கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு முன்நடந்த கொடிய தீ விபத்தில், தங்கள் செல்லக் குழந்தைகளை இழந்த வேதனையில் நீதி கேட்டு நீண்ட போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், தீர்ப்புக்காக 10 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். இந்த வழக்கின் தீர்ப்பு, தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை அறிவிக்கப்படவுள்ளது.
தீர்ப்புகுறித்த எதிர்பார்ப்பில் இருக்கும் மக்கள், இதுகுறித்து என்ன சொல்கிறார்கள்?
மு.அ.பாரதி, வழக்கறிஞர், கும்பகோணம்
வழக்கின் தாமதத்தைச் சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றம் கண்டனம் செய்த பிறகுதான் வழக்கு விசாரணையே தீவிரமடைந்திருக்கிறது என்பது வெட்கக்கேடு. நீதித் துறையின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கையை உறுதிசெய்ய வேண்டுமென்றால், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை வழங்க வேண் டும். பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கும், விபத்தில் உயிர்பிழைத்துத் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கும் உரிய நிவாரணம் அறிவிக்கப்பட வேண்டும்.
சற்குணம், குடும்பத் தலைவி, தஞ்சை
அந்தக் கொடூர நிகழ்வை இப்போது நினைத் தாலும் உடல் பதறுகிறது. கல்வித் துறை அதிகாரிகள் கண்டிப்புடன் இருந்திருந்தால் அதைத் தடுத்திருக்க முடியும். இந்த வழக்கின் தீர்ப்பு, கும்பகோணம் பள்ளி நிர்வாகிகள், அரசு அலுவலர்களுக்குத் தண்டனை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. விதிகளை மீறிச் செயல்படும் பள்ளிகள் அனைத்தையும் மூடும் வகையிலும், முறையான கல்விக் கூடங்களை மட்டுமே செயல்பட அனுமதிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு தாயாக எனது எதிர்பார்ப்பு.
காளியப்பன், மாநில இணைச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்
இந்த விபத்துகுறித்து விசாரித்த நீதிபதி சம்பத், விதிமீறல்கள்தான் இதற்குக் காரணம், நிர்வாகம்தான் பொறுப்பு என அறிக்கை அளித்தார். ஆனால், இன்று வரை ஏராளமான பள்ளிக் குழந்தைகள் விதிமீறல், அலட்சியம், பொறுப்பின்மை காரணமாக அன்றாடம் பலியாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. அளிக்கப்படும் தண்டனை பிறருக்குப் பாடமாக இருக்க வேண்டும்.
என். குணசேகரன், அரசுப் பள்ளி ஆசிரியர், ஒரத்தநாடு
94 குழந்தைகளைப் பலிகொடுத்தது, மறக்க முடியாத, அவமானகரமான நிகழ்வு. நாம் அனைவரும், குறிப்பாக ஆசிரியர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்று. அரசு, சட்டம், அதிகார வர்க்கம் மற்றும் ஆட்சியாளர்கள் மட்டுமே குழந்தைகளுக்குப் பாதுகாப்பைத் தந்துவிடுவார்கள் என்று நம்புவதும் ஒரு வகை மூடநம்பிக்கை. மாவட்டம்தோறும் கல்வியாளர்கள், சமூக அக்கறை கொண்டவர்களை உள்ளடக்கிய குழுக்களை அமைத்து, அந்தக் குழுக்களின் அறிக்கையைப் பொறுத்தே ஒரு பள்ளி, கல்வி நிறுவனம் இயங்க முடியும் என்ற நிலை உருவாகும்போது மட்டுமே கல்வியும் கல்விக்கான இடமும் பாதுகாப்பானதாக இருக்கும்.
எம். கண்ணன், ஆட்டோ ஓட்டுநர், தஞ்சை
அதிகாரிகளின் மெத்தனத்தால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நீதித் துறையும் அரசும் இதைக் கவனத்தில் கொண்டு, மறுபடியும் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி களையும் ஆய்வுசெய்து, எதிர்காலத்தில் எந்தப் பள்ளியிலும் இதுபோல நடக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பள்ளிகள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, மகிழ்ச்சி தரும் கல்விச் சூழலை உருவாக்கும் வகையிலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
- தொகுப்பு: சி. கதிரவன், தொடர்புக்கு: kadhiravan.c@thehindutamil.co.in