சிறப்புக் கட்டுரைகள்

இன்ஃப்ளூயன்சர் 2 | அவர்கள் என்ன பேசுகிறார்கள்..?

இந்து குணசேகர்

"தற்பெருமைக்காரர்களுக்கு மனிதர்கள் எல்லோரும் ரசிகர்கள்..!" - குட்டி இளவரசன் என்ற நாவலில் பிரெஞ்சு எழுத்தாளர் அந்துவான்த் செந்த் எக்ச்பெரி குறிப்பிட்டிருந்த வார்த்தைகளை நீங்களும் படித்திருக்கக் கூடும்.

நாம் எல்லோருக்கும் இருப்பை நிரூபிக்க வேண்டிய தேவையும் கட்டாயமும் இருக்கிறது. இருப்பை வெளிப்படுத்தும் பின்னணியில்தான் இங்கு பிரபலத்தன்மையும் கிடைக்கிறது. இது எல்லா காலங்களிலும் நடந்தேறியிருக்கிறது. அந்த வகையில் பிரபலத்தன்மைக்கான உச்சக்கட்ட போட்டித்தான் இன்ஃப்ளூயன்சர்கள் உலகில் நடந்துக் கொண்டிருக்கிறது.

சமூக ஊடகங்களை பொறுத்தவரை, என் பார்வையில் மூன்று வகையான உலகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.முதலாவது, இன்ஃப்ளூயன்சர் உலகம். எப்படியாவது தங்களுக்குகென்று ஒரு கூட்டத்தை உருவாக்கத் திட்டமிட்டுக் கொண்டிருப்பவர்கள். உதாரணத்துக்கு, நமது அலுவலகத்தை எடுத்து கொள்வோம். எப்போதும் சத்தமிட்டு கொண்டிருப்பவர்கள் பணிசார்ந்து பெரும்பாலும் திறன் பெற்றிருக்கமாட்டார்கள். ஆனால், அவர்களது அந்தப் பாசாங்குத்தனம் எதோ விதத்தில் அவர்களுக்கு கைதட்டும் கூட்டத்தையும் உயரத்தையும் பெற்று தந்திருக்கும். அதுவே, இன்ஃப்ளூயன்சர்கள் உலகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இரண்டாவது, மந்தை உலகம். சமூக வலைதளத்தில் அதிக எண்ணிக்கையில் இயங்கிக் கொண்டிருப்பது இந்தக் கூட்டம்தான். இவர்கள்தான் இன்ஃப்ளூயன்சர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ”நாங்க உங்களுக்கு இருக்கோம் ப்ரோ, நீங்க தைரியமாக வீடியோ பண்ணுங்க”, ”நாங்க சப்ஸ்க்ரைப் பண்ணிடுறோம்” என்று நம்பிக்கை குரல் எழுப்பி கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்திற்கு எப்போதும் ஒரு கட்டளைக் குரல் தேவைப்படுகிறது. இவர்களுக்கு ஒரு தலைவனோ, தலைவியோ தேவைப்படுகிறார்கள். அரசியல், சினிமா, கல்வி, மருத்துவம், ஆன்மிகம் என எல்லா துறைகளிலும் வழிநடத்தும் அந்தக் கட்டளை குரலை சுற்றிதான் இவர்களது வாழ்க்கை பயணிக்கிறது.

மூன்றாவது, அவதானிப்பாளர்கள் உலகம். இந்த அவதானிப்பாளர்கள் வட்டத்தில்தான் நானும் இருக்கிறேன். நீங்களும் இருக்கலாம். இந்த அவதானிபாளர்கள்தான் கூச்சலை எழுப்பிக் கொண்டிருக்கும் இன்ஃப்ளூயன்சர் உலகத்தையும், மந்தை உலகத்தையும் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள். சரி எது? தவறு எது? என்ற விவாதத்தையும் இரண்டு உலகத்திலும் எழுப்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதுமே சமூக வலைதளங்கள் இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கையில் இங்கு ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கும் இன்ஃப்ளூயன்சர்கள் எதைப் பேசுகிறார்கள், எதை நம் கண்முன் நிறுத்துகிறார்கள் என்பதை விவாதிப்பது அவசியமாகிறது. குறிப்பாக, மந்தை உலகத்தில் இருப்பவர்களுக்கு இதை வெளிச்சமிட்டு காட்டுவது காலத்தின் தேவையாக இருக்கிறது. ஏனெனில், மந்தை உலகத்தின் நம்பிக்கையைத்தான் இன்ஃப்ளூயன்சர்களின் முதலீடு.

மிஸ்டர் அரை டிகிரி: உங்களுக்கு உள்ளூர் முதல் உலகக் கதைகள் பேசும் ஓர் இன்ஃப்ளூயன்சரைத் தெரிந்திருக்கும். “செயற்கை நுண்ணறிவு இதைத்தான் செய்யப் போகிறது, உலகின் மோசமான கொலை இதுதான், மோடி ஏன் சீனாவிடம் அமைதியாக இருக்கிறார் தெரியுமா?” என பல கதைகளை கூறுவார். கதை சொல்லும்போது அவரது பேச்சும், நடையும் சுவாரசியமாகவே இருப்பதால் மக்களால் கவனிக்கப்பட்டார். என்னதான் கதைகளை கூறினாலும் அரசியல் சார்ந்த தகவல்களை மக்களிடம் கூறுவதில் அவர் தொடர்ந்து தவறிழைத்துக் கொண்டிருந்தார். குறிப்பாக, உலக அரசியல் குறித்து பேசும்போதெல்லாம் 360 டிகிரியில் அலசாமல் அரை டிகிரியில் நுனிபுல் மேய்ந்து அவர் நிகழ்த்தும் உரை, முழு வரலாற்றை தெரிந்தவர்களுக்கு நிச்சயம் ஒவ்வாமையை தரக் கூடியவை.

ஆனால், அந்த நபரோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் அன்றைய வாரத்தில் எது சர்ச்சையாக பேசப்பட்டதோ அதனை தலைப்பாக்கி சப்ஸ்க்ரைபரை ஏற்றுவதில் தீவிரமாக இருப்பார். அவர் பேச்சில் உள்ள தவறை சுட்டிக் காட்டும்பட்சத்தில், சமூக வலைதளங்களில் “நானும் தமிழன்”, “வாழ்க தமிழ்” என்ற இனிப்பு வார்த்தைகளை வீசி மந்தை உலகத்திடமிருந்து லைக்குகள் பெற்றுவிடுவார். லைக்குகளை அள்ளி வீசிய மந்தை உலகத்தை சேர்ந்தவர்களும், ‘நமது தலைவரே கூறிவிட்டார் இனி மாற்றுக் கருத்து ஏது?’ என்று எதனையும் அலசி ஆராய்யாமல் அதனை தனது சகாக்களிடம் பகிர்வார்கள். இவ்வாறு அவர் கூறிய பிழைகள் தொடர்ந்து பரப்பப்பட்டு கொண்டிருக்கும்.

ஐந்து பத்திக்கு மேல் சென்றால், ஒரு கட்டுரையை படிப்பதில் நம்மில் பலருக்கு அயர்ச்சி ஏற்படுகிறது. தீவிர தொழில் நுட்ப வளர்ச்சி நம்மை இந்தப் புள்ளியில் கொண்டு வந்திருக்கிறது. ஆனால், நாம் ஓர் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். நம்மிடம் தேடுதல் குறைந்துள்ளது. சமூகமாகவேசில ஆண்டுகளாக நம்மிடம் தேக்கம் நிலை நிலவுகிறது. தத்துவம், அரசியல், கலை, இலக்கியம், ஆன்மிகம், உறவுகள் சார்ந்து நம்மிடம் நிகழ்காலமும் இல்லை, எதிர்காலமும் இல்லை. நாம் இறந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு சமூகம் சார்ந்த அறத் தேடல்கள் இல்லாத நிலையில், மாபெரும் வெற்றிடம் உருவாகிறது. இந்த வெற்றிடத்தைதான் சில போலிகளும் ஆக்கிரமிக்கின்றனர்.

போலிகள்: சித்த மருத்துவ ஆலோசனை கூறுவதாக தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் தோன்றி பிரபலமடைந்து, பின் இன்ஃப்ளூயன்சராக மாறி, போலி அறிவியல்களை முன் வைத்து சர்ச்சையில் சிக்கிய மருத்துவரின் சமீபத்திய ரீல்ஸை பார்க்க நேரிட்டது. அவர் உடற்பயிற்சிகள் உட்பட தன் அன்றாட காலை நிகழ்வுகளை ரீல்ஸ்காக வீடியோ பதிவு செய்திருந்தார். அவரின் ரீல்ஸ் பதிவுக்கு கீழே கமெண்ட் பாக்ஸில் ‘யோகா கற்றுக் கொடுங்கள், உடற்பயிற்சி சொல்லி கொடுங்கள் என்று பலரும் ஆலோசனை கேட்டிருந்தனர். அந்த 30 நொடி ரீல்ஸ் அவரை உடற்பயிற்சி ஆசானாக பலரை ஏற்க செய்துவிட்டது. இந்த ஏற்பு மனநிலைதான் எனக்கு சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது.

உடல் எடை குறைத்தல் என்பது ஒரு நீண்ட பயணம் என்பது அதில் சாதித்த வெற்றியாளர்களுக்கு தெரியும். ஆனால் மக்களோ ‘ஒரு நாளில் 20 கிலோ குறைப்பது எப்படி?’ என தவறாக வழி நடத்தும் இன்ஃப்ளூயன்சர்களிடம் பெரும்பாலும் பணத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னொருபுறம், வீட்டிலே பிரசவம் பார்ப்பது எப்படி போன்ற ஆபத்தான பயிற்சிகளையும் சிலர் சமூக வலைதளங்களில் குழு அமைத்து வழி நடத்துக்கின்றனர். மரபு வழி மருத்துவமே சிறந்தது என்று போலி மருத்துவ பயிற்சிகளைக் கற்று கொடுத்து உயிர் பலிகளையும் வாங்கின்றனர். இவை எல்லாம் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று பொதுவெளியில் பதிவுகளாகவலம் வருவது கூடுதல் அச்சத்தை தருகின்றது.

ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்ற பிறகுதான் அதற்கான ஆலோசனைகளை வழங்க முடியும். ஆனால், இன்ஸ்டாகிராமில் எம்பிஏ என்று தங்கள் பயோவில் குறிப்பிட்டுள்ள இன்ஃப்ளூயன்சர்கள் மருத்துவக் குறிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ரேவந்த் ஹிமத்சிங்கா என்ற இன்ஃப்ளூயன்சர், ”பிரபல ஊட்டசத்து பானம் ஒன்றில் சர்க்கரை கூடுதலாக இருக்கிறது. பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை சர்க்கரைக்கு அடிமையாக்குகிறீர்கள்” என தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து வைரல் ஆனது. அவரை சமூக வலைதளத்தில் பின் தொடர்பவர்களும் அந்த பிராண்டை நோக்கி கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். இந்த நிலையில், ரேவந்த் உண்மைக்கு மாறான தகவல்களை கூறி இருக்கிறார் என அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதற்கு விளக்கம் அளிக்காமல் ரேவந்த்தோ தனது வீடியோ பதிவை நீக்கிவிட்டு அமைதியாகிவிட்டார். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இன்ஃப்ளூயன்சரும் சமீபத்தில் மோரிஸ் வாழைப்பழம், பூச்சிகளின் மரபணுக்களால் உருவாக்கப்பட்டது என்று கூறியதற்கு எதிர்வினைகள் வந்தது.

ஒரு பொருளை விளம்பரம் செய்பவர்களும் சரி, பொருளை விமர்சிப்பவர்களும் சரி இருவருமே கேள்விக்கு உட்பட்டவர்கள். தாங்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கான அதிகாரபூர்வ ஆதாரங்களை அளிக்க கடமைப்பட்டவர்கள் என்பதை அவர்களை பின்தொடர்பவர்கள் உணருவது இங்கு அவசியமாகிறது..

ஐடியல் என்னும் மாயை: கணவன் - மனைவி, காதலன் - காதலி உறவின் அடிப்படையிலான இன்ஃப்ளூயன்சர்கள்தான் சமூக வலைதளங்களில் அதிக அளவில் இயங்கி வருகின்றனர். உள்ளூரானாலும் சரி, அயல் நாட்டில் இருந்தாலும் சரி, இவர்களின் ஆரம்பக்கட்ட வீடியோக்கள் எல்லாம் பிறந்த வீடு, புகுந்த வீடு ஜோக்குகள், செல்லச் சண்டைகள், வெளியூர் பயணம், காதல் பரிசுகள்எ ன்ற டெம்ளெட்டுகளை சுற்றித்தான் பயணிக்கும்.

கணவன் - மனைவியாக, காதலன் காதலியாக முழுமையான வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை ரீல்ஸ், ஸ்டோரிகளில் அவர்களை பின்தொடர்பவர்களுக்கு திகட்டத் திகட்ட ஊட்டுகிறார்கள். பிராண்ட்டுகளும், விளம்பரங்களும் தங்களை நெருங்கும்வரை முகச் சுளிப்பிற்கான எல்லை எதுவோ, அதுவரை இவர்களது வீடியோ பயணம் இருக்கும்.

வருமானத்திற்கும், பிரபலமாவதற்கும் சந்தையில் தங்களை விலை பொருட்களாகி கொண்டுள்ளதால் சில இன்ஃப்ளூயன்சர்கள் தங்கள் வாழ்க்கையை பின்தொடர்பாளர்கள் கொண்டாடுவதற்கு அறம் மீறி அனைத்தையும் செய்கின்றனர். இதில் அவர்கள் வெற்றியும் பெறுகிறார்கள். ஒருகட்டத்தில் பின்தொடர்பாளர்கள், இன்ஃப்ளூயன்சர்களின் வாழ்க்கையை பிரதி எடுக்கத் தொடங்கும்போது இங்கு சுயத்தை இழந்தல் மெல்ல நிகழ்கிறது.

ஓர் அவதானிப்பாளராக எனக்கு, இன்ஃப்ளூயன்சர்களிடம் ஒரு கேள்வி இருக்கிறது... உறவுகளை இழந்து தனித்து இருப்பவர்களுக்கோ, குழந்தையில்லா பெற்றோர்களுக்கோ, தீவிர மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கோ உங்கள் பதிவுகள் மூலம் எதைக் கடத்துகிறீர்கள் என என்றாவது சித்தித்து உள்ளீர்களா? நீங்கள் கடத்திக் கொண்டிருப்பது ஒரு போலியான வாழ்க்கையை. உங்கள் வீடியோவில் ஓடும் நாடகங்களையும், அழகு மதிப்பீடுகளையும் உண்மையென நம்பி தீவிர பதற்றத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், தனிமையும் இன்றைய தலைமுறை எதிர் கொண்டிருக்கிறது. உங்கள் வெற்றிப் பயணத்தில் சுற்றி நின்று கைதட்டிக் கொண்டிருப்பவர்கள் தங்களது அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

இறுதியாக,பிராண்டுகள் அளிக்கும் பொருளை, உங்கள் மனைவிக்கு பரிசாக அளிக்கும் வீடியோவை ஸ்லோமோஷனில், ரொமான்டிக் பாடலுடன் நீங்கள் பதிவிடும் வீடியோக்களுக்கு கீழே பதிவிடப்படும் உடைந்த இதய ஹிமோஜிகளையும் கவனியுங்கள்.

பிரபல மனநல ஆய்வாளர் கார்ல் யாங், ”சமூகத்துக்கும் - தனிப்பட்ட உணர்வுகளுக்கும் இடையேயான சிக்கலான அமைப்புதான் தனிநபர்கள். இங்கு தனிநபர்கள், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகவோ அல்லது தங்களின் உண்மையான உணர்வுகளை மறைப்பதற்காகவோ முகமூடிகளை அணிந்து கொள்கிறார்கள்” என்கிறார். நமது இன்ஃப்ளூயன்சர்களும் இதைத்தான் செய்கிறார்கள். முக மூடிகளை கழட்டி ஆராய்வது நம்மிடம்தான் இருக்கிறது. ஆராய்வோம்.

| தொடர்ந்து பயணிப்போம்... |

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

SCROLL FOR NEXT