அ
மெரிக்காவின் க்வின்னிபியாக் பல்கலைக்கழகம் அவ்வப்போது நாட்டின் அரசியல் பொருளாதாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பல விஷயங்களைப் பற்றி நடத்தும் கருத்துக்கணிப்புகள் மிகப் பிரசித்தமானவை. இந்தக் கருத்துக் கணிப்புகள் நம்பகமானவை என்று பத்திரிக்கைகள் அறிஞர்கள், பேராசிரியர்கள் கருதுகிறார்கள். க்வின்னிபியாக் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிபர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் டொனால்ட் ட்ரம்ப் என்று பெரும்பான்மை அமெரிக்கர்கள் கருதுவதாகத் தெரியவந்திருக்கிறது. எல்லா நிலையிலும் எல்லாத் துறையிலும் அவர் என்ன செய்கிறார் என்பது பிரச்சினையில்லை. என்ன செய்யவில்லை என்பதுதான் பிரச்சினை.
ட்ரம்பின் அடாவடிப் பேச்சும் தற்பெருமையும் தங்களுக்கு அலுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவரது தகுதியின்மையால் அமெரிக்கர்கள் படும் துன்பத்துக்கு அளவே இல்லை என்கிறார்கள். தொடர்ச்சியாகப் பல மாகாணங்களில், சமீபத்தில் போர்ட்டோ ரீக்கோவில் அடித்த புயலிலும் சூறாவளியிலும் வெள்ளத்திலும் அவதிப்பட்டு வரும் மக்களுக்குப் போதிய நிவாரணம் அளிக்க முடிவெடுக்கத் தெரியாமல் அவர் வெற்றுப் பேச்சுப் பேசுவதாகக் குற்றம்சாட்டினார்கள்.
போர்ட்டோ ரீக்கோவில் மின்சாரம் இயங்கவில்லை. அதைச் செப்பனிடப் பல நாட்கள் ஆகலாம். குடி தண்ணீர் இல்லை. சுகாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படப்போகிறது. ஒபாமா வகுத்த ஏழைகளுக்கான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் முடக்கப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக, முன்பு ட்ரம்ப்பை ஆதரித்தவர்களே இப்போது வெறுத்துப்போயிருப்பதாகக் கருத்துக்கணிப்பு சொன்னது.
ட்ரம்ப் எதிர்ப்பு அலைக்கு ஒரு புதிய பரிணாமமாக ஒரு மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. யாரும் எதிர்பாராத மாற்றம் அது. அதுவும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் அரசியலில் கால் பதிக்கும் ஆர்வம் வந்திருக்கிறது.
அதில் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கையில் புகைப்படம் வரும் அளவுக்குப் பேசப்படுபவர் 17 வயது தஷீன் சௌதுரி என்ற ஒரு இந்திய இளைஞர். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த உழைக்கும் வர்ககப் பெற்றோர்களின் அதி புத்திசாலி மகன். தந்தை பலசரக்கு அங்காடியில் வேலை பார்க்கிறார். தாய் வீடுகளுக்குச் சென்று செய்தித்தாள் போடுகிறார்.
தஷீனின் ஆர்வமும் இலக்கும் அசாதாரணமானது. நியூயார்க் நகரின் சிறந்த அரசாங்க உயர் நிலைப் பள்ளியில் மாணவர் சங்கத்தின் தலைவர். தன்னாட்சி கொண்ட மன்ஹாட்டன் பகுதிக்கு ஆலோசனை அளிக்கும் மாணவர் குழுமத்தை நடத்துபவர். இரண்டு நிறுவனங்களை ஆரம்பிக்க உதவி அளித்தவர். ஒன்று புகைப்படத் துறை சார்ந்தது. இன்னொன்று பொறியியல் மற்றும் கணினி ப்ரோக்ராமுக்குப் பயிற்சி அளிப்பது. இப்போது அவரது இலக்கு அரசியல் சேவை. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தஷீன், அமெரிக்க செனட்டின் உறுப்பினராவதற்குத் திட்டமிடுகிறார். நியூயார்க் பகுதியில் இருக்கும் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்தபடியே செனட்டுக்கான தேர்தலில் நிற்கவும் தன்னைத் தயார் செய்துவருகிறார்.
சரி, கல்லூரிப் படிப்பு என்ன ஆகும்? மாற்றி மாற்றி கல்லூரி செமஸ்டரில் கலந்துகொள்ளலாம். ஆனால் அவருடைய கல்லூரிப் படிப்பு எட்டு ஆண்டுகளுக்கு நீளும். ‘நான் தேர்தலில் ஜெயித்தால் அப்படி எனக்கு இசைவாக இருக்கும் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பேன்’ என்கிறார் தஷீன். வரும் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் நியூ யார்க்கில் அவர் போட்டியிடுவார். தேர்தலில் நிற்க 18 வயது ஆக வேண்டும். அவருக்கு அதற்குள் 18 வயது ஆகிவிடும். தற்சமயம் செனட்டராக இருப்பவர் ஜனநாயகக் கட்சிக்காரராக இருந்தாலும் ஜனநாயகக் கட்சியிலிருந்து பிரிந்த செனட்டில் குடியரசுக் கட்சிக்காரர்களுடன் கைகோத்து நடப்பவர் என்பதால் தஷீனுக்கு வெறுத்துப்போயிற்றாம்.
அந்தக் கூட்டுறவினால் குடியரசுக்காரர்களின் கை ஓங்குவதாகவும், முற்போக்கு மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் போவதாகவும் தஷீன் சொல்கிறார். அவருடைய வலைத்தளங்கள் அவருடைய விசாலமான எண்ணங்களையும் திட்டங்களையும் காண்பிக்கின்றன. கட்டுப்படியாகும் விலையில் வீடுகள், பாதுகாப்பான தெருக்கள் சுகாதார வசதி ஆகியவற்றுக்கு அவர் முக்கியத்துவம் தருகிறார்.
எப்படி வந்தது அரசியலில் இப்படிப்பட்ட ஆர்வம்? தஷீன் ஒரு அதிசய ஒற்றை உதாரணம் இல்லை. அவரைப் போல பள்ளிகளில் படிக்கும் பல பதின் வயதுச் சிறுவர்கள், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் பலருக்கு அரசியலில் நேரிடை அனுபவம் பெற வேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்துவருகிறது. வெறுமனே தெருவில் நின்று கோஷம் போடும் கூட்டம் இல்லை அது. ஆக்கபூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற துடிப்பு. இந்தப் புதிய போக்கு அறிஞர்களுக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது. “மாணவர்களுக்கு அரசியலில் ஆழ்ந்த அறிவும் ஆர்வமும் இல்லையே என்று எனக்கு மிகுந்த ஏமாற்றம் இருந்தது. இப்போது ஏற்பட்டுவரும் மாற்றம் ஆச்சரியமாக இருக்கிறது” என்கிறார் ஒரு பேராசிரியர். டொனால்ட் ட்ரம்ப் வருகை ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் அது என்கிறார்கள்.
‘ட்ரம்ப் வந்தது எப்படி?’ என்று அவர்கள் திகைக்கிறார்கள். ‘மறுபடி அப்படிப்பட்ட பிழை ஏற்படாமல் தடுப்பது எப்படி?’ என்று அவர்கள் மாய்ந்துபோகிறார்கள். “சும்மா திகைத்து நிற்காதீர்கள். அரசியலில் நேரடியாகக் குதியுங்கள் என்று நான் சொல்வேன்” என்கிறார் ஒரு பேராசிரியர். இப்போது அதுதான், அந்த திகைப்புதான் மாணவர்களை உந்துகிறது. நடந்துபோன பிழைக்கு மாற்றம் ஏற்படுத்த விரைகிறார்கள். இனபேதம் நிறபேதம் இல்லாமல். தஷீன் ஒரு தொடக்கம்தான்!
-வாஸந்தி,
மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்,
தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com