சிறப்புக் கட்டுரைகள்

காலநிலை மாற்றம்: என்னவானது இலக்கு? | சொல்... பொருள்... தெளிவு

2100 ஆம் ஆண்டை எட்டும்போது, பனிப்பாறைகளில் கால் பங்கினை உலகம் இழந்து நிற்கும்

ம.சுசித்ரா

இமயமலையில் அண்மையில் ஏற்பட்ட பெரும் பனியாற்றுச் சரிவு பெருவெள்ளமாக உருமாறி நேபாளத்தை உருக்குலைத்து, உலகை உலுக்கிவிட்டது. இது, புவி 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பமடைவதை இனி எதன் பொருட்டும் தடுத்து நிறுத்த முடியாது என்கிற கசப்பான உண்மைக்கான உரைகல்.

சொல்லப்போனால், சில நாள்களுக்கு முன்புதான், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), ‘இலக்கைத் தாண்டிச் செல்லுதல், உச்சி, வீழ்ச்சி’ என்னும் தலைப்பிட்ட விரிவான அறிக்கை கைமீறிப்போன புவி வெப்பமாதல் செய்தியை முதன்முறையாகப் பகிரங்கமாக அறிவித்தது.

புதிய இலக்கு

தொழில் புரட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்த சராசரி வெப்பநிலையைவிட அதிகமாக 1.5 டிகிரி செல்சியஸுக்குள் தற்போதைய சராசரி வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் இலக்கு 10 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது.

காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தி, புவி வெப்பமாதலைத் தடுக்கும் நோக்கில் 1.5 டிகிரி செல்சியஸ் உச்ச வரம்பைப் புவி கடக்காமல் தடுக்கும் 2015 பாரிஸ் ஒப்பந்தம் ஏற்கப்பட்டது.

கென்யா தலைநகர் நைரோபியில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அடுத்த சில ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டிச் செல்வதை இனி தவிர்க்க முடியாது என அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஒவ்வொரு நாடும் தனது தேசியக் காலநிலைத் திட்டம், நிகர பூஜ்ஜிய இலக்கை நிறைவேற்றினாலும்கூட உலக அளவில் 1.8 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் அதிகரிக்கவே செய்யும்.

இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த காலநிலைக் கொள்கைகளின்படி 2100ஆம் ஆண்டுக்குள் வெப்பநிலை 2.6 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கக்கூடும்.

இந்த உச்ச வரம்பை முடிந்தவரை குறைவாகத் தக்கவைத்து, நூற்றாண்டின் இறுதிக்குள் வெப்பநிலையைக் குறிப்பிட்ட வரம்புக்குக் கீழே கொண்டுவருவதே புதிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

முன்னதாக, கடந்த 2025இலேயே இந்த உண்மை ஓரளவு ஏற்கப்பட்டு, அதற்கு ஆயத்தமாவதற்கான அதிகாரபூர்வ அடித்தளம் அமைக்கப்பட்டது.

பிரேசிலின் பெலம் நகரில் கடந்த நவம்பரில் நடைபெற்ற 30ஆவது ஐ.நா. காலநிலை மாற்றம் பற்றிய மாநாட்டில் (COP30), ‘உலகளாவிய மூசிரோ’ (Global Mutirão Platform) எனும் கூட்டியக்கம் அறிமுகம் செய்யப்பட்டது.

‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ - கருப்பொருளின் எதிரொலிதான் பிரேசில் நாட்டு துப்பிகுவாரெனி பழங்குடியினரின் ‘மூசிரோ’ வாழ்க்கை முறை. இந்தக் கருத்தரங்கில், கரியமில வாயு உமிழ்வை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் தொழில் வளர்ச்சிக்கு முந்தைய சூழலை எட்ட முடியாத கையறு நிலைக்குப் பூமி சென்றுவிட்டது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

மிதமிஞ்சிய போக்கைக் கண்காணித்து கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் ஆழமான, விரைவான, தொடர்ச்சியான வழிமுறைகளைக் கையாள்வது என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

உமிழ்வைக் குறைப்பது மட்டும் போதாது என்பதால், பெருமளவிலான காடு வளர்ப்புத் திட்டங்கள் இன்றியமையாதவை என்பதையும் 30ஆவது ஐ.நா. காலநிலை மாற்றம் பற்றிய மாநாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அனா டோனி தெரிவித்தார்.

‘சுட்டெரிக்கும் இந்தக் கோடை வெப்பமும், பற்றியெரியும் காட்டுத்தீயும், கொடூரமான வெள்ளங்களும் எதிர்காலத்தில் என்ன நடக்கக் காத்திருக்கிறது என்பதற்கான எச்சரிக்கை.

1.5 டிகிரி செல்சியஸுக்கு மேலான மிகைப் போக்கை நாம் முடிந்தவரை குறுகியதாக மாற்ற வேண்டும்’ என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்தார்.

பனிப்பாறை இழப்பு

2100ஆம் ஆண்டை எட்டும்போது, உலகளாவிய பனிப்பாறைகளில் கால் பங்கை உலகம் இழந்து நிற்கும் என்கிறது ‘இலக்கைத் தாண்டிச் செல்லுதல், உச்சி, வீழ்ச்சி’ அறிக்கை. திறன்வாய்ந்த தகவமைப்பு நடவடிக்கைகள் இல்லை எனில், அடுத்த கால் நூற்றாண்டில் உலக உணவு உற்பத்தியில் 14% வீழ்ச்சி அடையும்.

கூடவே, மேற்கு அண்டார்டிக், கிரீன்லாந்து பகுதிகளில் உள்ள பனிப்படலம் மீள முடியாத நிலையை எட்டும். பூமியின் காலநிலையைச் சமநிலைப்படுத்துவதில் முக்கியக் காரணியான, அட்லாண்டிக் பெருங்கடலின் நீரோட்ட அமைப்பும் அமேசான் நதிப் படுகையும் சீரழிவைச் சந்திக்கும் ஆபத்து உள்ளதாக இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

மேலும், ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட ஒரு டன் கரியமில வாயு ஏற்படுத்தும் தாக்கத்தைத் தடுப்பது கிட்டத்தட்ட முடியாத காரியம். தொடர் உயர் உமிழ்வால் ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு 0.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கிறது. அதே 0.1 டிகிரி செல்சியஸைக் குறைப்பது என்பது 22,000 கோடி டன் கரியமில வாயுவை அகற்றும் முயற்சியாகும்.

உலக நாடுகள் உமிழ்வைக் குறைக்குமா இல்லையா என்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மைதான் இந்த அறிக்கையில் பிரதிபலிக்கிறது. வரலாறு காணாத கரியமில வாயு உமிழ்வாளரான அமெரிக்கா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியது.

அதுமட்டுமல்லாமல், ஐ.நா. காலநிலை மாற்றத்துக்கான கட்டமைப்பு மாநாடு, காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கு இடையேயான குழு, பசுமைக் காலநிலை நிதி ஆகியவற்றில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தது.

மீத்தேன் இலக்கு

இந்த அறிக்கையில், வரலாற்றில் முதல் முறையாக மீத்தேன் பயன்பாட்டை ஐ.நா. கவனப்படுத்தி இருக்கிறது. தற்போது, 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பமாதலுக்கு மீத்தேன் பங்களிக்கிறது.

புதைபடிவ எரிசக்திசார் செயல்பாடுகள், கால்நடைகள், நெல் வயல்கள், நிலப்பரப்புகள், கழிவு நீர் வெளியேற்றம் முதலான மனித நடவடிக்கைகளால் ஆண்டுதோறும் தோராயமாக, 40 கோடி டன் வரையிலான மீத்தேன் வெளியிடப்படுகிறது.

அதைக் குறைத்தால் நிச்சயம் வெப்பமாதலின் வேகத்தை மட்டுப்படுத்தும். 2030க்குள் மனிதனால் உருவாக்கப்பட்ட மீத்தேனை 2020ஆம் ஆண்டு அளவைவிட 30% குறைக்க உலகளாவிய மீத்தேன் உறுதிமொழியை 155க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்றுள்ளன. ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான் இந்த உறுதிமொழியை இதுவரை ஏற்கவில்லை.

SCROLL FOR NEXT