சிறப்புக் கட்டுரைகள்

கமல்ஹாசன் நடத்திய ‘தமிழ் நிலத்தின் எதிர்காலம்’ கலந்துரையாடல்: கேள்வி கேட்டால்தான் நியாயம் கிடைக்கும்

செய்திப்பிரிவு

நமது ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் 5-ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, ‘யாதும் தமிழே’ என்ற 2 நாள் கொண்டாட்டம் சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர் முத்தா கான்செர்ட் ஹாலில் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. இதில், 5 வெவ்வேறு துறைகளில் சாதனை படைத்த 5 ஆளுமைகளுக்கு ‘தமிழ் திரு’ விருதுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, விவசாயிகள் பிரச்சினை, தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து அலசும் ‘தமிழ் நிலத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசன் தலைமையில் நடந்தது. இதில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன், கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றனர். இனி, கலந்துரையாடல்..

கமல்ஹாசன்: நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசும்போது, ‘‘வயதான காலத்தில் பிறந்த பிள்ளையை அடக்கமுடியாது’’ என்றார். ஒரு குற்ற உணர்வோடு, என்னைத்தான் சொல்கிறார்களோ என்று நினைத்தேன். தமிழ் இந்து மட்டுமல்ல; நானும் என் தந்தையின் வயதான காலத்தில் பிறந்தவன்தான். அன்பு மட்டுமே என்னை அடக்க முடியும் என்று நம்புகிறேன். இங்கே மேடையில் இருக்கும் வெவ்வேறு துறைகளின் வல்லுநர்கள் பேச இருக்கிறார்கள். நம்மை வெகுவாக வதைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களில், மிக முக்கியமானது விவசாயம். அதைப் பற்றி மட்டுமே குறிப்பாக இங்கே பேசப்போகிறோம்.

குடவாயில் பாலசுப்பிரமணியன்: விவசாயத்துக்கு அடிப்படை நீர். அதற்குத்தான் இன்று மிகப்பெரிய போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. யாருமே சாதிக்காத நீர் மேலாண்மையை ஒரு தமிழன் அந்த காலத்திலேயே சாதித்துள்ளான். சென்னையில் இருந்து 92 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநிலத்தின் புத்தூர் அருகே உள்ளது சுருட்டப்பள்ளி. ஒரு சிவத்தலம். அதன் அருகே ராமகிரி என்ற ஊர் உள்ளது. அந்த ஊரின் மலையடிவாரத்தில் உள்ள கிராமத்தில் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. அங்குள்ள குளத்தின் கரையில் ஒரு அழகான நந்தி உள்ளது. அந்த காளை உருவத்தை திருவள்ளூர் அருகேயுள்ள கூவம் என்ற ஊரைச் சேர்ந்த மகாசிற்பி செய்திருக்கிறார். அந்த காளையின் வாயில் உள்ள துளையில் இருந்து 5 குதிரை சக்தி கொண்ட மோட்டாரில் இருந்து கொட்டுவதுபோல, தண்ணீர் வேகமாக கொட்டிக்கொண்டே இருக்கும். அந்த தண்ணீர், குளத்தில் இருந்து வழிந்து ஊருக்குள் பாய்ந்து செல்கிறது. இது 1,100 ஆண்டு காலமாக நிற்காமல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இன்றைக்கும் அந்தக் காட்சியைப் பார்க்கலாம்.

அதில் ஒரு சிறப்பு என்னவெனில், அந்தக் காளையின் முதுகில் ஒரு கல்வெட்டு உள்ளது. அது கி.பி. 10-ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு. அதில் ‘கூவத்து சாமுண்டியின் மகன் கூவத்து பெருந்தச்சன் என்பவன் இந்தக் காளை உருவத்தைச் செய்தேன்’ என்று எழுதப்பட்டுள்ளது. அந்தக் காளை உருவத்துக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது. கடும் கோடையில் அந்த வட்டார பகுதியே வறண்டு கிடக்கும்போதும் அங்கு நீர் வந்துகொண்டிருக்கிறது.

கமல்ஹாசன்: கூவத்தைப்பற்றி சொன்னார். நாமும் கூவத்தின் பக்கத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் பெற்றவற்றை வைத்து கூவத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, நம் அஜாக்கிரதை. இன்னொன்று, இயற்றப்பட வேண்டிய சட்டங்கள். அந்த நந்தியை இங்கே அழைக்க வேண்டும். அது இங்கே தேவைப்படுகிறது என்று சொல்லி ஒரு மன்னனின் அரசு ஆணையிட வேண்டும். அந்த ஆணையை இடுவதற்கு நல்ல அரசு அன்று இருந்தது. இன்று? அது எதனால்? நீதி வழுவியதனால் வந்ததா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

நீதிபதி அரிபரந்தாமன்: விவசாய நிலம் என்றாலே தஞ்சைதான். அந்தப் பகுதிதான் 50 சதவீத நெல்லை உற்பத்தி செய்கிறது. கதிராமங்கலம், நெடுவாசலில் விவசாய நிலங்கள் எத்தனை காலம் இருக்கும் என்பதுதான் கவலையாக இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பெயரில் நன்செய் நிலங்கள் அழிந்துவிடும் அபாயம் தெரிகிறது. விவசாய நிலங்களை அழிப்பதுதான் மத்திய அரசின் வேளாண் கொள்கையா? அங்கு ஹைட்ரோகார்பன், தங்கம், வைரச் சுரங்கங்கள் வேண்டுமா? என்று கேட்டால், ஒரு விவசாயி மகனாக, ‘எனக்கு எந்தச் சுரங்கமும் வேண்டாம். விவசாய நிலம்தான் வேண்டும். வேறு எதற்காகவும் விவசாய நிலத்தை இழக்க நான் தயாராக இல்லை’ என்பேன்.

கமல்ஹாசன்: ஆமா, பசிக்கு தங்க பஸ்பம் சாப்பிட முடியுமா?

பி.ஆர்.பாண்டியன்: விவசாயத்தையும், விவசாயிகளையும் யார் பாதுகாக்கப் போகிறார்கள்? பாதுகாக்க முடியுமா? என்ற அச்சத்தில் இருக்கும் விவசாயப் பெருமக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது.

இந்த ஆண்டில் மிகப்பெரிய கொடுமை நிலத்தடி நீர் பறிபோய்விட்டது. இந்த சூழலில், போராட்டம் மட்டுமே நம் கடமையல்ல; மக்களுக்கு சிலவற்றை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், நான் சார்ந்துள்ள விவசாய அமைப்பு தஞ்சையை பூர்வீகமாக கொண்டுள்ள நிர்வாகக் குழுவுடன் கலந்துபேசி மன்னார்குடி அருகே உள்ள 3 ஏரிகளைத் தூர்வாரி, அதில் மழைநீர் சேகரிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மேம்பட்டுள்ளது.

இந்த தருணத்தில், இந்து பத்திரிகையின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவர், காவிரி டெல்டாவில் தான் பிறந்த விளக்குடி கிராமத்தில் ஒரு குளத்தை தூர்வார வேண்டும் என முடிவெடுத்து, இந்து குழுமத்தின் நிதியில் இருந்து நிதி வழங்கி, ஒரு குளத்தை தூர்வாரினார்கள். தூர்வாரிய குளத்தில் திடீரென நீரூற்று கிளம்பியது. அந்த நீர்தான் அங்கிருக்கும் 1,000 குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு குடிநீர் வழங்கியுள்ளது. தமிழகத்தின் நீராதார உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசன்: இதைப்போல ஏழெட்டு நிகழ்ச்சிகள் நடத்தினால்கூட மக்களிடம் புரிதல் இல்லை. அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவேண்டிய கடமை உள்ளது. இங்கு யாரும் உங்களுக்கு வாக்குறுதி கொடுக்க வரவில்லை. ஓட்டு கேட்க வரவில்லை. உங்கள் உதவியைக் கேட்க வருகிறார்கள். உங்கள் புரிதல்தான் அந்த உதவி. இதைப் புரிந்துகொள்ளுங்கள். விவசாயிகள் என்பவர்கள் போராட்டம் செய்பவர்கள், பட்டினியால் சாகிறவர்கள் அல்ல. அவர்கள் யார், எதனால் சாகிறார்கள் என்பது குறித்து இன்னும் பேசப்போகிறார்கள்.

குடவாயில் பாலசுப்பிரமணியன்: குமரியில் இருந்து வடவேங்கடம் வரை பயணம் போனால், ஒவ்வொரு கிராமத்திலும் பெரிய பெரிய ஏரிகள் இருக்கும். அதை கண்மாய், குளம், ஏந்தல், தாங்கல் என பல பெயர்களில் சொல்வார்கள். ஏரியின் கரையில் இருந்து 200, 300 மீட்டர் தள்ளி 2 கல்தூண்கள் நின்றுகொண்டிருக்கும். அதில் குறுக்கு வட்டமாக இரண்டு, மூன்று கல் இருக்கும். அது எல்லாமே தமிழ் மக்கள், விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச, அற்புதமாக, அறிவியல் ரீதியில் அமைத்த மதகுதான். ஆங்கிலேயர் வந்த பிறகு, ஏரிக்கரையை உடைத்து, அதில் திருகு மதகுகளை பொதுப்பணித் துறையினர் அமைத்தனர். அதுமுதல் ஏரிகள் வறண்டுவிட்டன. மழைநீர் தங்குவதில்லை. மதகுகளை 5 அடிக்கு திறந்தால், அதில் தேங்கியிருக்கும் தண்ணீர் 2 மணிநேரத்தில் வெளியேறிச் சென்றுவிடும். தேவையான அளவுக்கு திறக்க முடியாது. ஏரியின் கரையை உடைக்காமல் சுரங்கம் வழியாக தண்ணீரைக் கொண்டுவரும் குமிழித்தூம்பு என்ற அமைப்பை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் கண்டுபிடித்துள்ளான்.

புதுக்கோட்டை ஆரியூர் ஏரியில் குமிழித்தூம்பு உள்ளது. அதில் தூண்களும், மதகு அமைப்பும் உள்ளது. அதில் பார்த்தால், ஸ்ரீராஜராஜன் என்று எழுதப்பட்டுள்ளது. எதற்காக என்றால் கல்தூண், குமிழித்தூம்பாகவே அவன் நின்று கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்துகிறது. ராஜராஜன் தூம்பு என்கிறார்கள். விவசாயம் செழித்தால்தான் நாடு செழிக்கும் என்ற அடிப்படையில் அந்த மன்னன் ஏரியை தூர்வாரினான். பாண்டியன் காலத்து குமிழித்தூம்பு சேதமடைந்திருந்தது. அதை சீரமைத்து, நிலத்தையும் கொடையாகக் கொடுத்து, அதில் வரும் வருவாயில் ஏரியை ஆண்டுதோறும் தூர்வார வேண்டும், கரையை பலப்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளான். கடைசியில் எழுதிய வரியில், ‘இனி எந்த காலத்திலும் ஏரியையும், மதகையும், குமிழித்தூம்பையும் யார் காப்பாற்றுகிறார்களோ அவர்களுடைய பாதத்தில் ஒட்டியுள்ள சிறு மண் துகளை என் தலையில் தாங்குகிறேன்’ என்று தெரிவித்துள்ளான். இப்படிப்பட்ட அற்புதங்களை அம்மன்னன் செய்துள்ளான். வரலாறு என்பது பெருமை பேசுவதற்கு அல்ல. எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

கமல்ஹாசன்: தற்போது அனைத்தும் ரியல் எஸ்டேட்டாக மாறிவிட்டது. நாம் பெருமையையும், சிறுமையையும் கூற வேண்டும். இங்கு வெள்ளம் வந்தபோது. டிவி, பிரிட்ஜ் எல்லாம் சென்றது. அந்த நிலையையும் மாற்ற வேண்டும்.

அரிபரந்தாமன்: திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏரிகளெல்லாம் நிரம்பின. தற்போது ஏரிகளைக் காணோம். யார் யாரோ அபகரித்துவிட்டார்கள். பல கல்வி நிலையங்கள் அந்த ஏரியில் உள்ளன. 1992-ல் இடைக்கால உத்தரவை காவிரி நதிநீர் ஆணையம் வழங்கியது. அது, இதுவரை அமல்படுத்தப்படவில்லை. 2007-ல் இறுதி தீர்ப்பு வழங்கியது. இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. கிருஷ்ணா நீரை பொறுத்தவரை மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்துக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று மேலாண்மை வாரியம் பிரித்துக் கொடுக்கிறது. அதேபோல, நர்மதாவிலும், பக்ராநங்கலிலும் உள்ளது. தமிழகத்தில் ஏன் இல்லை?

கமல்ஹாசன்: ஏன் இல்லை என்பதை தெளிவாகச் சொல்ல முடியவில்லை. நாங்கள் வெவ்வேறு கேளிக்கைகளில் திசை திரும்பியுள்ளோம். கிரிக்கெட், சினிமா, பிக்பாஸ் இருக்கிறது. இதுபோக ஒரு அயர்ச்சி இருக்கிறது. சுதந்திரப் போராட்டம் எல்லாம் செய்ததில் சின்ன அயர்ச்சி இருக்கிறது. அதுல அசந்து தூங்கிட்டோம். அதுதான் நிஜம். பல வருடங்களாக நாம் திருவிழா கொண்டாடிய அளவுக்கு, மக்களின் தேவைகளைக் கொண்டாட மறந்துவிட்டோம்.

பி.ஆர்.பாண்டியன்: கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் நீராதார பிரச்சினைகளில் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, பிரச்சினைகளை மையப்படுத்திப் போராடுகின்றனர். தமிழகத்தில் இது கிடையாது. இங்கு அதிகாரத்தை முன்னிறுத்தி போராடுகிறார்களே தவிர, பிரச்சினைகளை முன்னிறுத்திப் போராட அரசியல் கட்சிகள் தயங்குகின்றன. பல பிரச்சினைகளில் போராட்டங்கள் தோற்பதற்கு காரணமே, அரசியலும் விவசாயிகளும் பிரிக்கப்பட்டதால்தான். தமிழக மக்கள்தொகையில் 80 சதவீதம் பேர் விவசாயிகள். ஆனாலும், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு பிரச்சினைகள் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. எப்படி வாழப்போகிறோம் என்ற அச்சத்தில் விவசாயிகள் இருக்கும் சூழ்நிலையில், இன்றைய நிகழ்வு புரிதலையும், வழிகாட்டுதலையும் வழங்கும் என்று தமிழகம் மட்டுமல்லாது, உலக தமிழர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

கமல்ஹாசன்: நமக்கு தெரியும், நம் கல்வியின் திறன். எப்போது பார்த்தாலும் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டிருந்தால் வேலை கிடைக்க வேண்டாமா? இன்று விருது கொடுத்தோமே ஒரு அம்மாவுக்கு. அவங்க தமிழ்வழிக் கல்வி படித்தவர்தான். அதனால் இது சாத்தியம்தான். படிக்காமலேயே வெறும் வாய்ச்சவடாலிலேயே மேடைக்கு வந்துவிடலாம். இதோ நான் இருக்கிறேன். இந்தமாதிரி இடத்தில் பேசிக்கொண்டே இருந்தால்கூட பேச்சு வந்துவிடும். கல்வியும் வந்துவிடும். அந்த தைரியத்தில்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். என் சமீபத்திய கோபத்துக்கு காரணம் என்ன? திடீர்னு என்ன? அதுவும் 62 வயசில் ஆசை வந்துள்ளது. என் மகள்களுக்கு சொத்து சேர்க்கவா அரசியலுக்கு வருகிறேன்? இதை யாராவது செய்தே ஆகவேண்டும். ஜப்பானில் ஓரிடத்தில் அணு உலை கசிகிறது. என்ன செய்வது? யாராவது சுத்தப்படுத்தியே ஆகவேண்டும். அந்த அணுக்கதிர் கசிவை தொட்டால் சாவு நிச்சயம் என்று தெரிந்தே அந்த வேலைக்கு ஒரு குழுவினர் முன்வருகிறார்கள். அவர்கள் எல்லாம் என் வாத்தியார்கள். எனக்கு தைரியம் தந்தவர்கள். பேச்சு அதிகமானால் தோட்டாக்கள் வந்து விழுகிறது. அதற்கும் துணிந்தவர்கள் இங்கு வந்துள்ளார்கள். பணிவு என்பது தன் அளவு புரிந்தது. அந்தப் பணிவு வந்ததால்தான் பேசுகிறேன். திமிரில் பேசுவதாக அரசு நினைத்தால் மன்னித்து விடுங்கள். சரி, மணல் கொள்ளையைத் தடுக்க என்ன சட்டம் இருக்கிறது? இதில் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

அரிபரந்தாமன்: மக்கள்தான் செய்ய வேண்டும்; இந்தக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்றுதான் நீங்களே கூறிவிட்டீர்களே..

கமல்ஹாசன்: ‘தசாவதாரம்’ படத்தில் இதை சொல்லிப்பார்த்தேன். பார்த்துவிட்டு கைதட்டிவிட்டுப் போய்விட்டீர்கள். இங்கேயும் அதேபோல்தான் செய்யப் போகிறீர்களா? எனக்கு அந்த பயம் உள்ளது. நான்கு பேர் வந்து இவ்வளவு கஷ்டப்பட்டதற்கான பலன் வேண்டும். தைரியமான கலெக்டர் சில வேலைகளைச் செய்யலாம். இவர் மாதிரி ஒருவர் நல்ல தீர்ப்பு சொல்லலாம். முக்கியமாக நீங்கள், ‘ஏய் என்ன பண்ற? எங்கள் ஊரில் வந்து என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்க வேண்டும். அப்போதான் நல்லது நடக்கும். நியாயம் கிடைக்கும். நான் மரண தண்டனைக்கு எதிரானவன். திருத்த முடியாத தீர்ப்புகளை தரக்கூடாது என்பது எங்கள் வாதம். பிழையா பெருமை நீதிக்கு கிடையாது. பாண்டியன் காலத்தில், முத்துப்பரலா, மாணிக்கப்பரலா என கேட்டு, சிலம்பை பார்த்து ‘ஐயய்யோ சாரிங்க..’ என்று சொல்வதற்குள் கோவலன் செத்துப்போயாச்சு. ஆனால், இந்த கருணை இப்போது சரிப்படுமா என்ற கேள்வியை இவர்கள் கேட்கின்றனர்.

அரிபரந்தாமன்: மரணதண்டனையில் எனக்கு கூட உடன்பாடு இல்லை. மரண தண்டனையைக்கூட நாம் ஒழித்துவிடலாம். மணல் கொள்ளையை ஒழிக்க முடியாது. ஏனென்றால், நாம் நிலத்தை இழந்துவிட்டோம், ஆறு, ஏரிகளை இழந்துவிட்டோம், விவசாயத்தை இழந்துவிட்டோம்.சினிமா ஒரு தொழில்போன்று விவசாயமும் ஒரு தொழில். எந்த தொழிலையும் லாபத்துக்குத்தான் செய்வோம். ஆனால், லாபம் இல்லாத ஒரே தொழில் விவசாயம்தான்.

கமல்ஹாசன்: அப்படிப் பார்த்தால் சினிமாவும் அதேபோன்று ஆகிவிட்டது.

அரிபரந்தாமன்: ஆனால், தற்கொலை அளவுக்கு சினிமா போகவில்லை. யாரும் அந்த நிலைமைக்கு போகவேண்டாம். விவசாயிகள் தற்கொலை என்பது சமூகம் செய்யும் கொலை. உலகத்திலேயே நம்ப முடியாத ஒரு தொழில் விவசாயம். அதிக மழை, சூறாவளி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் விவசாயிகளை எப்போது பாதிக்கும் என்று தெரியாது. இப்படி இருக்கும் விவசாயிக்கு லாப விலையை அரசு அளிக்கிறதா என்பதுதான் கேள்வி. இதற்காகத்தான் கடந்த 2004-ல் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகு, அவர் 5 அறிக்கைகளை அளித்துள்ளார். அதில், விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக உற்பத்தி செலவுடன் 50 சதவீத விலையை அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அரசு செய்யவில்லை. ஆனால், 10 சதவீதம் மட்டுமே விவசாயிகளுக்கு தருகின்றனர். அதனால்தான் தக்காளி, வெங்காயம் என எல்லா பொருட்களையும் விவசாயி வெளியே கொட்டும் நிலை உள்ளது. விவசாயம் லாபகரமாக நடக்க வேண்டும் என்றால், எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். அதற்கு இந்த கூட்டம் உதவியாக இருக்க வேண்டும்.

கமல்ஹாசன்: கண்டிப்பாக. நானும் அந்த தைரியத்தில்தான் உள்ளேன். ‘விஸ்வரூபம்’ படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்றது சின்ன கம்பெனி. நியாயமும் நீதியும் இருந்ததால் வென்றேன். ‘இப்போ பேசுகிறீர்கள். அப்போ பேசவில்லை’ என்று கேட்கிறீர்கள். அப்போதும் எனக்கு பயம் இருந்தது. அப்போ யாராவது பேசினீர்களா? இருக்கும்போது திருகு மதகு திறக்க மறந்ததே. அவரவர் வேலையை அவரவர் செய்ய விட்டிருந்தால் எல்லாம் ஒழுங்காக நடந்திருக்குமே. அப்போ நான் கேட்டேன். கேட்டதற்கு பல குரல்கள் மிரட்டலாகவும், கெஞ்சியும், பின்வாங்கிடுங்கன்னு. அப்போ வெள்ளத்தையும் பின்வாங்கிடுங்கன்னு சொன்னேன். அதெல்லாம் பத்திரிகைகளில் வரவில்லை. இனிமேல் வரும். எங்கோ ஒரு விவசாயி எங்கள் மனதில் புரட்சி விதையை விதைத்திருக்கிறான் என்ற நம்பிக்கையோடு இந்தக் கலந்துரையாடலை நிறைவு செய்கிறேன்.

மணல் போய் குப்பைகள் சேருகிறது

குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ‘‘தூர்வாரப்படவில்லை என்பதை மறுக்கிறேன். ஆறுகளை, ஏரிகளை, குளங்களை, வாய்க்கால்களை கிணறுகளைத்தான் தூர்வாரவில்லை. கடலூரில் இருந்து திருச்சி வரை அகண்ட காவிரியின் அத்தனை மணல் பகுதிகளையும் தூர்வாரியிருக்கிறார்கள். கரூரில் தினமும் 10 ஆயிரம் லாரிகளுக்கு மேல் மணல் எடுத்து அனுப்பப்படுகிறது. அது, தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கொடுக்கக்கூடாது என்று சொல்லும் கர்நாடகாவுக்குப் போகிறது. முல்லை பெரியாறு அணையின் உயரத்தை ஒரு அடி உயர்த்தினால் போராடும் கேரளாவுக்குப் போகிறது. அந்த லாரிகள் திரும்ப வரும்போது மருத்துவக் கழிவுகள், கோழிக்கறி கழிவுகளை இங்கு கொண்டுவருகின்றன. தமிழகம் குப்பைத் தொட்டியாக மாற்றப்படுகிறது. காவிரி கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது. மணலே கிடையாது. எத்தனை அடி ஆழத்துக்கு மணல் எடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அதைவிட 100 மடங்கு ஆழத்துக்கு மணல் எடுக்கிறார்கள். புதுச்சேரியில் திரிபூவனி ஏரி என்ற ஏரி உள்ளது. சோழர்காலத்தில் மதுராந்தகப்பேர் ஏரி என அழைக்கப்பட்டது. அதை 12-ம் நூற்றாண்டில் கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னன் தூர்வாரி, அழகாக கரையெடுத்து காவல்தெய்வமாக விநாயகர் கோயிலையும் வைத்ததாக கல்வெட்டு கூறுகிறது. அந்த ஏரியை மிக அதிகமான ஆழத்துக்கு தூர்வாரியிருக்கிறான் அந்த மன்னன். இப்போது காவிரி ஆற்றுப்பகுதியை மிகப்பெரிய ஆழத்துக்கு மணலை அள்ளி தூர்வாரியிருக்கிறார்கள்’’ என்றார்.

SCROLL FOR NEXT