சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப் பெரிய கிரகம் வியாழன். வாயுக்களால் ஆன இந்த கிரகம், பூமியை விட இரண்டரை மடங்கு அதிகமான ஈர்ப்பு விசையைக் கொண்டுள்ளது. தனது ஈர்ப்பு விசையின் மூலமாக, ஷூமேக்கர் லெவி-9 என்று பெயரிடப்பட்ட ஒரு வால்நட்சத்திரத்தையும் அது ஈர்த்து, சுமார் 20 ஆண்டுகளாக அந்த வால்நட்சத்திரத்தைத் தன்னைச் சுற்றிவரச் செய்தது. காலப்போக்கில் வியாழனை வால்நட்சத்திரம் மேலும் நெருங்கி வந்தது. அதைத் தொடர்ந்து வியாழனின் ஈர்ப்பு விசை அதை 21 துண்டுகளாகப் பிளவுபட வைத்தது. அந்த நிலையிலேயே சுமார் இரண்டு ஆண்டுகள் வால்நட்சத்திரம் வியாழனைச் சுற்றிவந்தது. பிறகு வியாழன் மீது மோதி நொறுங்கியது.
அந்த வால்நட்சத்திரத் துண்டுகள் ஒவ்வொன்றும் 2 கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை அகலம் கொண்டவை. 1994 ஜூலை 16-ல் ஒவ்வொன்றாக அவை வியாழன் மீது மோதத் தொடங்கின. 22-ம் தேதிவரை அந்த நிகழ்வு நீடித்தது. மணிக்கு 2 லட்சத்து 16 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வியாழன் மீது மோதின. பூமியைப் போன்று வியாழனில் கடினமான தரை இல்லை என்றாலும் இந்த மோதலின் தாக்கம் மோசமானதாகவே இருந்தது. சூரியக் குடும்பத்தில், பூமிக்கு வெளியே நடந்த பெரும் மோதல் ஒன்றை, வெறுங்கண்ணால் பார்க்க நேரிட்டது அதுதான் முதன்முறை.