சிறப்புக் கட்டுரைகள்

நல்லகண்ணு: தமிழ் மண்ணில் விளைந்தவர்

Guest Author

தோழர் நல்லகண்ணு தமது கொள்கை நேர்மை காரணமாகவும், ஆளுமையின் சிறப்புக் காரணமாகவும் தமிழகத்தில் எல்லோராலும் போற்றப்படுகின்ற ஒருவராகக் காணப்படுகிறார்.

பொது​வுடைமை இயக்​கத்தின் புகழ்​பூத்த தலைவர்கள் தொழிற் சங்கங்​களின், தொழிலா​ளி​களின் பிரதி​நி​தி​களாகப் போற்​றப்​படுவதே மரபு. அத்தகைய ஒரு பாரம்​பரியம் தமிழ்நாட்டிலும் உண்டு.

ஆனால், தோழர் நல்ல​கண்ணு விவசாயத் தொழிலா​ளியின் ஊடாக அத்துறையில் அவர் ஆற்றிய பெரும் பணியின் காரணமாக முன்னுக்கு வந்துள்ளவர். அவரது ஆளுமை சுட்டும் இயல்பு, அவரைத் தமிழ்நாட்டின் அடிநிலை மக்கள் பிரதி​நி​தியாக நம் முன் நிறுத்து​கிறது.

          

விவசாயத் துறையின் மூலம் வருவ​தி​னால், அவர் இந்தப் பண்பாட்டின் பிரதி​நி​தி​யாகவும் விளங்கு​கிறார். சோவியத் யூனியன், சீனா ஆகிய நாடு​களிலும் கிழக்கு ஐரோப்​பாவில் ஏற்பட்ட அனுபவங்​களி​னாலும் மார்க்​சியப் பரவலில் இப்போது ஒரு பேருண்மை வலியுறுத்​தப்​படு​கிறது.

அதாவது பொது​வுடைமை இயக்கம், தான் தொழிற்​படு​கின்ற சமூகத்தின் பண்பாட்​டினது முற்​போக்கான அம்சங்​களைத் தனதாக்​கிக்​கொண்டு வளர்தல் வேண்டும் என்ப​தாகும். ஏற்கெனவே, கேரளத்​திலும் மேற்கு வங்கத்​திலும் இது வெற்றிகர​மாகத் தொழிற்​பட்​டுள்ளது.

தமிழ்​நாட்டில் தோழர் நல்ல​கண்​ணு​வினுடைய ஆளுமைக் கணிப்புடன் பொது​வுடைமைக்கு வேண்டிய அடிநிலை விவசாயப் பண்பாட்டு ஊக்கம் முக்​கி​யத்துவம் பெறுகிறது. இது ஒரு முக்​கியமான விஷயம்.

ஏனெனில் தமிழ்​நாட்டில் இடது​சாரிக் கொள்​கைகள் தொடங்கிய காலத்​தில், அது பகுத்​தறிவு வாதத்தோடு தொடர்​பற்று நின்று, அதன் காரண​மாகத் தமிழ்​நாட்டின் அடிநிலைப் பண்பாட்டு அம்சங்கள் பலவற்றைத் தன் வளர்ச்சி நிலையில் வளத்​துக்குப் பயன்​படுத்​தவில்லை.

உண்மை​யில், அந்த நிலையில் நாட்டின் பண்பாட்டு உயிர்​களோடு அதிகத் தொடர்பும் இருக்க​வில்லை. ஆனால், தோழர் ஜீவா அவர்கள் அந்தப் போக்​குக்குப் புறனடையாக (விதி​விலக்காக) இருந்​தார்.

தமிழ்​நாட்டில் பொது​வுடைமை வர வேண்டுமெனில் அது கம்பனையும் பாரதி​யையும் உள்வாங்க வேண்டும் என்று வற்புறுத்​தி​னார். இன்று நல்ல​கண்ணுவோ அந்தப் பாரம்​பரி​யத்தில் வந்து, தமிழ்​நாட்டில் விவசா​யிகள் பண்பாட்​டினைப் பொது​வுடைமைக் கருத்து நிலைக்கான தளமாகக் காண்​கிறார்.

நல்ல​கண்​ணுவின் பொது​வுடைமை தமிழ் மண்ணுக்குள் இருந்து​வருவது. அந்த வலுதான் இன்று அவரைத் தமிழ்​நாட்டின் முக்​கியத் தலைவர்​களில் ஒருவராக மாத்​திரமல்​லாது, அனைத்​திந்திய முக்​கி​யத்துவம் உடைய ஒருவ​ராகவும் ஆக்கி​யுள்ளது.

தனிப்பட்ட நிலையில் என்னைப் பொறுத்​தவரையில் தமிழ்​நாட்டின் நவீன கால வரலாற்றின் சமூகப் பிரச்சினைக்கான விளக்​கங்​களைத் தோழர் நல்ல​கண்ணு மூலம் அறிந்தது போன்று தெளிவாக வேறு ஒருவரிடத்​திலிருந்தும் நான் அறிந்து​கொள்ள​வில்லை.

வள்ளலாருடைய இயக்​கத்தின் சமூகப் பின்​புலத்தை அவர் மார்க்​சியக் கண்ணோட்​டத்​திலிருந்து கூறுகின்​றபோது கேட்கச் சிலிர்க்​கும். தோழர் நல்ல​கண்​ணு​விடம் நான் கண்ட மிகப் பெரிய பண்பு, அவர் எப்போதும் ஒரு மாணவனாக இருக்​கின்றார் என்ப​தே​யாகும். அறிவுக்கான தேடல் அவரை விருப்​பத்​துக்​குரிய தலைவ​ராக்கி​யுள்ளது.

தமிழ்ப் பாரம்​பரி​யத்தில் இறைவனை வாழ்த்து​கின்ற ஒரு மரபு உண்டு. ‘இறைவன் வாழ்த்​தப்பட வேண்​டுமா?’ என்ற ஒரு வினாவும் உண்டு. அதற்குப் பதிலாகச் சொல்​லப்​படுவது மிக முக்​கிய​மானது. இறைவனை வாழ்த்துவதன் மூலம் அவர்களது நம்பிக்கை​யின்படி மக்கள் எல்லோரையும் வாழ்த்துவது ஆகும்.

தோழர் நல்ல​கண்ணுவை வாழ்த்​தும்​போது, தமிழ் ப​யிலும் எனக்கும் அந்த உணர்​வுதான் மேலோங்கி நிற்​கிறது. அவரை ​வாழ்த்துவதன் மூலமாக நம்மை நாமே ​வாழ்த்து​கிறோம். நமது எ​திர்கால லட்​சியக் க​னவுகளை ​வாழ்​த்​துகிறோம். நமது பண்​பாட்டை ​வாழ்​த்​துகிறோம்.

- பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி

| இங்கே இடம்பெற்றுள்ள கட்டுரை, ஆர்.நல்லகண்ணு குறித்து விரிவான நூலான ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகத்தின் ‘அறவாழ்வின் அடையாளம்’ நூலில் வெளியானது. |

SCROLL FOR NEXT