சிறப்புக் கட்டுரைகள்

14-ம் ஆண்டில் ‘இந்து தமிழ் திசை’ - வாசிப்பால் வசமான வாசக உறவுகளே..!

13-ம் ஆண்டு நிறைவு...

செய்திப்பிரிவு

தமிழால் இணைந்து...

நம்பிக்கைக் கரம்பற்றி..

எழுத்தில் எழுச்சியுற வைத்து...

வாசக உறவுகளாய் உடன் நின்று வழிகாட்டி...

உங்களின் அபிமான ‘இந்து தமிழ் திசை’ நாளிதழை

14-ம் ஆண்டில் வெற்றிகரமாய் நடை போட வைத்துள்ளீர்கள்.

உங்களின் எதிர்பார்ப்புக்கும், ரசனைக்கும் ஏற்ற வகையில், நித்தம் நித்தம் கண்ணுங்கருத்துமாய் செய்திகளைப் பகிர்ந்து 13 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ். அத்தனைக்கும் காரணம் வாசகர்களாகிய உங்களின் பேராதரவன்றி வேறெதுவுமில்லை.

13-ம் ஆண்டில் நுழையும்போது, வாசகர்களின் விருப்பப்படியே, பேரவைத் தேர்தலுக்கான செய்தி சேகரிப்பை முன்கூட்டியே எதிர்கொள்ளப் போவதாக அறிவித்தோம். மற்ற நாளிதழ்கள் களமிறங்கும் முன்பே, தமிழகமெங்கும் நமது செய்தியாளர்கள் குழு விரைந்து செயலாற்றியது.

தினமும் இரண்டு பக்கங்களில் தேர்தல் விருந்து படைத்தோம். கட்சி வித்தியாசம் பாராது, நடுநிலையோடு சுவாரஸ்யம் குறையாமல் நாம் படைத்த தேர்தல் விருந்தை, வாசகர்களாக நீங்கள் ரசித்து வாசித்ததோடு பாராட்டுகளைப் பறக்கவிட்டீர்கள்.

அரசியல் செய்திகளில் மட்டுமின்றி அனைத்து தரப்பு செய்திகளிலும், ஒரு தெளிவான, நடுநிலையான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் குழு. 14-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில், வாசகர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப ’இந்து தமிழ் திசை’ நாளிதழ், தன்னை மீண்டும் மீண்டும் மெருகேற்றிக் கொள்ளும் வேலைகளில் இறங்கிவிட்டது என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டில், நமது நாளிதழில் புதிய புதிய பகுதிகள், தொடர்கள், கட்டுரைகள் இடம்பிடித்தன. அவை அனைத்துமே வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. பல தொடர்கள் வாசிக்க மட்டுமின்றி, அன்பு வாசகர்களின் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த தருணங்களைப் பெருமகிழ்வுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

கல்வி, வேலை, மருத்துவம், விவசாயம், மகளிர் நலன், சுற்றுச்சூழல், சட்டம் என எல்லாவற்றிலும் நமது நாளிதழில் எழுதிய ஆகச் சிறந்த ஆளுமைகள் மூலம் எண்ணற்ற வாசகர்கள் பயன்பெற்றுள்ளனர். வாசகர்கள் வரிசைகட்டி அலைபேசியில் மேற்கொண்ட அழைப்புகளாலும், கேள்விகளாலும், தெளிவுகளாலும் ஆளுமைகள் நெகிழ்ந்த தருணங்கள் கணக்கிலடங்கா.

அந்தத் தருணங்களை ஆளுமைகள் நம்மிடம் சிலாகித்துப் பகிர்ந்து கொண்ட போது, உள்ளபடியே நமது நாளிதழ் பயணம் அர்த்தம் பொதிந்ததாக இருப்பதில் மன நிறைவு கொள்கிறோம்.

பேரவைத் தேர்தல் சமயத்தில் செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு, இணையதள வாசகர்களை ’இந்து தமிழ் திசை’யின் hindutamil.in என்கிற இணையதளம் தன்பால் ஈர்த்து வைத்திருந்தது என்றே சொல்லலாம்.

ராசி பலன்கள், மருத்துவக் குறிப்புகள், செய்தித் துணுக்குகள், இணைப்பிதழ்களில் இருந்து எடுக்கப்பட்ட அரிய தகவல்கள் என அத்தனையையும் இந்து தமிழ் திசை இணையதளத்தில் தினம்தினம் பதிவு செய்து, தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது நமது இணையதள ஆசிரியர் குழு. அரிய வீடியோக்களை அதிகளவில் வெளியிட்டு பல மில்லியன் வாசகர்களைக் கவர்ந்து வருகிறது நமது இணையதளம்.

நமது பிரதான யூடியூப் சேனலின் சப்ஸ்க்ரைபர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தொடவிருக்கிறது. தற்போதைய நிலையில், நம்முடைய முகநூல் பக்கத்தை 3.2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்த எண்ணிக்கை எக்ஸ் தளத்தில் 1.2 மில்லியன் ஆகவும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 573K ஆகவும் உள்ளது.

நாளிதழுடன் சேர்ந்து, நமது தமிழ் திசை பதிப்பகமும் வேகமான வளர்ச்சி கண்டு வருவதில் வாசகர்களின் பங்கு மகத்தானது. புதிய புதிய தலைப்புகளில் நமது வெளியீடுகள் வாசகர்களின் வாசிப்புக்குப் பலம் சேர்த்து வருகின்றன. ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் குறுகிய காலத்திலேயே 250-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ளது.

அரசியல், சமூகம், பொருளாதாரம், மொழி, இலக்கியம், இலக்கணம், அறிவியல், வரலாறு, ஆன்மிகம், ஆரோக்கியம், சிறுவர் நூல்கள், பெண்ணியம், தத்துவம், வாழ்வியல் என பல துறைகளைச் சேர்ந்த நூல்களைப் பதிப்பிப்பதில் நமது பதிப்பகம் பெருமை கொள்கிறது.

சமீபத்தில் வெளியான ‘அப்துல் கலாம் - சொல்லப்படாத கதைகள்’ என்ற தலைப்பில், கலாமின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே. பிரசாத் எழுதிய நூல், இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டாக்டர் கு.கணேசன் எழுதிய ‘இதயம் போற்று’, பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பன் எழுதிய ‘முதலீடுகள்’ மற்றும் அமெரிக்கப் பேராசிரியர் ஸ்காட் ஆர்.ஸ்டிரவுட் எழுதிய ‘பி.ஆர்.அம்பேத்கரின் அறிவுஜீவித வரலாறு’ முதலான நூல்கள் வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று பெருமளவில் விற்பனையாகி வருகின்றன.

வாசகர்களோடு இணைந்தே பயணிக்கும் ‘இந்து தமிழ் திசை' நாளிதழ், பல்வேறு தரமான நிகழ்ச்சிகள் மூலம் வாசகர்களுடனான குடும்ப உறவைப் புதுப்பித்துக் கொண்டே வருகிறது. போற்றுதலுக்குரிய ஆளுமைகளை அடையாளம் கண்டு மக்களிடம் கொண்டு செல்லும் விருது நிகழ்ச்சிகளான மருத்துவ நட்சத்திரம், அன்பாசிரியர் போன்றவற்றை இன்றளவும் வாசகர்கள் கொண்டாடி வருகின்றனர். மாணவர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் மகளிருக்கும் ரத்தினக் கம்பளம் விரிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

‘இந்து தமிழ் திசை'யின் வெற்றிப் பயணத்தில் கடந்த 13 ஆண்டுகளாகக் கைகோத்து நிற்கும் வாசகர்களாகிய நீங்கள்தான் எங்களின் நிஜ எஜமானர்கள். உங்களது வழிகாட்டுதலைப் பின்பற்றியே நாளிதழில் பல மாற்றங்களைக்கொண்டு வந்திருக்கிறோம்.

வாசகர்களுக்கு அடுத்த இடத்தில் நின்று எங்களுடன் மனமொற்றிப் பயணிக்கும் நாளிதழ் விற்பனை முகவர்கள், விளம்பரதாரர்களுக்கு இந்து தமிழ் திசையின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறோம். தமிழால் இணைந்தோம்.. தரத்தால் நிமிர்ந்தோம்... தொடர்ந்து தனி முத்திரை பதிப்போம்!!!

- வி.வெங்கடேஸ்வரன், ஆசிரியர்

SCROLL FOR NEXT