சிறப்புக் கட்டுரைகள்

எரிபொருள் விலையேற்றம் | சொல்... பொருள்... தெளிவு

அடுத்தடுத்து விலையேற்றம் நிகழ்ந்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்

உதயசங்கரன் பாடகலிங்கம்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.3 அதிகரிக்கப்படுவதாக மே 15ஆம் தேதி அன்று எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் அறிவித்தன. அதற்குப் பிறகு நான்கு முறை எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.

ஈரான் போர் தொடங்கியபோதே சமூக வலைத்தளங்களில் எரிபொருள் விலையேற்றம், தட்டுப்பாடு தொடர்பான வதந்திகள் தீயாகப் பரவின. உடனடியாக அவ்வாறு செய்யப்படாவிட்டாலும், தற்போது விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. டீசல் விலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட மாற்றம் இது.

வரி வருவாய்

நாடு விடுதலை பெற்றபோது, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.0.25, ரூ.0.27 என விற்பனையானது. பைசாக்களில்தான் அதன் விற்பனை நிகழ்ந்தது. 70களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 பைசாவுக்கு விற்கப்பட்டது. 90களில் பொருளாதாரத் தாராளமயமாக்கம் நிகழ்வதற்கு முன்பாக அதன் விலை ரூ.4.20.

2004இல் உலகமயமாக்கலின் விளைவுகளை இந்தியா எதிர்கொண்டபோது, பெட்ரோல் விலை ரூ.33.71 ஆகவும், 2014இல் ரூ.72.43 ஆகவும் இருந்தது. தற்போது உலகமே பொருளாதார, புவி அரசியல்ரீதியிலான பதற்றங்களை எதிர்கொண்டுவரும் சூழலில் மீண்டும் விலையேற்றம் நிகழ்ந்திருக்கிறது; ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்யேகமாக விதிக்கப்படும் வரிகளால், பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விலைகளில் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.

தொண்ணூறுகள்வரை உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள், ரூபாய் - டாலர் பரிமாற்ற விகித மாற்றங்கள், வரிகள், மானியங்கள் மீதான அரசின் முடிவுகள் போன்றவற்றைச் சார்ந்து பெட்ரோல் / டீசல் விலை உயர்வு அமைந்தது. கச்சா எண்ணெய் அடிப்படை விலை, கலால் வரி, டீலரின் தரகுக் கட்டணம், மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) ஆகியவற்றைச் சார்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் அவற்றின் விற்பனை இருந்து வருகிறது.

இவ்வாறு வரி வசூல் செய்யப்படும் வருவாய் வளர்ச்சிப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 2021இல் கலால் வரி மூலமாகக் கிடைத்த தொகை ரூ.3,71,908 கோடி. கச்சா எண்ணெய் விலை, நிதி நெருக்கடிநிலை, எரிபொருள் தேவையைப் பொறுத்துக் கலால் வரி நிர்ணயிக்கப்படும்.

மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக, மார்ச் - மே மாதங்களில் கச்சா எண்ணெய் பேரல் விலை 70 டாலரில் இருந்து 122 டாலராக அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக, மார்ச் மாதத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி ரூ.10ஆகக் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இதனால் மட்டும் ஒவ்வொரு மாதமும் அரசுக்கு ரூ.14,000 கோடி இழப்பு ஏற்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், அதனால் மக்களும் எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களும் பாதிக்கப்படாத வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுபோக மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகளில் தனித்தனியாக பெட்ரோலுக்கான விற்பனை வரி, மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) ஆகியவை விதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பெட்ரோலுக்கு 13% விற்பனை வரியும் லிட்டருக்கு ரூ.11.52 மதிப்புக் கூட்டப்பட்ட வரியும் விதிக்கப்படுகின்றன. டீசலுக்கு இவை 11%, லிட்டருக்கு ரூ.9.62 என்கிற அளவில் உள்ளன.

இந்த வரிகள் விதிக்கப்படுவதற்கு முன்னதாக, கச்சா எண்ணெய் விலையோடு எண்ணெய் நிறுவனங்களின் செயல்முறைச் செலவு, பண வீக்கத்துக்கான காப்புத்தொகை (Buffer for Inflation) ஆகியனவும் சேர்க்கப்படுகின்றன. இவற்றைக் கணக்கில் கொண்ட பிறகே, தற்போதைய பெட்ரோல், டீசல் விலையேற்றம் பற்றிய மதிப்பீட்டுக்குச் செல்ல வேண்டும்.

உலக நாடுகள் நிலைமை

போர்ச்சூழல் உருவான சில நாள்களிலேயே பல நாடுகள் எரிபொருள் பங்கீட்டு முறையை (fuel ration) அமல்படுத்தின. பிலிப்பைன்ஸ் தேசிய நெருக்கடிநிலையை அறிவித்தது. பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை பெருமளவில் உயர்த்தப்பட்டது. உலக அளவில் மிக அதிகமாக, மயன்மாரில் பெட்ரோல் 89.7%, டீசல் 112.7% விலை உயர்த்தப்பட்டது.

மலேசியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை போன்ற நாடுகள் மட்டுமல்லாமல் கனடா, நியூசிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், ஜப்பான் எனப் பல வளர்ந்த நாடுகளிலும் இதே நிலைதான். அவற்றைவிடவும் இந்தியாவில் விலையேற்றம் குறைவாக உள்ளதாகவே வாதிடப்படுகிறது.

உலகின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 41.8% மத்தியக் கிழக்கில் இருந்து பெறப்படுவதாக, 2023இல் சர்வதேச எரிபொருள் முகமை மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.

அதை எடுத்துச் செல்ல, ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்முஸ் நீரிணையைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் பலவும் ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ளாமல் இருக்க அதுவும் ஒரு காரணம்.

இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 40% அந்த வழியாகத்தான் கொண்டுவரப்படுகிறது. அதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாலேயே, தற்போதைய விலையேற்றம் நிகழ்ந்துள்ளது.

உலக அளவில் நிகழ்ந்துள்ள கச்சா எண்ணெய் விலையேற்றத்தை ஈடுகட்ட, மத்திய அரசு சார் எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் தற்போதைய நிலையில் ரூ.28-33 வரை விலையை அதிகப்படுத்த வேண்டும் என்கிற வாதத்தை இத்துறை சார்ந்தோர் முன்வைக்கின்றனர்.

அதை உடனடியாகச் செயல்படுத்துவது எதிர்ப்பை வலுப்படுத்தும் என்பதால், மிதமான விலையேற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. விலையேற்றம் இதுவரை செய்யப்படாமலிருந்த காரணத்தால், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் அரசு சார்ந்த எண்ணெய் நிறுவனங்கள் ஏறக்குறைய 1.2 லட்சம் கோடி ரூபாய் இழப்பை எதிர்கொள்ள நேரிடும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஓராண்டில் ஈட்டிய மொத்த லாபத்தைத் துடைத்தெறியும் வகையில் அமையும் எனக் கூறப்படுகிறது.

தீர்வு என்ன?

மேற்காசியாவில் முழுமையான அமைதி திரும்பாத நிலையில், வரும் நாள்களில் விலையேற்றம் தொடருமா என்பதற்குப் பதில் சொல்ல முடியாத சூழலே நிலவுகிறது. அதேநேரத்தில், அடுத்தடுத்துச் சிறிதுசிறிதாக விலையேற்றம் செயல்படுத்தப்பட்டால் சாதாரண மக்களின் வாழ்க்கை மிகச் சிரமமானதாக மாறும் என்கிற அச்சமும் எழுந்திருக்கிறது.

இருசக்கர வாகனங்களில் பொருள் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் (GIG), செயலி அடிப்படையிலான வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கடந்த மே 16ஆம் தேதியன்று எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

நீண்ட நேரம் உழைத்தாலும் வருவாய் ஈட்டுவது கடினம் என்னும் நிலையைத் தற்போதைய விலை உயர்வு மேலும் மோசமாக்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகள் வரி வருவாயைக் குறைத்து எண்ணெய் நிறுவனங்களின் இழப்புகளை ஈடுகட்டுகிற செயல்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம் விலையேற்றத்தை நடைமுறைப்படுத்தாமல் இப்பிரச்சினையைச் சரிசெய்வதற்கான தீர்வுகளை நோக்கியும் பயணப்பட வேண்டும். அது காலத்தின் கட்டாயமும்கூட.

SCROLL FOR NEXT