தங்கள் நாட்டுத் தொழில் துறையைப் பாதுகாக்க அமெரிக்கா முயற்சிப்பதாக விமர்சிக்கப்படுகிறது வரிவிதிப்பின் மூலம் பிற நாடுகளை மிரட்டிவரும் அமெரிக்கா, தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 12.5% கட்டாய உழைப்பு வரி (Forced Labour Tariff) விதிக்கப்படும் என அறிவித்திருக்கிறது.
ஏறத்தாழ 54 நாடுகள் இதனால் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியிருக்கும் நிலையில், கட்டாய உழைப்பு வரி குறித்துத் தெரிந்துகொள்வது அவசியம்.
தொழிலாளரின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம், பாதுகாப்பு, கண்ணியமான பணிச்சூழல் முதலானவை மறுக்கப்பட்டு, சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது கட்டாய உழைப்பாகக் கருதப்படுகிறது.
கொத்தடிமை முறை இதன் கொடிய வடிவமாகும். சர்வதேச விதிகளின்படி இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், 1975இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
கொடிய பணி
தான் வாங்கிய கடனைத் திரும்பச்செலுத்த, முதலாளி விதிக்கும் அத்தனை வேலைகளையும் நேரம் காலம் பாராமல் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட ஏழைகள் பலர் கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டத்தின் வழியாக விடுவிக்கப்பட்டனர். இதுதவிர, மனிதர்களை விலைக்கு வாங்குவது, விற்பது, கட்டாய வேலை வாங்குவது போன்றவையும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் இன்றளவும் செங்கல் சூளைகள், ஜவுளித் தொழில்களில் கொத்தடிமை முறை மறைமுகமாக ஆங்காங்கே நீடிக்கிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
இந்நிலையில், கட்டாய உழைப்பைப் பயன்படுத்திப் பலவிதமான பொருள்கள் தயாரிக்கப்படுவதை இந்தியா, சீனா முதலான நாடுகள் தடுக்கத் தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இதனால் இந்தியா, பிரிட்டன், சீனா, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, வங்கதேசம், இலங்கை, வியட்நாம் முதலான 54 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 12.5% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பாகிஸ்தான், கனடா, மெக்சிகோ, இந்தோனேசியா, ஈக்வடார் ஆகிய நாடுகளில் ஓரளவுக்கு உழைப்பாளர்களின் உரிமை பாதுகாக்கப்படுவதால் அவை ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சின்ஜியாங் சித்திரவதை!
சீனா கட்டாய உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அமைப்பு பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறது. குறிப்பாக, சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள சின்ஜியாங், உலகின் 20% பருத்தி, 10% அலுமினியம், பெருமளவிலான பாலிசிலிகான் ஆகியவற்றின் உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளது.
இவற்றைத் தயாரிக்க இப்பகுதியில் உள்ள சிறுபான்மையினர் சித்திரவதை செய்யப்படுவதாகவும் ‘மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்’ அவர்களுக்கு இழைக்கப்படுவதாகவும் மனித உரிமை அமைப்புகள் நெடுங்காலமாகப் புகார் எழுப்பி வருகின்றன.
கட்டாய உழைப்புச் சுரண்டலில் இந்தியா நேரடியாக ஈடுபடாவிட்டாலும் சீனாவுக்குத் துணைபோவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருள்களை இந்தியா உள்படப் பல நாடுகள் இறக்குமதி செய்து ஆடைகள், கருவிகளாக மாற்றி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதும் கவனிக்கத்தக்கது.
இந்தப் பின்னணியில், கட்டாய உழைப்பால் உருவான பொருள்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதாக அமெரிக்க அரசு கூறுகிறது. அதுமட்டுமன்றி, கட்டாய உழைப்பின் மூலம் மலிவு விலையில் பொருள்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்வது அமெரிக்கத் தொழிலாளர்களைப் பாதிக்கிறது; இது நியாயமற்ற வர்த்தகம் என டிரம்ப் அரசு கூறுகிறது.
இதையடுத்து, சர்வதேச வர்த்தகத்தில் தனக்கு இருக்கும் சக்திவாய்ந்த ஆயுதமான சட்டப்பிரிவு 301ஐ அமெரிக்கா எடுத்தாளவிருக்கிறது. கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் மூலப்பொருள்களையோ, உற்பத்திப் பொருள்களையோ ஒரு நாடு பயன்படுத்தினால், அந்த நாட்டின் மீது இந்தச் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்திக் கூடுதல் வரி விதிக்க அமெரிக்காவுக்கு அதிகாரம் உள்ளது.
இந்தியாவுக்கான சவால்
ஒருவேளை கட்டாய உழைப்பு வரி இந்தியா மீது விதிக்கப்பட்டால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடை, ஜவுளி, கார் உதிரிபாகங்கள், விவசாயப் பொருள்களின் விலை அமெரிக்கச் சந்தையில் அதிகரிக்கும்.
இதனால் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியப் பொருள்களை வாங்குவதைக் குறைத்துக்கொள்ளும். மேலும் இந்தச் சிக்கலின் ஊற்றுக்கண்ணாக சீனா இருப்பதால், இந்திய நிறுவனங்கள் தங்களுக்கான மூலப்பொருள்களை சீனாவிடம் இருந்து வாங்குவதை நிறுத்த வேண்டிவரும்.
அது மட்டுமன்றி சீன மூலப்பொருள்களைப் பயன்படுத்துவதில்லை என்பதையும் இந்திய நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உருவாகும். ஆதலால், மாற்று விநியோகச் சங்கிலியை இந்தியா கண்டுபிடித்தாக வேண்டும்.
இந்தியாவில் ஜவுளி, ஆடைத் தயாரிப்புத் துறை கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிவருகிறது.
அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்றுமதி குறைந்தால், அது நேரடியாக வேலைவாய்ப்பு இழப்பை ஏற்படுத்தும்; நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.
அமெரிக்காவின் உத்தி
இவ்வாறு போட்டி நாடுகளின் ஏற்றுமதியை முடக்கவும், பிற நாடுகளை இருதரப்பு வரி குறித்த பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கவும் டிரம்ப் அரசு கையில் எடுத்திருக்கும் கொள்கை உத்தி இது என சர்வதேசப் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசாங்க அமைப்புகளும் வணிக நிறுவனங்களும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்திடம் சமர்ப்பித்த விளக்கத்தில், இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், இந்த விசாரணை நியாயமற்றது என்றும் வாதிட்டுள்ளன.
சர்வதேச அளவில் விதிகள் இருக்கும் ஒரு விவகாரத்தில் அமெரிக்கா இவ்வாறு தன்னிச்சையாக விசாரணை நடத்துவது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளன.
தொழிலாளர் நலன் என்கிற போர்வையில் தங்கள் நாட்டுத் தொழில் துறையைப் பாதுகாக்க அமெரிக்கா நடைமுறைப்படுத்தும் மறைமுக வர்த்தகத் தடை இது என்றே பார்க்கப்படுகிறது.
தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக மக்கள், சம்பந்தப்பட்ட அமைப்புகளின் கருத்துக்களைப் பெற ஜூலை 6 வரை அமெரிக்கா காலக்கெடு விதித்திருக்கிறது. அதன்பின், ஜூலை 7இல் விசாரணை நடத்திய பிறகே அமெரிக்கா தனது இறுதி முடிவை அறிவிக்கும்.