‘ஒருகாலத்தில் பண்ணைகளில் வாழ்ந்தோம்; பிறகு நகரங்களில் வாழ்ந்தோம்; இப்போது இணையத்தில் வாழ விழைந்துகொண்டிருக்கிறோம்’ என்கிற வாக்கியம் அமெரிக்காவில் மிகவும் பிரபலம். இன்றைக்குச் சிறார் முதல் பெரியோர்வரை அனைவரும் டிஜிட்டல் (எண்ணிலக்க) கருவிகளைச் சார்ந்து வாழத் தலைப்பட்டுவிட்டனர்.
இந்தப் பயன்பாடு அதீதம் என்னும் நிலையைக் கடந்து, அடிமையாகும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழல் இன்னும் விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்கிற எச்சரிக்கை, அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் (Economic Survey) இடம்பெற்றிருக்கிறது.
டிஜிட்டல் அடிமையாதல்
வேகமாக வளர்ந்துவரும் டிஜிட்டல் பொருளாதாரம், வலுவான டிஜிட்டல் கட்டமைப்பு, மலிவான கட்டணத்தில் இணைய வசதி போன்றவற்றால் ஒரு டிஜிட்டல் சமூகமாக முன்னேற்றம் கண்டுவருகிறது இந்தியா.
2023ஆம் நிதி ஆண்டின் தேசிய வருவாயில் 11.74% பங்களிப்பு டிஜிட்டல் பொருளாதாரத்தின் வழியே கிடைத்ததாகச் சொல்கிறது மத்திய அரசு. பெருமளவு பயன்பாடு, வருவாய் ஈட்டலை முன்வைத்து 2025இல் இது 13.42% ஆக உயரக்கூடும் என இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவில் 2014ஆம் ஆண்டு 25.15 கோடி என இருந்த இணைய இணைப்புகளின் எண்ணிக்கை 2024இல் 96.96 கோடியாக உயர்ந்தது. 2025இல் குறைந்தபட்சம் ஒரு திறன்பேசி வைத்திருக்கிற வீடுகளின் எண்ணிக்கை 85.5% என்றாகியிருக்கிறது.
2024இல் மட்டும் ஓடிடி, உணவு விநியோகச் செயலிப் பயனர்களின் எண்ணிக்கை 40 கோடியாகவும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 35 கோடி எனவும் பதிவாகியுள்ளது.
டிஜிட்டல் சூழலால் எந்த அளவுக்கு வசதி வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றனவோ, அதே போன்று அவற்றின் எதிர்மறைத் தாக்கமும் அதிகமாக இருப்பதைச் சில ஆய்வுகள் உணர்த்துகின்றன.
கட்டாயமான, அதிகப்படியான டிஜிட்டல் கருவிகள் பயன்பாட்டால் பொருளாதார, சமூக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உடல் குறைபாடுகள், மனநலக் குறைபாடுகள், நிதி இழப்புகள், மாணவர்களின் கல்வி, பணியாளர்களின் செயல்பாடுகளில் மந்தநிலை உள்ளிட்டவை இந்த வரிசையில் சேரும்.
கட்டுப்பாடுகள்
திறன்பேசிகள், கேமிங் தளங்கள், சமூக வலைத்தளங்கள் என்று டிஜிட்டல் கருவிகளில் ஒரு நாளின் பெரும்பொழுதுகளைச் செலவழிப்பதை டிஜிட்டல் போதைப்பழக்கம் என வரையறுக்கிறது மருத்துவ உலகம்.
உறவுகள், நட்புப் பிணைப்பு பலவீனமாவது, சமூகப் பங்கேற்பு குறைவது, வழக்கமான திறன்களை இழப்பது போன்றவற்றில் தொடங்கிப் பலவற்றுக்கு இது காரணமாகிறது.
டிஜிட்டல் கருவிகளுக்கு அடிமையாதல் என்பது உலகளவில் முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது; ஒழுங்குமுறை, சிகிச்சை, கல்விப்புலம் சார்ந்த நடவடிக்கைகளை அரசும் சுகாதார அமைப்புகளும் சமூகமும் மேற்கொள்வதற்கான தூண்டுதலை ஏற்படுத்தி உள்ளது.
‘கேமிங் பிரச்சினை’களின் கீழ் ஐசிடி-11இல் ஒரு மனநலக் குறைபாடாக ‘கேமிங் அடிமையாத’லை வகைப்படுத்தியிருக்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.
மற்ற செயல்பாடுகளைவிட கேமிங்கில் அதிக ஆர்வம் காட்டுதல், அந்தச் செயல்பாட்டில் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க இயலாமை, எதிர்மறை விளைவுகளுக்கு மத்தியிலும் அதைத் தொடர்தல் போன்றவற்றால் இது வரையறுக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த அண்மையில் தடை விதிக்கப்பட்டது. தென் கொரியாவில் நள்ளிரவில் கேமிங் தளங்களைப் பயன்படுத்தச் சிறாருக்குத் தடை உள்ளது.
சீனாவில் பயனர்கள் உண்மையான பெயரைப் பயன்படுத்தி கேமிங் விளையாடும் வகையிலான கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
பிரேசில், ஃபிரான்ஸ், பின்லாந்து, ஸ்பெயின், ஜப்பான் போன்ற நாடுகளிலும், அமெரிக்காவின் சில மாகாணங்களிலும் மாணவர்கள் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, பதினாறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பள்ளிகள், பள்ளிப் பேருந்துகளில் பாதுகாப்பான இணையப் பயன்பாட்டுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறையின் கீழ் 2022 முதல் ‘டெலி-மானஸ்’ (Tele MANAS) என்னும் இலவச மனநல உதவிமையச் சேவை செயல்படுத்தப்படுகிறது.
2024இல் அறிமுகப்படுத்தப்பட்ட இதற்கான செயலியில் டிஜிட்டல் அடிமையாதலைத் தடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன.
அதிகப்படியான தொழில்நுட்பப் பயன்பாட்டால் பாதிப்புக்கு உள்ளான இளையோரை மீட்டெடுக்கும் வகையில் பெங்களூருவின் நிம்ஹான்ஸ்-இல் உள்ள ‘ஷட்’ (SHUT - Service for Healthy Use of Technology) செயல்பட்டுவருகிறது.
டிஜிட்டல் போதை, நிதி இழப்புகள் போன்றவற்றில் இளைய தலைமுறையினர் சிக்குவதைத் தடுக்கும் வகையில் இணைய விளையாட்டு (ஒழுங்குமுறை) சட்டம் 2025 மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.
சூதாட்ட முறையில் பணத்தைப் பயன்படுத்தும் இணைய விளையாட்டுகளுக்குத் தடை விதிப்பது, விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவது, அனுமதிக்கப்பட்ட திறன் அடிப்படையிலான விளையாட்டுகளுக்கான ஓர் உரிமக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றை இது மேற்கொள்கிறது.
கல்லூரிகள், பணியிடங்களில் டிஜிட்டல் அடிமையாதலைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, தொழில்நுட்பம் இல்லாத பகுதிகளை உருவாக்குவது, ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கங்களைப் பின்பற்றுகிற வகையில் வழிகாட்டுதல் அமைப்பைச் செயல்படுத்துவது, ‘டிஜிட்டல் டயட்’ என்கிற பெயரில் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தாத சூழலை எதிர்கொள்வது போன்றவற்றைப் பின்பற்ற முயல்வது பலன் தரும்.
டிஜிட்டல் போதைக்கு அடிமையானவர்களை மீட்கும் வகையில் கர்நாடகத்தில் ‘டிஜிட்டல் போதைத் தடுப்பு மையம்’ செயல்படுத்தப்படுகிறது.
டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துகிற வழக்கம் பள்ளிப் பருவத்திலேயே பெருகிவரும் நிலையில், அவற்றின் பயன்பாட்டுக்கும் மனநலனுக்குமான பிணைப்பு குறித்து மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமானது.
அதேபோலக் குடும்பங்களும் திறன்பேசி அல்லது கணினித் திரையைப் பார்ப்பதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டியது அவசியம்.
அக்கருவிகள் இல்லாத சூழலை எதிர்கொள்ள, குழந்தைகளைப் பெற்றோர் பழக்குவதோடு வேறு விளையாட்டுகள், செயல்பாடுகளில் அவர்களைத் திருப்பலாம்.
சிறப்பம்சங்கள் இல்லாத கைபேசி, கற்றலுக்கு மட்டுமே பயன்படுத்தத்தக்க டேப்லெட் போன்ற கருவிகளைக் குழந்தைகளிடம் கொடுக்கலாம்.
அக்கருவிகளின் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துகிற வழிமுறைகளைச் செயல்படுத்தலாம். இவற்றோடு ‘டெலி-மானஸ்’ செயலி மூலமாகத் தரப்படுகிற ஆலோசனைகளைப் பள்ளி, கல்லூரிகள் அளவில் ஒருங்கிணைப்பதும் காலத்தின் தேவை.