சிறப்புக் கட்டுரைகள்

ஏஐ தரவு மையமும் எதிர்ப்பலைகளும் | சொல், பொருள், தெளிவு

ம.சுசித்ரா

விசாகப்பட்டினம், தாணே ஆகிய இந்திய நகரங்களில் தொடங்கி லண்டன், டப்ளின், வான்கூவர் என உலகின் பெருநகரங்களைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் தங்கள் பகுதியில் பெரிய அளவில் தொடங்கப்படவிருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்களை (AI data centers) எதிர்த்து வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், அனகாபள்ளி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட சில கிராமங்களின் 601 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கூகுள் நிறுவனத்துக்கு ஒதுக்கியது.

அங்கு அதானியின் ‘இன்ஃப்ரா /அதானி கானெக்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து கூகுளின் ‘ரெய்டன் இன்ஃபோடெக் இந்தியா’ நிறுவனம் 1 கிகாவாட் அளவிலான ஏஐ தரவு மையத்தை நிறுவும் பணியைத் தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிரத்தின் தாணே நகரைச் சுற்றிய பால்கும் பாடா, மாஜிவாடா கிராமங்களின் 53.73 ஏக்கர் நிலத்தில் ரூ.7,203.29 கோடி மதிப்பிலான பிரம்மாண்டத் தரவு மையத்தை அமைக்கும் வேலையில் அமேசான் நிறுவனம் இறங்கியுள்ளது.

மக்களின் குரல்

ஏஐ தரவு மையத்தால் தங்கள் ஊர் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகும்; நீர், மின் வளங்கள் சுரண்டப்படும் என்கிற கவலையால் விசாகப்பட்டின மக்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, காலநிலை நெருக்கடியின் விளைவுகளால் தங்களின் மாநிலம் பெரும் தாக்கத்தைச் சந்தித்துவருவதாகவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிரத்தில் திட்டத்தைத் தொடங்கும் முன் உள்ளூர் மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு, நிறுவனத் தரப்பில் மழுப்பலான பதில்கள் அளிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

புதிய நிறுவனத்துக்கான தண்ணீர்ப் பயன்பாடு குறித்த தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும்; காற்றின் தரம் பாதிக்கப்படக் கூடாது; ஒலி, ஒளி மாசு ஏற்படக் கூடாது என்பன போன்ற கோரிக்கைகளைக் கூட்டமைப்பாகத் திரண்டு அம்மக்கள் முன்வைத்துள்ளனர். உள்ளூர் மக்களுக்கு இதனால் ஏற்படும் உண்மையான பலன் என்ன என்பது குறித்த விளக்கத்தையும் கோரியுள்ளனர்.

அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் வேறுவிதமான சூழல் நிலவுகிறது. தண்ணீர், மின்சாரம், நிலம் ஆகியவை ஏஐ உள்கட்டமைப்புக்கு அதீதமாகத் தேவைப்படும் என்பதால் உள்ளூர் மக்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் ஒன்றுகூடி அங்கு எதிர்க் குரல் எழுப்புகின்றனர்.

மேலும், இத்தகைய நிறுவனங்கள் தங்களின் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு இழைப்பதைத் தடுக்கச் சட்டங்களையும் அந்நாடுகள் இயற்றி வருகின்றன. வெவ்வேறு நிலப்பரப்பு, அரசியல் சித்தாந்தங்களைப் பின்பற்றினாலும் தரவு மைய உள்கட்டமைப்புத் திட்டத்துக்கு எதிராகக் கைகோத்து வலைப்பின்னல் போல் பல்வேறு நாடுகள் செயல்படத் தொடங்கி உள்ளன.

இந்த வலுவான எதிர்ப்புக்கு மையப்புள்ளியாக அமெரிக்கா திகழ்கிறது. அங்கு வாழும் விவசாயிகள் முதல் நகர்ப்புற மக்கள் வரை தரவு மையத்துக்கு எதிராக நிற்கின்றனர்.

எதற்கான போராட்டம்?

ஏஐ தொழில்நுட்பம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன, மனிதகுலத்துக்கு இது எத்தகைய மாற்றங்களை அளிக்கப்போகிறது என்பன போன்றவை இந்தப் போராட்டங்களுக்குப் பின்னணியாக இல்லை. மாறாக, உச்சபட்ச ஆற்றல், தண்ணீர்ப் பயன்பாடு ஆகியவைதான் எதிர்ப்பில் முதன்மையாகப் பேசப்படுகின்றன.

இரைச்சல், ஒளி மாசு; குடிநீர், மண் நச்சுத்தன்மை அடைவது; உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு குறைவது போன்றவை ஏஐ தொழில்நுட்பத் துறை குறித்த தற்போதைய கவலையாக உள்ளன. பெருநிறுவனங்களின் வரம்பற்ற விரிவாக்கத்தால் வாழ்க்கையின் அடிப்படையான தேவைகளில் ஏற்படவிருக்கும் மோசமான தாக்கத்தைக் கருத்தில் கொண்டு மட்டுமே இந்தப் போராட்டங்கள் எழுகின்றன.

அதீத நிலமும் வளமும் கொண்ட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளே இப்படிக் கவலை கொள்ளும்போது, தண்ணீர்த் தட்டுப்பாடு, மின் பற்றாக்குறை போன்றவற்றைச் சரிசெய்ய முயன்றுகொண்டிருக்கும் இந்தியா போன்ற நாட்டுக்கு இந்தத் திட்டம் பன்மடங்கு ஆபத்தானது என்னும் அச்சம் படர்கிறது.

வேலை என்னும் கானல் நீர்

நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில் தரவு மையங்களுக்கு 20 ஆண்டு கால வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டன. ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகளில் மக்களின் எதிர்ப்புக்கு இடையில் கட்டமைக்கப்படும் தரவு மையத்துக்கு அம்மாநில அரசு 15 ஆண்டுகளுக்கு மானிய விலையில் மின் வசதி, 10 ஆண்டுகளுக்கு மானிய விலையில் நீர் வளம், நிலம் விலையில் 25% தள்ளுபடி போன்ற சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.

இந்தத் துறை மூலம் நமது இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்னும் உத்தரவாதத்துடன் இவ்வாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. உண்மை என்னவென்றால், தரவு மையங்கள் என்பவை செயற்கை நுண்ணறிவுத் துறைக்குத் தேவையான சேவையகங்களின் (Servers) பிரம்மாண்டக் கிடங்குகளே.

லட்சக்கணக்கான சதுர அடி நிலப்பரப்பில் அமைக்கப்படும் இந்த மிதமிஞ்சிய வசதிகள் செயல்பாட்டுக்கு வந்தவுடன், அவற்றை இயக்க விரல் விட்டு எண்ணக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள். ஏனெனில், இவை புதிய நிரல்களை உருவாக்கும் அலுவலகங்களோ, தொழில்நுட்பம் படித்த இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களோ அல்ல.

நிலம், நீர்

தரவுகளைச் சேமிக்கப் பயன்படுத்தப்படும் வழமையான தரவு மையங்களைப் போல் அல்லாமல், இவை ராட்சத ஏஐ சூப்பர் கணினிபோல் செயல்படும்.

ஆகவே, இந்தக் கருவிகளை இடையறாமல் இயக்க அதிதீவிர மின் வசதியும், வன்பொருள் சூடாவதைத் தவிர்க்க மேம்பட்ட குளிரூட்டும் அமைப்புகளுக்கு அபரிமிதமான அளவு தண்ணீரும் தேவைப்படும். இவை தவிர, தரவு மையங்களுக்கு மிதமிஞ்சிய நில வளமும் அவசியம்.

ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளே இந்த நிறுவனங்களைக் கேள்வி கேட்டு, ஏஐ உள்கட்டமைப்புகளுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கிவரும் நிலையில், பெரும் லாபத்தை ஈட்டும் இந்த நிறுவனங்களால் இந்தியாவில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது பரிசீலிக்கப்பட வேண்டும்.

நாட்டின் அனைத்து அடுக்கு மக்களுக்கும் நிறைவான நீர், நிலம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை இன்றளவும் பூர்த்திசெய்ய முடியாத நிலையில், இத்தகைய நிறுவனங்கள் என்னென்ன சிக்கல்களை உருவாக்கும் என்பனவற்றையும் ஆராய்ந்து முடிவெடுக்கப்பட வேண்டும்.

SCROLL FOR NEXT