் போலிருக்கும். அதைச் சுற்றி வந்து என் தோளில் கையைப் போட்டு “உங்களை நான் பாராட்டுகிறேன்” என்றார். பிறகு அதிக நேரம் தனக்கு இல்லை என்றும் நான் ஒரு காரியம் செய்ய வேண்டும் என்றும் நாளை காலை கோவிந்த் வல்லப பந்தை சந்திக்க வேண்டும் என்றும் நாளைக் காலை லண்டன் போகிறேன் எனவும் சொன்னார். எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

வெளியே வந்து வாடகைக் காரில் ஏற புறப்படும் போது எதிரில் ஒரு கார் வந்து எங்கள் காரை மறித்தது. காரிலிருந்து இறங்கிய பிரமுகர், “நான் நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரியிடமிருந்து வருகிறேன். நிதி அமைச்சர் உங்களைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்” என்றார்.

என்கூட வந்த ரெட்டியாரிடம் சொன்னேன். நாம் போக வேண்டாம் என்று. ஆனால் அவர் போகலாம் என்றார். போகிற பாதையில் அவர் கேட்டார். “ஏன் போக வேண்டாம்?” என்று. “நாம் நேருஜியிடம் என்ன பேசினோம் என்று அறிய கூப்பிடுகிறார்” என்றேன். இருந்தாலும் வாக்கு கொடுத்த காரணத்தால் சென்றோம். டி.டி.கே. எங்களை வரவேற்றார். அவருக்கு என்னிடம் அன்பு உண்டு. ரெட்டியார்தான் பேசினர்! நான் மவுனமாக இருந்தேன். நாங்கள் ஹோட்டல் திரும்பியதும் காணாமற்போன நண்பர்கள் வந்தார்கள். நேருஜி என்ன சொன்னார்கள் என்று கேட்டனர்.

என்ன பேசினோம் என்று சொன்னதும் மட்டில்லா மகிழ்ச்சி கொண்டனர். மறுநாள் காலை 10 மணிக்கு கோவிந்த வல்லப பந்தைப் பார்க்கச் சென்றோம். அவர் உத்தரப்பிரதேச முதமைச்சராக இருந்தவர்! அவர் சத்தியாகிரகத்தின் போது போலீஸ் தடியடி பட்டு கழுத்து நரம்பு பிசகி கஷ்டப்பட்டவர். அதன் விளைவாக அவர் தலை சிறிது ஆடிக் கொண்டே இருக்கும். நாங்கள் போன நேரத்தில் அவர் குளிருக்காக கனப்பு அடுப்பு அருகில் இருந்தார். நாங்கள் வந்ததை காரியதரிசி சொன்னதும் ‘Where is that young man?' என கேட்டார். நேருஜிதான் என்னைப் பற்றிக் கூறியிருக்க வேண்டும். ஏனெனில் வேகமாகப் பேசியவன் நான்தான்!

நாங்கள் பண்டிட்ஜியிடம் பேசியதை எல்லாம் சொன்னோம். “நீங்கள் பேசியது எல்லாம் அவர் சொன்னார். நீங்கள் மிகப் பெரிய தலைவரை எதிர்க்கிறீர்கள். ஒரு காரியம் பண்ண வேண்டும். காங்கிரஸ் தலைவரான யு.எம்.தேபரை பாருங்கள். ஒன்று மட்டும் நான் சொல்கிறேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் காங்கிரஸை விடாதீர்கள்” என்றார்.

அவருடைய பெருந்தன்மையைக் கண்டு ஆச்சரியப்பட்டோம். தேபரின் காரியாலயம் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்தது. அது ஜந்தர் மந்தர் ரோட்டில் இருந்தது. நாங்கள் போய்ச் சேர்ந்ததும் தலைவர் உடனடியாக வரச் சொன்னார். அவர் ஒரு பெரிய தூணுக்கு அருகே இருந்தார். என்னை அவருக்கு பிடிக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை. சிடுசிடு என்று விழுந்தார். “உங்கள் வயது என்ன, காமராஜ் வயது என்ன. அவரை நீ எப்படி எதிர்க்க முடியும்?” என்றார். எனக்கு பொறுமையாக பதில் சொல்ல முடியவில்லை. நண்பர்கள் ஏதேதோ சொன்னார்கள். தன்னுடைய கோபம் தீரும் வரை பேசிக் கொண்டே போனார்.

நான் இடைமறித்து “ஐயா இந்தக் கட்டிடம் இந்த தூண் எல்லாம் வெள்ளைக்காரர்களுக்கு முன்பு இருந்த முகலாயர் காலத்தில் கட்டியது. நம்மைவிட இந்த தூணுக்கு வயது அதிகம். அதற்காக இந்த தூணை நாம் கும்பிட வேண்டுமா?” என்றேன். நிலைமை மாறி விட்டது. தேபர் கோபத்தைக் குறைக்கவில்லை. ஏதோ சொல்ல வந்தார். சொல்லவில்லை. வெளியே வந்தோம். இதன் பின் ஓயாது போராட்டம்தான். தேர்தல் வந்ததும் டெல்லி மேலிடத்திடம் காங்கிரஸ் லிஸ்ட்டை காமராஜர் கொடுத்தார். நாங்களும் ஒரு லிஸ்ட் கொடுத்தோம். இறுதியாக காமராஜர் எச்சரிக்கை விடுத்தார். “தேர்தல் நடக்க வேணும் என்றால் எங்கள் லிஸ்ட்டை வைத்து தேர்தல் பண்ணுங்கள். இல்லை என்றால், அவர்களை வைத்து தேர்தல் பண்ணுங்கள்” என்றார்.

பார்லிமெண்டரி கமிட்டி இதற்கு மேல் என்ன பண்ணும்? ஆனால் எங்கள் லிஸ்டில் எம்.எஸ்.பொன்னம்மாள் என்று ஒரு காங்கிரஸ் பெண் வேட்பாளரை அறிமுகப்படுத்தி இருந்தோம். இந்த பொன்னம்மாள் அம்மையாரை எனக்குத் தெரியாது. ஆனால் எங்களுடைய பெரு முயற்சியால் சட்டசபை உறுப்பினர் ஆனார்.

இந்த நேரத்தில் பொதுத் தேர்தல் வந்தது. மதுரையில் கூட்டம் போட்டு காங்கிரஸை எதிர்க்க வேண்டும் என்று பேசினோம். அப்பொழுது ராஜாஜிக்கு வேண்டியவர் ஒருவர் மதுரை வந்தார். உங்கள் கட்சிக்கு வேறு பெயர் எதுவும் வைக்க வேண்டாம். வேண்டுமானால் காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி (கா.சீ.க) என்று வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

பல இடங்களில் போட்டி போட்டோம். காமராஜருக்கு எதிராக ஜெயராம் ரெட்டியாரை நிறுத்தினோம். அதே மாதிரி காமராஜர் நிறுத்திய செட்டி நாட்டு அரசரை எதிர்த்து சா.கணேசனை நிறுத்தினோம். பல இடங்களில் எங்கள் வேட்பாளர்கள் நின்றார்கள். ஆனால் வெற்றி மட்டும் கிடைக்கவில்லை. ஒரு 12 பேர் மட்டுமே ஜெயித்தார்கள். அதோடு பார்வர்டு பிளாக்கோடு ஒப்பந்தம் செய்து கொண்டு சட்டமன்றத்தில் 23 பேராக ஆனோம். எங்கள் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக விளங்கியது. அதற்குத் தலைவர் வி.கே.ராமசாமி முதலியார். அவர் பழைய காங்கிரஸ்காரர். மேல் இடங்களில் எல்லாம் செல்வாக்கு உள்ளவர்.

பக்தவத்சலத்தின் சம்பந்தி. அப்போது திமுக 15 இடங்களை பிடித்து இருந்தது. அது இரண்டாவது எதிர்க்கட்சி. இந்த நேரத்தில்தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் வகுப்பு கலவரம் மூண்டு, சாதிப் பூசல் பெரும் தீயாகப் பரவியது. அதைத் தொடர்ந்து பசும்பொன் தேவர் கைது போன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிந்தன....

இவ்வாறு அந்தப் புத்தகத்தில் கூறியுள்ளார் எஸ்.எஸ்.மாரிசாமி...

(தொடர்வோம்...)

SCROLL FOR NEXT