சிறப்புக் கட்டுரைகள்

சாதிவாரிக் கணக்கெடுப்பு | சொல்... பொருள்... தெளிவு

இடஒதுக்கீட்டின் பலன்கள் அனைவரையும் சென்றடைவதற்கான ஏற்பாடு இது

ஆர்.சி.ஜெயந்தன்

சுதந்திர இந்தியாவின் 8ஆவது தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (Census 2026 - 2027) இரு கட்டங்களாக வெற்றிகரமாக நடைபெற்றிருக்கிறது.

முதல் கட்டம் 2026 ஏப்ரலில் தொடங்கி, செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்தது. இரண்டாம் கட்டமாக, வரும் 2027 பிப்ரவரியில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.

தேவையும் வரலாறும்

கல்வி - வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கும் பலன்கள், அனைத்துச் சமூகப் பிரிவுகளையும் சரியான முறையில் சென்றடைய வேண்டும். அதற்கு ஒவ்வொரு பிரிவிலும் உள்ள மக்களின் எண்ணிக்கை துல்லியமாகக் கணக்கெடுக்கப்பட வேண்டும் - இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையில்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை எனப் பல்வேறு தரப்பினர் வாதிடுகின்றனர்.

காலனிய இந்தியாவில் 1871இல் முதன்முதலாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1921இல் மதரீதியிலான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர், 1931இல் முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டது.

இந்தத் தரவுகளின் அடிப்படையில்தான் 1932இல் நடந்த லண்டன் வட்டமேசை மாநாட்டில் பாபாசாகேப் அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசனும் பட்டியல் சாதியினருக்குக் கல்வியிலும் அரசு வேலைகளிலும் ஆட்சிமன்ற மக்கள் பிரதிநிதித்துவத்திலும் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து வெற்றி கண்டனர்.

1941இல் இரண்டாம் உலகப் போரின் தீவிரத்தால் கணக்கெடுப்பு முழுமையாக நடக்கவில்லை. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அமைந்த மத்திய அரசுகள் சாதிவாரி விவரங்களைத் தொகுக்கத் தயங்கிக் கைவிட்டன.

1931க்குப் பிறகு 80 ஆண்டுகள் கழித்து 2011இல் சமூக - பொருளாதாரச் சாதிக் கணக்கெடுப்பு (SECC) நடத்தப்பட்டபோதிலும் அதன் தரவுகள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

இதன் பின்னணியில், சரியான முறையைத் தேர்ந்தெடுத்துத் தகவல் சேகரிக்காததன் தோல்வி, வாக்கு அரசியல் ஆகிய காரணங்கள் இருந்ததை அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டினர்; நாட்டின் மக்கள்தொகை பன்மடங்கு பெருகியிருக்கும் நிலையில், 1932இல் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு அளவு, இப்போதைய மக்கள்தொகைக்கு எவ்வாறு பொருந்தும் என்கிற கேள்வியை எழுப்பினர்.

அதன் அடிப்படையில்தான் மத்திய அரசு 16ஆவது தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த ஒப்புக்கொண்டது.

இரண்டு கட்டங்கள்

முதல் கட்டம் 2026 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெற்றது. இதில் கணக்கெடுப்பாளர்கள் நேரடியாகச் சென்று வீடுகளின் எண்ணிக்கையைப் பட்டியலிடுதல் - வீட்டு வசதியைக் கணக்கிடுதல் (House Listing & Housing Census) ஆகிய பணிகளை மேற்கொண்டனர்.

பொதுமக்கள் கணினி அல்லது கைப்பேசி மூலம் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, வீட்டு வசதி ஆகியன குறித்த தகவல்களை www.se.census.gov.in என்கிற மத்திய அரசின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் உள்ளிட்டுப் பதிவுசெய்யும் வகையில் சுய தகவல் சேர்க்கும் (Self-Enumeration) வசதியை 2026 ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை அனுமதித்தது.

சாதிவாரிக் கணக்கெடுப்பாக நடத்தப்பட இருக்கும் இரண்டாம் கட்டம், 2027 பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 28 வரை நடக்கிறது. லடாக், ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம், உத்தராகண்ட் உள்படப் பனிப்பொழிவை எதிர்கொள்ளும் பிராந்தியங்களில் இந்த இரண்டாம் கட்டக் கணக்கெடுப்புப் பணிகள் நான்கு மாதங்கள் முன்னதாகவே நடைபெற்றன.

பிஹார் முன்மாதிரி

மாநில அரசுகளுக்குச் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உண்டு என்பதை பிஹார் உயர் நீதிமன்றமும், நாட்டின் உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்து தீர்ப்பளித்தன. அதன்பின், 2023இல் அன்றைய முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு 45 நாள்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துப் புள்ளிவிவரங்களை அறிவித்தது.

அந்தக் கணக்கெடுப்பில் மொத்தம் 215 சாதிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 13 கோடியே 7 லட்சம். அதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (EBC) 36%, இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) 27.13%, பட்டியல் சாதியினர் (SC) 19.65%, பழங்குடியினர் (ST) 1.68%, பொதுப் பிரிவினர் (Unreserved) 15.52% எனத் தெரியவந்தது. மேலும், வகுப்புவாரியாக ஒவ்வொரு பிரிவிலும், எந்தெந்தச் சாதியினர் எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்கிற விவரமும் இடம்பெற்றிருந்தது.

தமிழ்நாட்டின் 69%

தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் 1921இல் அமல்படுத்தப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அரசாணை மூலம் இடஒதுக்கீட்டுக்கு வித்திடப்பட்டது. முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் (1951) நடந்த பின் தொடுக்கப்பட்ட செண்பகம் துரைராஜன் வழக்கின் தீர்ப்பால் இடஒதுக்கீடு பாதிக்கப்பட்டபோது, பெரியார் நடத்திய போராட்டத்தால் இந்திய அரசமைப்பில் சட்டக்கூறு 15(4) சேர்க்கப்பட்டது.

பின்னர், உச்ச நீதிமன்றம், ‘சமூக - கல்வி ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்கு அரசு வழங்கும் அனைத்து இடஒதுக்கீடுகளையும் கூட்டினால், அது 50% தாண்டக் கூடாது’ என்கிற வரம்பை விதித்தது.

ஆனால் அந்த வரம்பைத் தாண்டி தமிழக மக்களின் சமூகப் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, 69% இடஒதுக்கீட்டுச் சிறப்புச் சட்டம் (1994) தமிழ்நாட்டில் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டதுடன், அதை அரசமைப்பின் 9ஆவது அட்டவணையில் சேர்த்தது தமிழ்நாடு.

2010இல் தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘69% இடஒதுக்கீடு செல்லும்; ஆனால், அதைத் தக்கவைக்கச் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தித் தரவுகளை உறுதிசெய்ய வேண்டும்’ என்று ஆணையிட்டது.

எனவே, தற்போதைய 69% இடஒதுக்கீட்டை நீதிமன்றங்களில் சட்டபூர்வமாகப் பாதுகாப்பதுடன், தற்போதைய சாதிவாரிக் கணக்கெடுப்பின் நிலைக்குப் பிறகு அதில் உயர்வைக் கொண்டுவர வேண்டுமெனில் சாதிவாரிக் கணக்கெடுப்புத் தரவுகள் இன்றியமையாதவை ஆகின்றன.

அவசரத் தேவை

‘பிஹார் மேற்கொண்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு முன்மாதிரியைப் பின்பற்றி பிரத்யேக ‘செயலி’ மூலம் சாதிவாரித் தகவல்களைத் திரட்டும்போது, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சாதிகளின் பட்டியல் தரவுகளை, அந்தந்த மாநில அரசுகளிடம் பெற்றுப் பதிவேற்றி, அதன் அடிப்படையிலேயே மக்களிடம் சாதிவாரித் தகவல்களைப் பெற வேண்டும்’ எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இல்லையெனில், சாதியினர் சூட்டிக் கொள்ளும் ‘பட்டங்கள்’, சாதி வகையாகக் கணக்கில் சேர்க்கப்படும் அபாயம் நேரிடலாம்; இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கை.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT